கீரவாணி என்பது கர்நாடக இசையில்
21வது மேளகர்த்தா இராகம். வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தில் 3வது மேளம். அசம்பூர்ண
மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பது
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி
ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1)
, காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக
மாற்றினால் இராகம் சிம்மேந்திர மத்திமம் ஆகும்.
இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம்.
இதன் மத்திமம், பஞ்சமம், தைவதம் முறையே கிரக பேதத்தின் வழியாக ஹேமவதி (58), வகுளாபரணம்
(14), கோசலம் (71) இராகங்கள் கொடுக்கும்.
மேல்நாட்டு இசையில் ஹார்மோனிக்
மைனர் (Harmonic Minor Scale) என்பது கீரவாணி இராகமே.
பாடுவதற்கேற்ற நேரம்: இரவின் முதல்
ஜாமம் (6 - 9)
பாடுவதற்கேற்ற மன நிலைகள்: சிருங்காரம், விரகம், பழைய (மலரும்)
நினைவுகள்.
இன்று இந்த இராகத்தில் அமைந்த
மெல்லிசை மன்னர்களின் "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற பாடல், நெஞ்சம் மறப்பதில்லை
என்ற படத்தில் இடம் பெற்றது, பற்றி பார்ப்போம்.
இந்தப் பாடல் காதலனை எண்ணி காதலி
பாடுவது. சிருங்கார ரசத்தில் அமைந்தது. இது ஒரு haunting melody ரகத்தை சேர்ந்தது.
மனதை சுண்டும் ஒரு புல்லாங்குழல்
இசையுடன் வயலினும் சேர்ந்த முன்னிசை முடிந்ததும்
"நெஞ்சம் மறப்பதில்லை...ய் ..ய் ....ய்ய் , அது நினைவை இழப்பதில்லை" என்று
சுசீலா துவங்கும்போதே பாடலின் சுவை துவங்கி விடுகிறது.
"காலங்கள்தோறும் உன்மடி தேடி
கலங்கும் என் மனமே,
வரும் காற்றினிலும் பெரும் கனவினிலும்
நான் காண்பது உன்முகமே" என்ற வரிகளில் காதலின் தேடல் நன்கு தெரிகிறது.
"தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்,
ஒரு போதும் இல்லை, உன் தோற்ற நிலை கண்ணில் தூக்கமும் பிடிக்கவில்லை" என்ற இடத்தில், காதல் விரகம்
வெளிப்படுமாறு வரிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன, சரணத்திற்கு முன் வரும் புல்லாங்குழலுடன்
கூடிய சிதார் இடையிசை மனதை மயக்குவதாக உள்ளது.
இந்தப் பாடல் இசையமைக்க 6 மாத
காலம் பிடித்தது . பல மெட்டுகள் போடப்பட்டும் இயக்குனருக்கு திருப்தி வரவில்லை. அவர்
விஸ்வநாதனிடம், விட்டு விடுங்கள், நான் இந்த சூழ்நிலைக்கு வேறு சூழ்நிலை மாற்றி விடுகிறேன்
என்று கூறியதும், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு 2 நாள் அவகாசம் கேட்டு, கடற்கரையில்
அமர்ந்து சிந்தித்தபோது, கடலலையின் ஒலியால் ஈர்க்கப்பட்டு இந்த மெட்டு அமைக்கப்பட்டது.
இயக்குனருக்கும் எதிர்பார்ப்பை விட மேலான திருப்தியைத்
தந்தது இந்த மெட்டு . (இயக்குனர் ஸ்ரீதர் கல்கியில் எழுதிய "திரும்பிப் பார்க்கிறேன்"
என்ற தொடரில் அவர் கூறியது). 6 மாத கால கடின உழைப்பு வீண் போகவில்லை. அனைவரது மனத்தையும்
இன்றும் சுண்டியிழுக்கும் மிகச் சிறந்த பாடலாக இது அமைந்து விட்டது.
இந்த இராகத்தில் அமைந்த இன்னும்
சில பாடல்கள்:
* கண்ணிரண்டும் மின்ன மின்ன - பச்சை விளக்கு - எம் எஸ் வி - ராமமுர்த்தி
* மன்னவனே அழலாமா - கற்பகம் - எம் எஸ் வி - டி கே
ஆர்
" பாட்டு பாடவா பார்த்து
பேசவா" - தேன் நிலவு - ஏ எம் ராஜா
" போவோமா ஊர்கோலம் - சின்னத்தம்பி
- இளையராஜா
" என்னைத் தாலாட்ட வருவாளோ - காதலுக்கு மரியாதை - இளையராஜா
" நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று
- பொன்னுமணி - இளையராஜா
" கீரவாணி - பாடும் பறவைகள்
- இளையராஜா
" மாங்குயிலே பூங்குயிலே
- கரகாட்டக்காரன் - இளையராஜா
* ராஜ ராஜ சோழன் நான் - ரெட்டை வால் குருவி - இளையராஜா
* எங்கே எனது கவிதை - கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
- ஏ ஆர் ரஹ்மான்
இந்த இராகத்தில் அமைந்த ஹிந்தித்
திரப் படப் பாடல்கள் இரண்டு:
தும் பின் ஜாவூன் கஹான் - ரஃபி, கிஷோர் குமார் இருவரும் தனித் தனியாக
- பியார் கா மௌசம் - ஆர் டி பர்மன்
மேரி பிகி பிகி சி - கிஷோர் குமார்
- அனாமிகா - ஆர் டி பர்மன்

No comments:
Post a Comment