Tuesday, 20 January 2015

இன்றைய இராகம் மாயாமாளவகௌளை:

மாயாமாளவகௌளை கர்நாடக இசையின் 15 வது மேளகர்த்தா இராகம் ஆகும். இது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம். எப்போதும் பாடத்தகுந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்கு பைரவ்  தாட் எனப் பெயர்.

மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகங்கள் இவை.

பரசு, சாவேரி, கௌளிபந்து, நாதநாமக்கிரியா, பௌளி, மலஹரி, கௌளை, ரேவகுப்தி, ஜகன்மோகினி, குர்ஜரி, மேச்சபௌளி, சிந்துராமக்கிரியா, பூரணபஞ்சமம், குண்டக்கிரியா, மேகரஞ்சனி, கௌரி, மித்திரகிரணி, லலிதகௌரி, கிருஷ்ணவேணி, நேப்பாளகௌள, பாஞ்சாலி, ருக்மாம்பரி, மதராங்கப்பிரியா, கோபிகாகுசும, தாரவம், கரக, பாவினி போன்றவை.

இது கற்றுக் கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் மிகவும் சுலபமான இராகம் ஆகும், அதனாலேயே கர்நாடக இசையில் ஆரம்பப் பாடல்கள் இந்த இராகத்திலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன.

இன்று இந்த இராகத்தில் அமைந்த விஸ்வநாதன்-ராமமுர்த்தி அவர்களின் பாடல் ஒன்றைப் பாப்போம். பாடல் - "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா", படம் - ஆலயமணி, பாடியவர்கள் - T M சௌந்திரராஜன், L R ஈஸ்வரி. பாடலை இயற்றியவர் - கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

L R ஈஸ்வரியின் அருமையான ஹம்மிங்குடன் துவங்கும் இந்தப் பாடல், சிதார், தபலா ஆகிய வாத்தியங்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதுஹம்மிங்கிலேயே இராகத்தின் பல்வேறு நிலைகளைக் கோடிட்டுக் காண்பித்திருப்பது மிகவும் அருமை. பல்லவி முடிந்து ஒவ்வொரு சரணத்தின் துவக்கத்திலேயும் மீண்டும் ஹம்மிங் ஒலிப்பது நம்மை வேறு ஒரு உலகத்திற்கே அழைத்து சென்று விடுகிறது. சரணங்களின் முடிவிலும், ஹம்மிங்குடன் முடிப்பதும் மிகவும் இனிமை. பாடலின் இறுதியில் பல்லவியைப் பாடி முடிதததும் ஹம்மிங்கை "" என்று ஒரே சொல்லில் நீட்டி முடித்திருப்பது மிகவும் இனிமை. பாடலின் வரிகளும் மிகவும் இனிமை. காதலியான மனைவியை காவிய நாயகிகளுடன் ஒப்பிட்டு வரிகள் அமைத்திருப்பது கவிஞருக்கே கைவந்த கலை. பாடகர்களும் தங்களது பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். இந்தப் பாடல் செவிக்கு ஒரு விருந்து.

மேலும் இந்த இராகத்தில், G ராமநாதன் அவர்களின் "நிலவே நீ இந்த தூது செல்லாயோ" - பட்டினத்தார் திரைப்படம், "அலைமகள் மலைமகள்" - MSV-TKR - நவராத்திரி,  "நீ நினைத்த நேரம் எல்லாம் வர வேண்டுமோ" - MSV - பெண்ணை  நம்புங்கள், "அழகான பொண்ணு நான்" - எஸ் தக்ஷிணாமூர்த்தி  - அலிபாபாவும் 40 திருடர்களும், "காதல் கவிதைகள் படித்திடும் நேரம்" - கோபுர வாசலிலே, "கண்ணின் மணியே கண்ணின் மணியே" -  மனதில் உறுதி வேண்டும், "குயிலைப் புடிச்சு கூண்டில் அடைச்சு" - சின்னத் தம்பி, "மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்" -  முதல் இரவு, "பூங்கதவே, தாள் திறவாய்" - நிழல்கள் போன்ற பாடல்கள் இளையராஜாவின் இசையிலும், "கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்" - டி ராஜேந்தர் - ஒரு தலை ராகம்ஆகிய பாடல்களும் உள்ளன. பட்டியல் பெரியதாக இருப்பதால் நான் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் .

ஹிந்தித் திரைப் பட பாடல்களில் இரண்டை  மட்டும் குறிப்பிடுகிறேன்.
சிதரோன் கி மெஹ்பில் - லதா மங்கேஷ்கர், கீதா தத், உரான்  கடோலா, நௌஷத் இசையில்;
அப்னா ஹை ஃபிர் பி அப்னா - ரஃபி, பாய் பாய், மதன் மோகன் இசையில்.

மீண்டும் ஒரு நாள் மற்றொரு இராகத்துடன் சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.

ஜெய்ஹிந்த்!

No comments:

Post a Comment