Tuesday, 20 January 2015

இன்றைய இராகம் பஹாடி:

அமைதி, சக்தி, சோகம், உணர்வுகளின் கலவை இந்த வார்த்தைகள் ஒன்றாக இணைந்தால் அது பஹாடியின் அழகை விளக்கும்.

பஹாடி, காஷ்மிரி இசையிலிருந்து வந்த ஒரு எளிமையான இராகம் ஆகும். இந்த இராகம் தும்ரி, கஜல், பஜன், பாடல்களில் மிகவும் பிரபலமானது. இது மலைவாழ்மக்களின் இராகம் ஆகும்.  அதற்கேற்றாற்போல் சில சமயங்களில் இதில் அமைந்த பாடல்கள்  எதிரொலியைப் பிரதிபலிக்கும். நேபாள இசையின் பெரும்பாலான பாடல்கள் இந்த இராகத்திலேயே அமைந்துள்ளன. 

இதை  பாடுவதற்கேற்ற நேரம்: இரவின் முதல் ஜாமம், வசந்த காலம், வசந்தகால மழை நேரங்கள், காற்றுடன் கூடிய மழைக் காலம் ஆகியவை.

இன்று இந்த இராகத்தில் அமைந்த ஒரு எம் எஸ் வி அவர்களின் பாடலைப் பார்ப்போம். "விழியே கதை எழுது" என்ற பாடல் - உரிமைக் குரல் என்ற படத்திலிருந்து. பாடலை இயற்றியவர் கண்ணதாசன். பாடியவர்கள் கே ஜே ஜேசுதாஸ் - பி சுசீலா ஆகியோர்.

"விழியே ....கதை எழுது.....கண்ணீரில் எழுதாதே ....
மஞ்சள் வானம் .......தென்றல் சாட்சி......உனக்காகவே நான்  வாழ்கிறேன்."
என்று தொகையறா  போல் பல்லவியை நிறுத்தி நிதானமாக, மெலிதான ஷெனாய், அக்கார்டியன் இசையுடன்  ஜேசுதாஸ் அவர்கள் ஆரம்பித்ததும், பி சுசீலா அதையே தொடர்ந்து பாட, நேரே சரணத்திற்கு போய் விடுகிறது பாடல்.

முதல் சரணத்திற்கு முன் அக்கார்டியன் இசை, சரணங்களுக்கு டோலக்கின் தாள ஒலி, ஊடே மெலிதான வயலின், அக்கார்டியனின் இசை என்று இனிமையாகப் பயணிக்கிறது பாடல். இரண்டாவது சரணத்திற்கு முன் அக்கார்டியனும் ஷெனாயும் கலந்த ஒரு மெலிதான இசையுடன் புல்லாங்குழலின் இனிய இசை, மூன்றாவது சரணத்துக்கு முன் அக்கார்டியன், பிறகு குழல், பின் ஷெனாய், அக்கார்டியன், ஷெனாய் என்று மாறி மாறி ஒரு இனிமையான முன்னிசையுடன் பாடல் மிக இனிமையாக இசையமைக்கப் பட்டிருக்கிறது. பாடலின் இனிமைக்கு, ஜேசுதாஸ், சுசீலா இருவரது குரல்களும் பெரிதும் துணை நிற்கின்றன. இந்தப் பாடலுக்கு எம் எஸ் வி  63 வகையான மெட்டுக்கள் போட்டதாகவும் அதில் முதல் மெட்டை எம் ஜி ஆர் தேர்ந்தெடுத்ததாகவும் செய்தி உண்டு. இந்தப் பாடலுக்கு பஹாடி இராகத்தில் இசையைமைக்க வேண்டும் என்று மன்னருக்கு  எவ்வாறு தோன்றிற்றோ! மிகவும் இனிமையான ஒரு காதல் டூயட் பாடல் இது. இந்த இராகத்தில் மெல்லிசை மன்னர்/கள் வேறு பாடல் ஏதாவது இசை வடித்திருக்கிறார்களா  என்று தெரியவில்லை. மேலும் இந்த இராகத்தில் அமைந்துள்ள மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களைப் பற்றி தெரிந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கவும்.

இந்த இராகத்தில் அமைந்த சில ஹிந்திப் பாடல்கள்:

1. கோரா காகஸ் தா ஏ மன் மேரா - ஆராதனா, கிஷோர்  குமார் - லதா, இசை எஸ் டி பர்மன்;
2. ஹவா மே உடுதா ஜாயே மோரே லால் துப்பட்டா - லதா மங்கேஷ்கர், பர்சாத் என்ற படத்தில் - இசை ஷங்கர் - ஜெய்கிஷன்.
3. ஆஜா ரே மேய்ன்  தொ பர்தேசி - மதுமதி, இசை - சலில் சௌதுரி
4.  சாதுவின் கா சாந்த்  ஹோ - ரஃபி,  படம் - சாதுவின் கா சாந்த், இசை - பாம்பே ரவி

பிறிதொரு நாள் இன்னொரு இராகத்துடன் சந்திப்போம்,
நன்றி! வணக்கம்.
ஜெய்ஹிந்த்!




No comments:

Post a Comment