Saturday, 24 January 2015

இன்றைய இராகம் ஹரிகாம்போஜி:
ஹரிகாம்போதி அல்லது ஹரிகாம்போஜி கர் நாடக இசை முறையில் 28வது மேளகர்த்தா அல்லது பிறப்பு (ஜனக) இராகமாகும். இது பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 4 வது மேளம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண (எழுநிறைவற்ற) மேள பத்ததியில் இவ்விராகத்திற்கு அரிக்கேதாரகௌள என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் இதற்கு கமாஜ் என்று பெயர்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும்.
இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் வாசஸ்பதி ஆகும்.
பண்டைத்தமிழிசையில் சுத்த மேளம் ஹரிகாம்போஜி இராகமே. இது "செம்பாலைப் பண்" என்றழைக்கப்பட்டது.
இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக நடபைரவி, தீரசங்கராபரணம், கரகரப்பிரியா, ஹனுமத்தோடி, மேசகல்யாணி ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.

பாடுவதற்கேற்ற நேரம்: இரவின் 2 ஆவது ஜாமம். தும்ரியாக இருந்தால் முதல் ஜாமம்.

பாடுவதற்கேற்ற மனநிலைகள்: இளவயது சந்தோஷ நினைவுகள், நம்பிக்கை மற்றும் ஆசை தரும் நிறைவு.

ஹரிகாம்போதியின் ஜன்ய இராகங்கள்:

பகுதாரி, ஈசமனோகரி. கமாஸ். துவிஜாவந்தி, நாராயணகௌளை, சஹானா, சாயாதரங்கிணி, காம்போதி, காப்பிநாராயணி, நவரசகன்னட, செஞ்சுருட்டி, கேதாரகௌளை, யதுகுலகாம்போதி, நாட்டக்குறிஞ்சி, ரவிச்சந்திரிகா, சரஸ்வதிமனோகரி, சுத்ததரங்கிணி, சாமா, சுருட்டி, நாகஸ்வராவளி, குந்தளவராளி, மோகனம், உமாபரணம், ஹிந்துகன்னட, கோகிலத்வனி, கானவாரிதி, மாளவி,, கதாதரங்கிணி, பலஹம்ச, சாயாநாட்டை, சுபூஷணி, விவர்த்தனி, பிரதாபவராளி, ஹிந்துநாராயணி, உழைமாருதம், அம்போஜினி, ஹிந்தோளகாமினி, சாவித்திரி (இராகம்), வீணாவாதினி, ராகவினோதினி, தைவதச்சந்திரிகா, ஆன்தாளி போன்றவை.

இந்த இராகத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்த 0ரு பாடலை இன்று காண்போம்.

பாடல் "ஒரே பாடல் உன்னை அழைக்கும்" - எங்கிருந்தோ வந்தாள் என்ற படத்திலிருந்து. பாடியவர் -டி எம் சௌந்திரராஜன், இயற்றியவர் - கவியரசர்.

இந்தப் பாடல் தன காதலியின் திருமண வரவேற்பில் காதலன் தங்களது கடந்த கால காதல் வாழ்வை நினைத்து பாடும் பாடல்.  . இரக்க பாவம் நிறைந்த பாடல்.

டி எம் சௌந்தரராஜனின் நெஞ்சை உருக்கும் ஹம்மிங்குடன் துவங்கும் இந்தப் பாடல் பல்லவி முடிந்ததும் சரணத்திற்கு முன் வயலின்களின் அணிவகுப்பு, அத்துடன் கிடார் strings, மீண்டும் அத்துடன் சேரும் வயலின், இவற்றிற்கு லீட் தருவது போல் குழலின் இசை என ஒரு உருக்கமான இசைக்கோர்வையுடன் பயணிக்கிறது இடையிசை. சரணங்களுக்கு ஊடே மெல்லிய ஷெனாய் இசைக்கப்பட்டிருப்பது பாடலின் சூழ்நிலைக்கு மேலும் வலுவூட்டுகிறது. சரணங்களின் முடிவில் பாடகர் கடைசி வரியின் முடிவில் இழுத்து நிறுத்துவது, அத்துடன் ஷெனாய் இழைவது என்று ஒரு உருக்கமான இசை விருந்தை அளித்திருக்கிறார் மன்னர்.

பாசமலர் என்ற படத்தில் வரும் " மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்"  என்ற பாடல் இதன் சாயலில் அமைக்கப் பட்டுள்ளது. புதிய பறவை படத்தில் வரும் "உன்னை ஒன்று கேட்பேன்" - சுமதி என் சுந்தரி படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ", தங்கப் பதக்கம் படத்தில் வரும் "சுமைதாங்கி சாய்ந்தால்",  பெண்ணை நம்புங்கள் படத்தில் வரும் "நீ நினைத்த நேரம் எல்லாம் வர வேண்டுமோ"; பாபு படத்தில் "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே", குழந்தையும் தெய்வமும் படத்தில் "அன்புள்ள மான்விழியே"; வறுமையின் நிறம் படத்தில் வரும் "சிப்பி இருக்குது  முத்தும் இருக்குது"; அவள் ஒரு தொடர்கதை படத்தில் "கடவுள் அமைத்து வைத்த மேடை" ஆகிய பாடல்கள் எம் எஸ் வி இசையில் அமைந்துள்ளன.

இந்த இராகத்தில் அமைந்த மேலும் சில பாடல்கள்:

ஒருநாள் ஒரு பொழுதாகிலும் - திருநீலகண்டர் - பாபநாசம் சிவன்
சிதம்பர நாதா திருவருள் தா தா - திருநீலகண்டர் - பாபநாசம் சிவன்
ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு - ஏணிப்படிகள் - கே வி எம்
என்னவென்று சொல்வதம்மா -ராஜகுமாரன் - இளையராஜா
கண்ணுபடப் போகுதைய்யா - சின்னக் கவுண்டர் - இளையராஜா
நானே நானா யாரோதானா - அழகே உன்னை ஆராதிக்கிறேன் - இளையராஜா
ஒருநாள் ஒரு கனவு - கண்ணுக்குள் நிலவு - இளையராஜா
பட்டுவண்ண சேலைக்காரி - எங்கேயோ கேட்ட குரல் - இளையராஜா
பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான் - வருஷம் 16 - இளையராஜா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - இதயம் - இளையராஜா
சாந்துப் பொட்டு, சந்தனப் பொட்டு - தேவர்  மகன் - இளையராஜா
கண்ணுக்கு மை அழகு - புதிய முகம் - ஏ ஆர் ரஹ்மான்
உயிரே உயிரே (பல்லவி மட்டும்) - பாம்பே - ஏ ஆர் ரஹ்மான்

நன்றி! மீண்டும் ஒரு இராகத்துடன் வேறொரு நாள் சந்திப்போம். வணக்கம்.
ஜெய்ஹிந்த்!

No comments:

Post a Comment