சக்ரவாகம் கர் நாடக இசையின்
16 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் 16 வது இராகத்திற்குத் தோயவேகவாகினி
என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அக்னி என்றழைக்கப்படும் 3 வது வட்டத்தில் (சக்கரத்தில்)
4 வது இராகம். இதற்கு இணையாக ஹிந்துஸ்தானி இசையில் ஆஹிர் பைரவி இராகத்தை கூறலாம்.
தியாகராஜர் இந்த இராகத்தை வழக்கிற்கு
கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகா வைத்தியநாத சிவன் இந்த
இராகத்தைத் தன் 12 வது வயதில் சிறப்பாகப் பாடியதால் "மகா" என்ற புனைபெயர்
பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக
மாற்றினால் இராகம் ராமப்பிரியா (52) ஆகும். இதன் மத்திமத்தை ஷட்ஜமாக வைத்தால் சரசாங்கி
(27) கிடைக்கும், நிஷாதத்தை ஷட்ஜ்மாக வைத்தால் தர்மவதி (59) கிடைக்கும்
சக்கரவாகத்தின் ஜன்ய இராகங்கள்
இவை.
கலாவதி இராகம், கனிதவினோதினி,
காமினிப்பிரியா, கோகிலம், சசிப்பிரகாசி, சுத்தஸ்யாமள, திருநேத்ரப்பிரியா, தேக்களி,
நபோமார்க்கினி, நாராயணி, நாளிகம், பிந்துமாலினி, பிரவர்த்தி, பின்னமத்திமம், மலயமாருதம்,
ரஸிகரஞ்சனி, வலஜி, வீணாதாரி, வேகவாகினி, ஸூஜாஹூலி.
இன்று இந்த இராகத்தில் மெல்லிசை
மன்னர்கள் இசையில் அமைந்த ஒரு பாடலைப் பாப்போம்.
கர்ணன் படத்தில் இடம்பெற்ற
"உள்ளத்தில் நல்ல உள்ளம்" என்ற பாடல் சக்கரவாக இராகத்தில் அமைக்கப் பட்டது.
போர்க்களத்தில் கர்ணன் அம்புகளால்
துளைக்கப்பட்டு மரணத்தின் வாயிலில் இருக்கும் நிலையில், அவனது உயிரைத் தாங்கிப் பிடித்திருக்கும்
தர்ம தேவதையின் பிடியிலிருந்து அவனை விடுவித்து வானுலகம் அனுப்ப பகவான் கண்ணன் ஒரு
கிழ அந்தண வேடமிட்டு அவனிடம் அவனின் தர்மத்தின்
பலன்களை யாசமாகப் பெறும் காட்சி.
நெஞ்சைப் பிழியும் ஷெனாய் முன்னிசையுடன்
பாடல் துவங்குகிறது. கூடவே சாரங்கியும் இழையும். மிகவும் உருக்கமான இசை. தாள வாத்தியமாக
நாக்ராவை கையாண்டிருப்பது பாடலின் இறுக்கமான
சூழ்நிலைக்கு மேலும் வலு சேர்க்கிறது. சரணங்களுக்கு இடையில் சிதாரை குழலுடன் இசைக்க
செய்திருப்பது மிகவும் அருமை. பாடல்வரிகளும், கர்ணனின் புகழைப் பாடுவதாகவும், தனது
செய்கைக்கு கண்ணன் வருந்தி கர்ணனிடம் மன்னிப்பு கேட்பது போன்றும் அமைந்திருப்பது காட்சிக்கும்
கதைக்கும் வலுவூட்டுகிறது. இந்தப் பாடலுக்கு டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
குரல் மிகவும் பொருத்தமாகவும், உருக்கத்தை நன்கு வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
பாடல் முடிந்து வெகு நேரம் ஆகியும் நமது இதயங்கள் கனத்துப் போயிருப்பதற்கு காரணம் இசையின் தாக்கமே. இன்றும் பல இசையமைப்பாளர்களும்
வியந்து பாராட்டும் பாடல் இது.
இந்த இராகத்தில அமைந்தமேலும் சில
பாடல்கள்.
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத்
தேடு - பாட்டும் பரதமும்- இசை எம் எஸ் வி
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சையிடுங்கள்
- கங்கா கௌரி - இசை - எம் எஸ் வி
சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு
- சொர்க்கம் நரகம் - சங்கர் கணேஷ்
நீ பாதி நான் பாதி கண்ணே - கேளடி
கண்மணி - இளையராஜா
பூஜைக்காக வாடும் பூவை - காதல்
ஓவியம் - இளையராஜா
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
- தூண்டில் மீன் - வி குமார்
ஆஹிர் பைரவியில் அமைந்த சில ஹிந்திப்
பாடல்கள்:
பூச்சோனா கைசே - மன்னா
டே - மேரி சூர் தேரி ஆங்கேன் - இசை - எஸ் டி பர்மன்
தீரே தீரே சுபா ஹுயி ஹை - ஜேசுதாஸ்
- ஹைசியாத் - பப்பி லஹரி
மேரி கலியான் சே லோகோங்கி யாரி
பாத் கி - மகேந்திர கபூர் - கல்யாண்ஜி ஆனந்த்ஜி - தர்மாத்மா
மற்றொரு நாள் இன்னொரு இராகத்துடன்
சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.
ஜெய்ஹிந்த்!

No comments:
Post a Comment