தமிழ்த் திரையுலகின் (சிந்தனை)
சிற்பிகள்: 6
முத்தையா என்ற பெயருடைய கண்ணதாசன்.
பத்திரிகையில் வேலைக்கு சேரும்போது என்ன பெயரில்
எழுதுகிறாய் என்று கேட்டதற்கு, கண்ணதாசன் என்று சொன்னார். அதுவே நிலையாய் ஆயிற்று.
ஆரம்பத்தில் அண்ணாதுரையின் மீது கொண்ட ஈடுபாட்டினால் திராவிடக் கட்சிகளில் இருந்தார்.
பின் அவர்களது கட்சிக்குள் சில தலைவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று வாழ்வது
பிடிக்காமல் 1961 ல் திமுகவை விட்டு வெளியேறினார். ஈ வி கே சம்பத் துவங்கிய கட்சியில்
சில காலம் இருந்தார். பிறகு காமராஜரின் அப்பழுக்கற்ற அரசியில் வாழ்க்கையினால் கவரப்
பட்டு காங்கிரசில் இணைந்தார். இவற்றில் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் இவர் அதற்கேற்ப பாடல்கள்
திரைப் படங்களில் எழுதி குறிப்பிட்ட தலைவர்களுக்கு புரிய வைப்பார். உதாரணம் - யாரை எங்கே வைப்பது என்று
- சிவாஜி கணேசனைப் புறக்கணித்து எம்ஜியாரை கட்சிக்குள் கொண்டு வந்த போது, அண்ணன் காட்டிய
வழியம்மா - திமுகவை விட்டு வெளியேறும்போது, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - காமராஜருடன்
இணைய விரும்பியபோது (பாடல் விடு தூது!) நலம்தானா - முதல்வர் அண்ணாதுரை உடல்நிலை சரியில்லாதபோது,
மற்றும் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களின் போது எழுதிய பாடல்கள்.
நினைத்த மாத்திரத்தில் பாடல் எழுதும்
ஆற்றல் கொண்டவர், மூடப்பட்ட ரயில்வே கேட் திறப்பதற்குள் ஒரு பாடலை எழுதியவர். மேடையில் பாலசந்தர் பொது மக்கள்
முன்னிலயில் தான் 2 மாத காலமாக ஒரு பாடலுக்காக
இவர்களிடம் அலைகிறேன் என்று கூறியவுடன், எம்
எஸ் வி மெட்டுப் போட, உடனுக்குடன் பாடல் எழுதி
தந்தவர். - பாடல் ஞாயிறு உண்டு, திங்கள் உண்டு - படம், அவர்கள். ஏழு ஸ்வரங்களுக்குள் பாடலுக்கு சிறிது அதிக சரணங்கள் எழுதித்தரும்படியும்
அதில் நான்கை தான் தேர்வு செய்து கொள்கிறேன் என்று பாலசந்தர் கூற, 64 சரணங்கள் எழுதித்
தள்ளி விட்டார், பாலசந்தர் திக்கு முக்காடி இந்த 4 சரணங்களை எடுத்து அவற்றில் ஒன்றை
பல்லவியாக வைத்துக் கொண்டார். கண்ணன் மீது கொண்ட காதலால் நிறைய திரைப் படங்களில் கண்ணன் மேல் பாடல்கள் எழுதியுள்ளார்,
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக கிருஷ்ண கானம் என்ற ஒரு தனிப் பாடல் தொகுப்பிற்கு இவர்
பாடல்கள் எழுதித்தர, எம் எஸ் வி அவற்றிற்கு இசையமைத்து வெளியிட்டார்.
தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்கள்
நிறைய எழுதியுள்ளார்.
அவற்றில் ஒன்றான மயக்கமா கலக்கமா
என்ற பாடலில் வரும் உனக்கும் கீழே உள்ளவர்
கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற வரிகளைக் கேட்ட கவிஞர் வாலி திரைப் படங்களில் எழுத வாய்ப்புகள் கிடைக்காமல் சொந்த ஊருக்கு
திரும்பி செல்ல எண்ணியிருந்தவர், புதியதொரு உத்வேகம் பெற்று, திரைப்படங்களுக்கு பாடல்
எழுதுவதில் தீவிரம் காட்டி பின்பு இவருக்கு இணையான கவிஞர் ஆனார். கவிஞர் வாலி, கவியரசருக்கு ஒரு ஏகலைவன். (ஆனால்
இவர் அவரிடம் கட்டை விரலைக் கேட்கவில்லை)
கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின்
பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
இவரது பாடல்களில் பாரதியின் தாக்கம் தெரிவதை நன்கு உணரலாம். இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல்
ஏசுகாவியம் பாடியவர். பஜகோவிந்தத்திற்க்கு
உரை எழுத சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுக் கொண்டு பின்னர் உரை எழுதியவர். அந்த அளவு
ஒன்றை நன்கு அறிந்த பின்னரே எழுத வேண்டும்
என்பது இவரது கொள்கை.
மனதில் உள்ளதை வெளிப்படையாக கூற
என்றுமே தயங்கியதில்லை, தம்மை இகழ்ந்தவர்களுக்கும் கவிதையிலேயே பதில் தருவார். நடிப்பதில்
மிகுந்த ஆர்வம் கொண்டவர். நாம் பாரதியைப் பார்த்ததில்லை,
ஆனால் 20ஆம் நூற்றாண்டின் மகா கவியான கண்ணதாசன்
காலத்தில் வாழ்ந்தது நமக்கு பெருமை.
நான் இவரைப் பற்றி சிறிதளவே எழுதியுள்ளேன்,
இவரைப் பற்றி இன்னும் எழுதவேண்டுமென்றால் இவர் ஏழு ஸ்வரங்களுக்கு, பாடலுக்கு எழுதியது
போல், 64 பத்திகள் எழுதினாலும் போதாது. நன்றி! வணக்கம்!

No comments:
Post a Comment