Saturday, 24 January 2015

இன்றைய இராகம் ஹரிகாம்போஜி:
ஹரிகாம்போதி அல்லது ஹரிகாம்போஜி கர் நாடக இசை முறையில் 28வது மேளகர்த்தா அல்லது பிறப்பு (ஜனக) இராகமாகும். இது பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 4 வது மேளம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண (எழுநிறைவற்ற) மேள பத்ததியில் இவ்விராகத்திற்கு அரிக்கேதாரகௌள என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் இதற்கு கமாஜ் என்று பெயர்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும்.
இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் வாசஸ்பதி ஆகும்.
பண்டைத்தமிழிசையில் சுத்த மேளம் ஹரிகாம்போஜி இராகமே. இது "செம்பாலைப் பண்" என்றழைக்கப்பட்டது.
இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக நடபைரவி, தீரசங்கராபரணம், கரகரப்பிரியா, ஹனுமத்தோடி, மேசகல்யாணி ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.

பாடுவதற்கேற்ற நேரம்: இரவின் 2 ஆவது ஜாமம். தும்ரியாக இருந்தால் முதல் ஜாமம்.

பாடுவதற்கேற்ற மனநிலைகள்: இளவயது சந்தோஷ நினைவுகள், நம்பிக்கை மற்றும் ஆசை தரும் நிறைவு.

ஹரிகாம்போதியின் ஜன்ய இராகங்கள்:

பகுதாரி, ஈசமனோகரி. கமாஸ். துவிஜாவந்தி, நாராயணகௌளை, சஹானா, சாயாதரங்கிணி, காம்போதி, காப்பிநாராயணி, நவரசகன்னட, செஞ்சுருட்டி, கேதாரகௌளை, யதுகுலகாம்போதி, நாட்டக்குறிஞ்சி, ரவிச்சந்திரிகா, சரஸ்வதிமனோகரி, சுத்ததரங்கிணி, சாமா, சுருட்டி, நாகஸ்வராவளி, குந்தளவராளி, மோகனம், உமாபரணம், ஹிந்துகன்னட, கோகிலத்வனி, கானவாரிதி, மாளவி,, கதாதரங்கிணி, பலஹம்ச, சாயாநாட்டை, சுபூஷணி, விவர்த்தனி, பிரதாபவராளி, ஹிந்துநாராயணி, உழைமாருதம், அம்போஜினி, ஹிந்தோளகாமினி, சாவித்திரி (இராகம்), வீணாவாதினி, ராகவினோதினி, தைவதச்சந்திரிகா, ஆன்தாளி போன்றவை.

இந்த இராகத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்த 0ரு பாடலை இன்று காண்போம்.

பாடல் "ஒரே பாடல் உன்னை அழைக்கும்" - எங்கிருந்தோ வந்தாள் என்ற படத்திலிருந்து. பாடியவர் -டி எம் சௌந்திரராஜன், இயற்றியவர் - கவியரசர்.

இந்தப் பாடல் தன காதலியின் திருமண வரவேற்பில் காதலன் தங்களது கடந்த கால காதல் வாழ்வை நினைத்து பாடும் பாடல்.  . இரக்க பாவம் நிறைந்த பாடல்.

டி எம் சௌந்தரராஜனின் நெஞ்சை உருக்கும் ஹம்மிங்குடன் துவங்கும் இந்தப் பாடல் பல்லவி முடிந்ததும் சரணத்திற்கு முன் வயலின்களின் அணிவகுப்பு, அத்துடன் கிடார் strings, மீண்டும் அத்துடன் சேரும் வயலின், இவற்றிற்கு லீட் தருவது போல் குழலின் இசை என ஒரு உருக்கமான இசைக்கோர்வையுடன் பயணிக்கிறது இடையிசை. சரணங்களுக்கு ஊடே மெல்லிய ஷெனாய் இசைக்கப்பட்டிருப்பது பாடலின் சூழ்நிலைக்கு மேலும் வலுவூட்டுகிறது. சரணங்களின் முடிவில் பாடகர் கடைசி வரியின் முடிவில் இழுத்து நிறுத்துவது, அத்துடன் ஷெனாய் இழைவது என்று ஒரு உருக்கமான இசை விருந்தை அளித்திருக்கிறார் மன்னர்.

பாசமலர் என்ற படத்தில் வரும் " மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்"  என்ற பாடல் இதன் சாயலில் அமைக்கப் பட்டுள்ளது. புதிய பறவை படத்தில் வரும் "உன்னை ஒன்று கேட்பேன்" - சுமதி என் சுந்தரி படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ", தங்கப் பதக்கம் படத்தில் வரும் "சுமைதாங்கி சாய்ந்தால்",  பெண்ணை நம்புங்கள் படத்தில் வரும் "நீ நினைத்த நேரம் எல்லாம் வர வேண்டுமோ"; பாபு படத்தில் "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே", குழந்தையும் தெய்வமும் படத்தில் "அன்புள்ள மான்விழியே"; வறுமையின் நிறம் படத்தில் வரும் "சிப்பி இருக்குது  முத்தும் இருக்குது"; அவள் ஒரு தொடர்கதை படத்தில் "கடவுள் அமைத்து வைத்த மேடை" ஆகிய பாடல்கள் எம் எஸ் வி இசையில் அமைந்துள்ளன.

இந்த இராகத்தில் அமைந்த மேலும் சில பாடல்கள்:

ஒருநாள் ஒரு பொழுதாகிலும் - திருநீலகண்டர் - பாபநாசம் சிவன்
சிதம்பர நாதா திருவருள் தா தா - திருநீலகண்டர் - பாபநாசம் சிவன்
ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு - ஏணிப்படிகள் - கே வி எம்
என்னவென்று சொல்வதம்மா -ராஜகுமாரன் - இளையராஜா
கண்ணுபடப் போகுதைய்யா - சின்னக் கவுண்டர் - இளையராஜா
நானே நானா யாரோதானா - அழகே உன்னை ஆராதிக்கிறேன் - இளையராஜா
ஒருநாள் ஒரு கனவு - கண்ணுக்குள் நிலவு - இளையராஜா
பட்டுவண்ண சேலைக்காரி - எங்கேயோ கேட்ட குரல் - இளையராஜா
பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான் - வருஷம் 16 - இளையராஜா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - இதயம் - இளையராஜா
சாந்துப் பொட்டு, சந்தனப் பொட்டு - தேவர்  மகன் - இளையராஜா
கண்ணுக்கு மை அழகு - புதிய முகம் - ஏ ஆர் ரஹ்மான்
உயிரே உயிரே (பல்லவி மட்டும்) - பாம்பே - ஏ ஆர் ரஹ்மான்

நன்றி! மீண்டும் ஒரு இராகத்துடன் வேறொரு நாள் சந்திப்போம். வணக்கம்.
ஜெய்ஹிந்த்!

Wednesday, 21 January 2015

இன்றைய இராகம் நடபைரவி:
நடபைரவி கர்நாடக இசையின் 20 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 வது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இது வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 வது இராகம். இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி  இராகம்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகின்றன.

இதன் க, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22), தோடி (08), மேசகல்யாணி (65), ஹரிகாம்போஜி (28) ஆகிய மேளங்களைக் கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சண்முகப்பிரியா (56) ஆகும்.
ஐரோப்பிய இசையிலும், கிரேக்க இசையிலும் இதற்கு ஈடான இசை அமைப்பு இருப்பதாக தெரிகிறது.

பாடுவதற்கேற்ற நேரம்: காலை 6 மணி முதல் 9 மணி வரை.

பாடுவதற்கேற்ற மன நிலைகள்: பக்தி, சிருங்காரம், கருணை, இரக்கம் போன்றவை.

நடபைரவியின் ஜன்ய இராகங்கள்:

பைரவி, ஆனந்தபைரவி, ஜயந்தஸ்ரீ, சாரமதி, பூர்ணஷட்ஜம், இந்தோளம், மாஞ்சி, மார்க்கஹிந்தோளம், அமிர்தவாஹினி, சுத்ததெசி, ஜிங்களா, ஹிந்தோளவசந்தம், கோபிகாவசந்தம், கமலாதரங்கிணி, திவ்யகாந்தாரி, புவனகாந்தாரி, சுத்தசாளவி, நவரசச்சந்திரிகா, கோமேதகப்பிரியா, பாகீரதி, ரதிபதிப்பிரியா போன்றவை.

இன்று நாம் இந்த இராகத்தில் மெல்லிசை மன்னர்களின் இசையில் உருவான "நினைக்கத் தெரிந்த மனமே" என்ற, ஆனந்த ஜோதி படத்தில் இடம் பெற்ற  பாடலைப் பற்றிப் பார்ப்போம். பாடலைப் பாடியவர் பி சுசீலா, பாடலை இயற்றியவர்., கவிஞர் கண்ணதாசன்.

அக்கார்டியன், வயலின் கலந்த ஒரு முன்னிசையுடன் பல்லவி துவங்குகிறது. "நினைக்கத் தெரிந்த மனமே ...........உயிரே விலகத் தெரியாதா" என்ற பல்லவி வரை பாங்கோஸின் மிதமான நடை தாள வாத்தியமாக உடன் வருகிறது. ஆர்ப்பாட்டம் மிகுந்த ஒரு ஆப்பிரிக்க வாத்தியத்தை ஒரு சோகமான சூழ்நிலைக்கு பயன் படுத்தியுள்ளனர் மன்னர்கள். நிறைய சோகப் பாடல்களில் இந்த வாத்தியத்தை பயன்படுத்தியிருக்கின்றனர்.

சரணத்திற்கு முன்  வரும் ஷெனாய், வயலின் கலந்த இடையிசை நாயகியின் சோகமான மனநிலையை விளக்குவதாக இருக்கின்றது. சரணங்களுக்கு ஊடேயும் சிறு சிறு ஷெனாய் இசை வருவது பாடலுக்கு மெருகூட்டுகிறது. சரணங்களுக்கு, தப்லாவை உபயோகப் படுத்தியிருக்கின்றனர் மன்னர்கள். பாடல் வரிகள் காதலியின், காதலிக்கும்போது இருந்த மனநிலையையும், பிரிவுக்குப் பின் உள்ள மன நிலையையும் நன்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.  பாடலைக் கேட்போர் நெஞ்சில் இரக்கத்தை உருவாக்கும் இசையும், பாடல் வரிகளும் அமைந்துள்ளன.

இந்த இராகத்தில் அமைந்துள்ள வேறு சில பாடல்கள்:

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே - களத்தூர் கண்ணம்மா -
ஆர் சுதர்சன்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே  - புதையல் - எம் எஸ் வி -டீ கே ஆர்
ராகங்கள் 16 உருவான வரலாறு - தில்லு முல்லு - எம் எஸ் வி
ராஜாவின் பார்வை - அன்பே வா -  எம் எஸ் வி
நான் பார்த்ததிலே - அன்பே வா -  எம் எஸ் வி
கண்ணை நம்பாதே - நினைத்ததை முடிப்பவன் - எம் எஸ் வி
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து - நினைத்ததை முடிப்பவன் -
எம் எஸ் வி
நாளை நமதே, நாளை நமதே - நாளை நமதே - எம் எஸ் வி
ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி - இளையராஜா
ஆத்து மேட்டுல ஒருபாட்டு கேக்குது - கிராமத்து அத்தியாயம் - இளையராஜா
அந்தி மழை மேகம் - நாயகன் - இளையராஜா
என் இனிய பொன் நிலாவே - மூடுபனி - இளையராஜா
ஹேய் ஐ லவ் யூ, ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன் - இளையராஜா
இளம்பனித் துளி விழும் நேரம் - ஆராதனை - இளையராஜா
மடை திறந்து பாயும் நதியலை நான் - நிழல்கள் - இளையராஜா
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர - மௌனராகம் - இளையராஜா
ஓ,   பட்டரஃபிளை பட்டரஃபிளை -  மீரா - இளையராஜா

இந்த இராகத்தில் அமைந்த சில ஹிந்திப் பாடல்கள்:

ஏ மேரே ஜிந்தகி ராத் ஜும்லே - லதா மங்கேஷ்கர் - டாக்சி டிரைவர் - எஸ் டி பர்மன்
ராத் நே க்யா க்யா க்வாப் தேகாயே - தலத் மெஹ்மூத் -  ஏக் காவோன் கி கஹானி - சலீல் சவுதுரி
அகர்  முஜ்ஸே முஹப்பத் ஹை - லதா மங்கேஷ்கர் - ஆப் கி பர்சாயியான் - மதன் மோகன் 
டூட்டே ஹுவே க்வாபோனே, ஹம்கோ யே சிகாயா ஹை - ரஃபி -
மதுமதி - சலீல் சவுதுரி

மேலே குறிப்பிட்ட பாடல்கள் யாவுமே கேட்க கேட்கத் திகட்டாதவை. ரசியுங்கள், அனுபவியுங்கள். இன்னொரு நாள் வேறொரு இராகத்துடன் சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.
ஜெய்ஹிந்த்!







  

Tuesday, 20 January 2015

தமிழ்த் திரையுலகின் (சிந்தனை) சிற்பிகள்: 7
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.

வாலி கவிஞர் கண்ணதாசனை தனது மானசீகக் குருவாகக் கொண்டிருந்தவர். கண்ணதாசனுக்கு இணையாக எழுதும் ஆற்றல் படைத்தவர். இவரது பல பாடல்கள் கண்ணதாசன் எழுதியவை என்று பெரும்பாலோரால் கருதப்பட்டன. அதில் அவருக்கு மகிழ்ச்சியே தவிர, சிறிதளவும் வருத்தம் இல்லை.

சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார்.

 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.

மூச்சுத்திணறல் காரணமாக 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார். இவரது மறைவு தமிழ்த் திரையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ்த் திரையுலகின் (சிந்தனை) சிற்பிகள்: 6
முத்தையா என்ற பெயருடைய கண்ணதாசன். பத்திரிகையில் வேலைக்கு சேரும்போது  என்ன பெயரில் எழுதுகிறாய் என்று கேட்டதற்கு, கண்ணதாசன் என்று சொன்னார். அதுவே நிலையாய் ஆயிற்று. ஆரம்பத்தில் அண்ணாதுரையின் மீது கொண்ட ஈடுபாட்டினால் திராவிடக் கட்சிகளில் இருந்தார். பின் அவர்களது கட்சிக்குள் சில தலைவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று வாழ்வது பிடிக்காமல் 1961 ல் திமுகவை விட்டு வெளியேறினார். ஈ வி கே சம்பத் துவங்கிய கட்சியில் சில காலம் இருந்தார். பிறகு காமராஜரின் அப்பழுக்கற்ற அரசியில் வாழ்க்கையினால் கவரப் பட்டு காங்கிரசில் இணைந்தார். இவற்றில் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் இவர் அதற்கேற்ப பாடல்கள் திரைப் படங்களில் எழுதி குறிப்பிட்ட தலைவர்களுக்கு  புரிய வைப்பார். உதாரணம் - யாரை எங்கே வைப்பது என்று - சிவாஜி கணேசனைப் புறக்கணித்து எம்ஜியாரை கட்சிக்குள் கொண்டு வந்த போது, அண்ணன் காட்டிய வழியம்மா - திமுகவை விட்டு வெளியேறும்போது, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - காமராஜருடன் இணைய விரும்பியபோது (பாடல் விடு தூது!) நலம்தானா - முதல்வர் அண்ணாதுரை உடல்நிலை சரியில்லாதபோது, மற்றும் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களின் போது எழுதிய பாடல்கள்.

நினைத்த மாத்திரத்தில் பாடல் எழுதும் ஆற்றல் கொண்டவர், மூடப்பட்ட ரயில்வே கேட் திறப்பதற்குள்  ஒரு பாடலை எழுதியவர். மேடையில் பாலசந்தர் பொது மக்கள் முன்னிலயில் தான்  2 மாத காலமாக ஒரு பாடலுக்காக இவர்களிடம் அலைகிறேன் என்று  கூறியவுடன், எம் எஸ் வி மெட்டுப் போட, உடனுக்குடன்  பாடல் எழுதி தந்தவர். - பாடல் ஞாயிறு உண்டு, திங்கள் உண்டு - படம், அவர்கள். ஏழு ஸ்வரங்களுக்குள்  பாடலுக்கு சிறிது அதிக சரணங்கள் எழுதித்தரும்படியும் அதில் நான்கை தான் தேர்வு செய்து கொள்கிறேன் என்று பாலசந்தர் கூற, 64 சரணங்கள் எழுதித் தள்ளி விட்டார், பாலசந்தர் திக்கு முக்காடி இந்த 4 சரணங்களை எடுத்து அவற்றில் ஒன்றை பல்லவியாக வைத்துக் கொண்டார். கண்ணன் மீது கொண்ட காதலால் நிறைய திரைப்  படங்களில் கண்ணன் மேல் பாடல்கள் எழுதியுள்ளார், இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக கிருஷ்ண கானம் என்ற ஒரு தனிப் பாடல் தொகுப்பிற்கு இவர் பாடல்கள் எழுதித்தர, எம் எஸ் வி அவற்றிற்கு இசையமைத்து வெளியிட்டார்.

தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்கள் நிறைய எழுதியுள்ளார்.
அவற்றில் ஒன்றான மயக்கமா கலக்கமா என்ற பாடலில் வரும்  உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற வரிகளைக் கேட்ட கவிஞர் வாலி திரைப்  படங்களில் எழுத வாய்ப்புகள் கிடைக்காமல் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல எண்ணியிருந்தவர், புதியதொரு உத்வேகம் பெற்று, திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில் தீவிரம் காட்டி பின்பு இவருக்கு இணையான கவிஞர் ஆனார்.  கவிஞர் வாலி, கவியரசருக்கு ஒரு ஏகலைவன். (ஆனால் இவர் அவரிடம் கட்டை விரலைக் கேட்கவில்லை)


கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். இவரது பாடல்களில் பாரதியின் தாக்கம் தெரிவதை நன்கு உணரலாம்.  இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர்.  பஜகோவிந்தத்திற்க்கு உரை எழுத சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுக் கொண்டு பின்னர் உரை எழுதியவர். அந்த அளவு ஒன்றை நன்கு அறிந்த பின்னரே  எழுத வேண்டும் என்பது இவரது கொள்கை.

மனதில் உள்ளதை வெளிப்படையாக கூற என்றுமே தயங்கியதில்லை, தம்மை இகழ்ந்தவர்களுக்கும் கவிதையிலேயே பதில் தருவார். நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  நாம் பாரதியைப் பார்த்ததில்லை, ஆனால் 20ஆம்  நூற்றாண்டின் மகா கவியான கண்ணதாசன் காலத்தில் வாழ்ந்தது நமக்கு பெருமை.


நான் இவரைப் பற்றி சிறிதளவே எழுதியுள்ளேன், இவரைப் பற்றி இன்னும் எழுதவேண்டுமென்றால் இவர் ஏழு ஸ்வரங்களுக்கு, பாடலுக்கு எழுதியது போல், 64 பத்திகள் எழுதினாலும் போதாது. நன்றி! வணக்கம்!
தமிழ்த் திரையுலகின் சிற்பிகள்: 5

கோபி சாந்தா என்கிற மனோரமா. மன்னார்குடியில் பிறந்தவர். முதன் முதலில் கவிஞரால் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் அறிமுகம் ஆனவர். அந்தப் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தாவ். பின்னர் தனது கவனத்தை காமெடியின் பக்கம் செலுத்தி அதில் 40 ஆண்டுகளும்மும் மேல் தன்னிகரற்ற நடிகையாக விளங்கினார். 60களில் திரு நாகேஷுடனும், 70 வரை திரு சோவுடனும் 80லிருந்து  திரு தேங்காய் ஸ்ரீனிவாசனுடனும் இணைந்து நடித்தவர். இவரது நடிப்பு தனித்தன்மையுடன் காணப்படும். இவர் தனது சொந்தக் குரலில் 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இவரது முதல் பாடல், L R ஈஸ்வரியுடன் பாடிய, மகளே உன் சமத்து என்ற பாடத்தில் இடம்பெற்ற "தாத்தா தாத்தா பிடி குடு, இந்த வயதிலே சடுகுடு என்ற பாடலாகும். ஆனால்  இவருக்கு புகழ் தேடித்த் தந்த பாடல், பொம்மலாட்டம் படத்தில் வரும் "வா வாத்தியாரே வூட்டாண்டே" என்ற பாடல். இவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றும் பலாராலும் பேசப் படுபவை. உதராணத்திற்கு, தில்லான மோகனாம்பாள் "ஜில் ஜில் ரமாமணி" அதில் பாண்டியன் நானிருக்க என்ற ஒரு பாடலுக்கு இவரது நடனமும் நடிப்பும் வெகுவாக பாராட்டப் பட்டது. இயக்குனர், ஸ்ரீதர், கே பாலச்சந்தர் போன்ற அனைத்து இயக்குனர்களும் தனது படத்தில் இவரை நன்கு பயன்படுத்தியுள்ளனார். அதுவே இவரது நடிப்புக்கு ஒரு சான்று. இவரது வசன உச்சரிப்ப்பும் வித்தியாசமாக இருக்கும். "ஓயு பெய்ய மை, அதுய ஓயு சின்ன குயி" என்ற வசனம் படு பிரசித்தம். 2002ஆம் வருடம் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. எந்தவித பாத்திரமானாலும் அனாயசமாக நடிக்கக் கூடிய ஒரு நடிகை. 1000 படங்களும், இணையாக 1000 மேடை நாடகங்களிலும் நடித்த நடிகை. இவர் நலமுடன் வாழ நமது பிரார்த்தனைகள்.
தமிழ்த் திரையுலகின் சிற்பிகள்: 4
எம்.ஆர்.ராதா, மதராஸ் ராசகோபால் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. 10 வயதில் தனது தாயார் தனக்கு ஒரு மீன்துண்டு அதிகமாக தரவில்லை என்று கோபித்துக் கொண்டு வீட்டை வெளியேறியவர். தனக்கென்று ஒரு தனிப் பாணி உடைய நடிகர். சிவாஜியும் சரி, எம்ஜியாரும் சரி, இவருடன் நடிக்கும்போது எச்சரிக்கையாக நடிக்கவேண்டும், அந்த அளவு நடிப்பாற்றல் மிக்கவர். "நடிகவேள்" - நடிகர்களின் வேந்தர் என்ற பொருள்பட அழைக்கப் பட்டவர். ரத்தக் கண்ணீர் என்ற தனது நாடகத்தின் மூலம் பிரபலமானவர், அது பிறகு படமாகவும் வெளி வந்து பெரும் வெற்றி பெற்றது.இவர் கொடூரமான வில்லனாக என்றுமே காட்சியளித்ததில்லை. சராசரி மனிதனைப் போன்றே இருக்கும் இவரது நடிப்பு. இன்றைய நாகரீக வில்லன்களுக்கு இவர்தான் முன்னோடி என்றால் அது மிகையாகாது. நகைச்சுவை நடிப்பிலும் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையைப் பதித்தவர். இவரது வசன உச்சரிப்பு அலாதியானது. ஒவ்வொரு வாக்கியத்தையும் இருவேறு தொனிகளில் பேசுவார். அதை இதுவரை ஒருவராலும் முழுதாக பின்பற்ற முடியவில்லை. படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் ராவ் பகதூர் என்பதை ராவ்... பகதூர் என்று நீட்டி சொல்வது, மிகுந்த சிரிப்பை வரவழைக்கும், இது ஒரு மாதிரிதான் இவருடைய வசன உச்சரிப்புக்கு. "FOREIGNLA நீராவில கப்பல் வுடறான், ரயில் விடறான், இங்க நம்மாளு குழாப்புட்டு சுடறான்" போன்ற நையாண்டி வசனங்கள் இவருக்கே உரித்தது. இவர் கோபத்துடன் பேசும் வசனங்களும் சிரிப்பை வரவழைக்கும், "என்னையாட வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லரே, நான் யார் தெரியுமா, ராவு காலத்துல பிறந்தவன்டா" என்று சிவாஜியிடம் சொல்வார், பச்சை விளக்கு என்ற படத்தில். அமைதியாக நடித்தாலும் சரி, ஆர்ப்பாட்டமாக நடித்தாலும் சரி, ரசிக்கும்படியாக இருக்கும் இவரது நடிப்பு. நீயே உனக்கு என்றும் நிகரானவன், என்ற பாடலில் இவரது அங்க சேஷ்டைகள் பலத்த சிரிப்பை வரவழைக்கும்.

ஒரு வித்தியாசமான வில்லன் நடிகர்
தமிழ்த் திரையுலகின் சிற்பிகள்: 3
எம்ஜியார் என்று அழைக்கப் படும் திரு M G ராமச்சந்திரன். இவரது ரசிகர்களால், புரட்சித்தலைவர், என்று போற்றப் படுபவர். மக்கள்  திலகம் என்று திரையுலகினரால் அழைக்கப்  பட்டார். திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டம் அளித்தார்.
முதலில் சரித்திர படங்களில் நடித்து வந்த எம்ஜியார், பிறகு, தான் பாடிய, தனக்கொரு கொள்கை, என்ற பாடலைப் போல் தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, இறுதி வரை அதையே கடைப் பிடித்தார். இவரது படங்களில் தாய்ப் பாசம் மிகவும் முக்கிய அம்சமாக  விளங்கியது. பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். தனது கொள்கைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தனது பாத்திரங்களை அமைத்துக் கொண்டார். குறிப்பாக ஏழை மக்கள் இதயத்தில் நீங்காத இடம் பெற்றவர். அதற்கு ஒரு சான்று, ஒரு பொது நிகழ்சசி முடிந்ததும் ஒரு மூதாட்டியை அணைத்து ஆறுதல் கூறியபோது, "மவராசா, நீ நல்ல இருக்கணும், ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் ஜாக்கிரதையா இருந்துக்கப்பா" என்று வெகுளித்தனமாக அந்த மூதாட்டி கூறியது.

நடிகர் திலகமும் இவரும் தமிழ்த்திரையுலகின் இரு பெரும் தூண்கள் என்றால் அது மிகையாகாது.
தமிழ் திரையுலகின் சிற்பிகள்: 2

வி சி கணேசன் என்று அழைக்கப்ப் படும் சிவாஜி கணேசன். தந்தை பெரியாரால் சிவாஜி என்று பெயர் சூட்டப் பட்ட நடிகர் திலகம். முதல் படத்திலேயே தனது வித்தியாசமான நடிப்பினால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்தவர். படத்திற்கு படம் இவரது நடிப்பில் வித்தியாசம் இருக்கும், மிகவும் சாதாரண கதையம்சம் கொண்ட படமாயினும் ஏனோ தானோ என்று நடிக்காமல் முழு ஈடுபாட்டுடன் நடித்த நடிகர். நடிப்பு ஒன்றே தனது மூச்சாக வாழ்ந்தவர். கலைத்தாயின் தவப் புதல்வன். பல ஆங்கில நடிகர்களாலும்  பாராட்டப் பட்ட ஒரே இந்திய நடிகர். தான் ஏற்ற பாத்திரமாகவே மாறிவிடும் இயல்பு கொண்டவர். நேரம் தவறாமை இவரது முக்கிய ஒழுக்கங்களில் ஒன்று. இயக்குனர்களை ஆட்டுவிக்காமல் இயக்குனர்களின் நடிகராக இருந்தவர். இன்றைய நடிகர்களில் இவரின் பாதிப்பு இல்லாத நடிகர்கள் எவருமே இல்லை எனலாம்தன்னுடைய பல படங்களின் மூலம் நாட்டுப் பற்றை வலியுறுத்திய ஒரே நடிகர். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவரது மகனுக்கு கூறிய அறிவுரை: நீ நடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் சிவாஜியின் படங்களைப் பார்!, இதை விட என்ன விருது வேண்டும் இவருக்கு! இவரது புகழுக்கு, இவர் பதவியில் ஏதும் இல்லாதிருந்தும், படங்களில் நடிக்காதிருந்தும், இவர் மரணமடைந்தபோது அலைகடலென திரண்ட ரசிகர் கூட்டமே ஒரு சான்று. தமிழ் திரையுலகம், ஏன் இந்தியத் திரையுலகம் இருக்கும் வரை இவரது புகழ் மறையாது. வாழ்க நடிகர் திலகத்தின் புகழ். ஜெய்ஹிந்த்!
கீரவாணி என்பது கர்நாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தில் 3வது மேளம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பது

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) , காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் சிம்மேந்திர மத்திமம் ஆகும்.

இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் மத்திமம், பஞ்சமம், தைவதம் முறையே கிரக பேதத்தின் வழியாக ஹேமவதி (58), வகுளாபரணம் (14), கோசலம் (71) இராகங்கள் கொடுக்கும்.

மேல்நாட்டு இசையில் ஹார்மோனிக் மைனர் (Harmonic Minor Scale) என்பது கீரவாணி இராகமே.

பாடுவதற்கேற்ற நேரம்: இரவின் முதல் ஜாமம் (6 - 9)

பாடுவதற்கேற்ற  மன நிலைகள்: சிருங்காரம், விரகம், பழைய (மலரும்) நினைவுகள்.

இன்று இந்த இராகத்தில் அமைந்த மெல்லிசை மன்னர்களின் "நெஞ்சம் மறப்பதில்லை" என்ற பாடல், நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் இடம் பெற்றது, பற்றி பார்ப்போம்.

இந்தப் பாடல் காதலனை எண்ணி காதலி பாடுவது. சிருங்கார ரசத்தில் அமைந்தது. இது ஒரு haunting melody ரகத்தை சேர்ந்தது.
மனதை சுண்டும் ஒரு புல்லாங்குழல் இசையுடன் வயலினும் சேர்ந்த  முன்னிசை முடிந்ததும் "நெஞ்சம் மறப்பதில்லை...ய் ..ய் ....ய்ய் , அது நினைவை இழப்பதில்லை" என்று சுசீலா துவங்கும்போதே பாடலின் சுவை துவங்கி விடுகிறது.
"காலங்கள்தோறும் உன்மடி தேடி கலங்கும் என் மனமே,
வரும் காற்றினிலும் பெரும் கனவினிலும் நான் காண்பது உன்முகமே" என்ற வரிகளில் காதலின் தேடல் நன்கு தெரிகிறது.

 "தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன், ஒரு போதும் இல்லை, உன் தோற்ற நிலை கண்ணில் தூக்கமும்  பிடிக்கவில்லை" என்ற இடத்தில், காதல் விரகம் வெளிப்படுமாறு வரிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன, சரணத்திற்கு முன் வரும் புல்லாங்குழலுடன் கூடிய சிதார் இடையிசை மனதை மயக்குவதாக உள்ளது.

இந்தப் பாடல் இசையமைக்க 6 மாத காலம் பிடித்தது . பல மெட்டுகள் போடப்பட்டும் இயக்குனருக்கு திருப்தி வரவில்லை. அவர் விஸ்வநாதனிடம், விட்டு விடுங்கள், நான் இந்த சூழ்நிலைக்கு வேறு சூழ்நிலை மாற்றி விடுகிறேன் என்று கூறியதும், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு 2 நாள் அவகாசம் கேட்டு, கடற்கரையில் அமர்ந்து சிந்தித்தபோது, கடலலையின் ஒலியால் ஈர்க்கப்பட்டு இந்த மெட்டு அமைக்கப்பட்டது. இயக்குனருக்கும் எதிர்பார்ப்பை விட  மேலான திருப்தியைத் தந்தது இந்த மெட்டு . (இயக்குனர் ஸ்ரீதர் கல்கியில் எழுதிய "திரும்பிப் பார்க்கிறேன்" என்ற தொடரில் அவர் கூறியது). 6 மாத கால கடின உழைப்பு வீண் போகவில்லை. அனைவரது மனத்தையும் இன்றும் சுண்டியிழுக்கும் மிகச் சிறந்த பாடலாக இது அமைந்து விட்டது.

இந்த இராகத்தில் அமைந்த இன்னும் சில பாடல்கள்:

*   கண்ணிரண்டும் மின்ன  மின்ன - பச்சை விளக்கு - எம் எஸ் வி - ராமமுர்த்தி
*  மன்னவனே அழலாமா - கற்பகம் - எம் எஸ் வி - டி கே ஆர் 
" பாட்டு பாடவா பார்த்து பேசவா" - தேன் நிலவு - ஏ எம் ராஜா 
" போவோமா ஊர்கோலம் - சின்னத்தம்பி - இளையராஜா
" என்னைத் தாலாட்ட வருவாளோ  - காதலுக்கு மரியாதை - இளையராஜா
" நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று - பொன்னுமணி - இளையராஜா
" கீரவாணி - பாடும் பறவைகள் - இளையராஜா
" மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன் - இளையராஜா
*  ராஜ ராஜ சோழன் நான் - ரெட்டை வால் குருவி - இளையராஜா
*  எங்கே எனது கவிதை - கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் - ஏ ஆர் ரஹ்மான்

இந்த இராகத்தில் அமைந்த ஹிந்தித் திரப் படப் பாடல்கள் இரண்டு:

தும் பின் ஜாவூன்  கஹான் - ரஃபி, கிஷோர் குமார் இருவரும் தனித் தனியாக - பியார் கா மௌசம் - ஆர் டி பர்மன்


மேரி பிகி பிகி சி - கிஷோர் குமார் - அனாமிகா -  ஆர் டி பர்மன்
இன்றைய இராகம் பெஹாக் என அழைக்கப் படும் பிஹாக் இராகம். ஆரோகணத்தில் இதன் ஸ்வரங்கள் ரிஷபமும், தைவதமும் மத்திமத்தில். மற்ற அனைத்தும் சுத்த ஸ்வரங்கள்.
இந்த இனிமையான இராகம், கற்றுக் கொள்பவர்கள், மற்றும் இசை வல்லுனர்கள் இருவர் மத்தியிலும் மிகப்  பிரபலமானது.
ஆரோகணத்தில் ஆலாபனை சுத்த மத்திமத்திற்க்கு பதில் தீவிர மத்திமத்தில் ஆரம்பிக்கும். அவரோகணத்தில் தீவிர மத்திமம்சுத்த மத்திமத்துடன் துவங்கும்.

பாடுவதற்கேற்ற நேரம்: இரவின் இரண்டாவது ஜாமம் (9 - 12), மழைக் காலங்கள்.

பாடுவதற்கேற்ற மனநிலை: சாந்தம் (இந்த இராகம் மன அழுத்தத்தைக் குறைத்து, அமைதியயான தூக்கத்தைத தர வல்லது). எதிர்பார்ப்பு, பிரிவிற்க்குப் பின் இணையத் துடிக்கும் ஏக்கம், இதயத்தின் தவிப்பு போன்றவை.

இன்று நாம் மெல்லிசை மன்னர்கள் இசையில் உருவான, படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் வரும், "தண்ணிலவு தேனிறைக்க, தாழை மடல் நீர்தெளிக்க" என்ற பாடலை பார்ப்போம். இது ஒரு அமைதியான (சாந்தம்) பாடல்.

மனதை வருடும் புல்லாங்குழலின் முன்னிசையுடன் துவங்கும் பாடல், முதல் இரண்டு வரிகள் பெண்மையைப் பற்றியும், அடுத்த இரண்டு வரிகள் காதலை உணர்த்துவதாகவும் அமைந்திருக்கும். அதற்கேற்ப மிருதுவான இசை. "வஞ்சி மகள் நடை பயின்று  சென்றாள்" என்னுமிடத்தில் சென்..றாள் சற்று சுசீலா இழுத்துப் பாடும் அழகு, "இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்" என்று பாடி விட்டு, சிறிது நாணத்தை வெளிப்படுத்தும் விதமாக " நாணி நின்றாள்என்று இன்னும் மென்மையாக முடிக்கும் இடம், மன்னர்களின் தனிப் பாணி. சரணங்களுக்கு இடையே வரும் குழல், சைலஃபோன கலந்த இடைய்சை, பாடல் முழுதும் ஒலிக்கும் மிருதுவான தப்லாவின் ஒலி, அனைத்துமே பாடலுக்கு மேலும் இனிமை சேர்க்கின்றனகவிஞரின் வரிகள் தேனினும் இனிமை. அவ்வாறே சுசீலா அவர்களின் குரலும். ஒரு இனிமையான சூழ்நிலையில் அமைந்த உள்ளததை மயிலிறகால் வருடும் பாடல் இது.

மேலும் சில பாடல்கள் இந்த இராகத்தில் (எனக்கு தெரிந்த சில பாடல்களை மட்டுமே குறிப்பிடுகிறேன்):

ஒரு பெண்ணைப் பார்த்து - தெய்வத்தாய் - எம் எஸ் வி - டீ கே ஆர்
ஹேய், ஓராயிரம் - மீண்டும் கோகிலா - இளையராஜா
உன் பார்வையில் ஓராயிரம் - அம்மன் கோயில் கிழக்காலே - இளையராஜா
சுட்டும் விழிச்சுடர் - கண்டு கொண்டேன்  கண்டு கொண்டேன் -
ஆர் ரஹ்மான்

பிஹாக் இராகத்தில் அமைந்த இரண்டு ஹிந்திப் பாடல்கள்:

தேரே சூர் அவுர் மேரே கீத் - கூன்ஜ் ஊத்தி ஷெனாய்  - லதா
மங்கேஷ்கர் - இசை, வசந்த் தேசாய் (ஷெனாய் - உஸ்தாத் பிஸ்மில்லா கான்)

நன்றி! இன்னொருநாள் வேறொரு இராகத்துடன் சந்திப்போம். வணக்கம்.
ஜெய்ஹிந்த்!








சக்ரவாகம் கர் நாடக இசையின் 16 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் 16 வது இராகத்திற்குத் தோயவேகவாகினி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அக்னி என்றழைக்கப்படும் 3 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 4 வது இராகம். இதற்கு இணையாக ஹிந்துஸ்தானி இசையில் ஆஹிர் பைரவி இராகத்தை கூறலாம்.

தியாகராஜர் இந்த இராகத்தை வழக்கிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகா வைத்தியநாத சிவன் இந்த இராகத்தைத் தன் 12 வது வயதில் சிறப்பாகப் பாடியதால் "மகா" என்ற புனைபெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் ராமப்பிரியா (52) ஆகும். இதன் மத்திமத்தை ஷட்ஜமாக வைத்தால் சரசாங்கி (27) கிடைக்கும், நிஷாதத்தை ஷட்ஜ்மாக வைத்தால் தர்மவதி (59) கிடைக்கும்

சக்கரவாகத்தின் ஜன்ய இராகங்கள் இவை.

கலாவதி இராகம், கனிதவினோதினி, காமினிப்பிரியா, கோகிலம், சசிப்பிரகாசி, சுத்தஸ்யாமள, திருநேத்ரப்பிரியா, தேக்களி, நபோமார்க்கினி, நாராயணி, நாளிகம், பிந்துமாலினி, பிரவர்த்தி, பின்னமத்திமம், மலயமாருதம், ரஸிகரஞ்சனி, வலஜி, வீணாதாரி, வேகவாகினி, ஸூஜாஹூலி.

இன்று இந்த இராகத்தில் மெல்லிசை மன்னர்கள் இசையில் அமைந்த ஒரு பாடலைப் பாப்போம்.

கர்ணன் படத்தில் இடம்பெற்ற "உள்ளத்தில் நல்ல உள்ளம்" என்ற பாடல் சக்கரவாக இராகத்தில் அமைக்கப் பட்டது.

போர்க்களத்தில் கர்ணன் அம்புகளால் துளைக்கப்பட்டு மரணத்தின் வாயிலில் இருக்கும் நிலையில், அவனது உயிரைத் தாங்கிப் பிடித்திருக்கும் தர்ம தேவதையின் பிடியிலிருந்து அவனை விடுவித்து வானுலகம் அனுப்ப பகவான் கண்ணன் ஒரு கிழ அந்தண  வேடமிட்டு அவனிடம் அவனின் தர்மத்தின் பலன்களை யாசமாகப் பெறும் காட்சி.

நெஞ்சைப் பிழியும் ஷெனாய் முன்னிசையுடன் பாடல் துவங்குகிறது. கூடவே சாரங்கியும் இழையும். மிகவும் உருக்கமான இசை. தாள வாத்தியமாக நாக்ராவை கையாண்டிருப்பது பாடலின்  இறுக்கமான சூழ்நிலைக்கு மேலும் வலு சேர்க்கிறது. சரணங்களுக்கு இடையில் சிதாரை குழலுடன் இசைக்க செய்திருப்பது மிகவும் அருமை. பாடல்வரிகளும், கர்ணனின் புகழைப் பாடுவதாகவும், தனது செய்கைக்கு கண்ணன் வருந்தி கர்ணனிடம் மன்னிப்பு கேட்பது போன்றும் அமைந்திருப்பது காட்சிக்கும் கதைக்கும் வலுவூட்டுகிறது. இந்தப் பாடலுக்கு டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரல் மிகவும் பொருத்தமாகவும், உருக்கத்தை நன்கு வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. பாடல் முடிந்து வெகு நேரம் ஆகியும் நமது இதயங்கள் கனத்துப் போயிருப்பதற்கு காரணம்  இசையின் தாக்கமே. இன்றும் பல இசையமைப்பாளர்களும் வியந்து பாராட்டும் பாடல் இது.

இந்த இராகத்தில அமைந்தமேலும் சில பாடல்கள்.

தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு - பாட்டும் பரதமும்- இசை எம் எஸ் வி
பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சையிடுங்கள் - கங்கா கௌரி - இசை - எம் எஸ் வி
சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு - சொர்க்கம் நரகம் - சங்கர் கணேஷ்
நீ பாதி நான் பாதி கண்ணே - கேளடி கண்மணி - இளையராஜா
பூஜைக்காக வாடும் பூவை - காதல் ஓவியம் - இளையராஜா
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது - தூண்டில் மீன் - வி குமார்

ஆஹிர் பைரவியில் அமைந்த சில ஹிந்திப் பாடல்கள்:
பூச்சோனா கைசே  - மன்னா  டே - மேரி சூர் தேரி ஆங்கேன் - இசை - எஸ் டி பர்மன்
தீரே தீரே சுபா ஹுயி ஹை - ஜேசுதாஸ் - ஹைசியாத்  - பப்பி லஹரி
மேரி கலியான் சே லோகோங்கி யாரி பாத் கி - மகேந்திர கபூர் - கல்யாண்ஜி ஆனந்த்ஜி - தர்மாத்மா

மற்றொரு நாள் இன்னொரு இராகத்துடன் சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.

ஜெய்ஹிந்த்!
கௌரிமனோகரி கர் நாடக இசையின் 23வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூரண மேள பத்ததியில் இந்த இராகத்திற்கு கௌரீ வேளாவளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 5வது மேளம்.
கருணைச்சுவை நிரம்பியது. எப்பொழுதும் பாடலாம்.
இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் தர்மவதி (59வது மேளகர்த்தா) ஆகும்.

ஐரோப்பிய இசையில் உள்ள Melodic Minor Scale என்ற சுரக்கோர்வையின் ஆரோகணம் கௌரிமனோகரி மேளத்தை ஒத்துள்ளது. (அதன் அவரோகணம் 20 வது மேளமான நடபைரவியை ஒத்துள்ளது.)

கௌரிமனோகரியின் ஜன்ய இராகங்கள்:

பாதுதீபகம், வேளாவளி, கோகிலதீபம், ஹம்ஸபூஷணி, ஹம்சதீபகம், சாமசாளவி, சாளவிபங்காள, சிங்களபைரவி,
கமலா ஆகிய இராகங்கள்.

இன்று இந்த இராகத்தில் அமைந்த மெல்லிசை மன்னரின் பாடல் பற்றிப் பார்போம்.  "மலரே, குறிஞ்சி மலரே" என்ற பாடல், Dr.சிவா என்ற படத்தில் இடம் பெற்றது.


"மலரே குறிஞ்சி மலரே" என்று பாடலின் துவக்கத்தில் ஜேசுதாசும், ஜானகியும் பாடும்போது ஒரு சிறு எதிரொலியை அமைத்துள்ளனர். பாடல் காட்சி தலைக் காவிரியில் ஆரம்பிப்பாதாக காண்பிக்கப் படுகிறது. பின் முழுவதும் மழைப் பிரதேசங்களிலும் பூன்தொட்டங்களிலும் வருவதால், இந்த எதிரொலி பாடலுக்கு மிகவும் ஏற்புடையதாக உள்ளது. "தலைவன் சூட நீ மலர்ந்தாய், பிறந்த பயனை நீ அடைந்தாய்" என்ற வரிகளில் நீ என்று இழுக்கும்போது கூட ஒலிக்கும் புல்லாங்குழல் இசை மிகவும் இனிமை. சரணங்களுக்கு இடையே புல்லாங்குழலும் சிதாரும் இணைந்து ஒலிப்பது பாடலின் இனிமைக்கு மேலும் அழகு சேர்க்கிறது. சரணங்களில்  உடன் வரும் தபலா நடை, மறுபடியும் பல்லவியில்  தலைவன் சூட நீ மலர்ந்தாய் என்ற வரிகளுக்கு மாற்றி ஒலிக்க செய்வது பாடலுக்கு ஒரு பல்சுவை அளிக்கிறது. ஒரு நல்ல குடும்ப சூழ்நிலையைப் பிரதிபலிப்பதாக பாடலின் இசை மிகவும் கண்ணியமாகவும் தரமாகவும் அமைந்துள்ளது.

இந்த இராகத்தில் அமைந்த இன்னும் சில பாடல்கள்:

பாட்டும் நானே பாவமும் நானே - திருவிளையாடல் -
கே வி மகாதேவன்
கௌரி மனோகரியை கண்டேன் - மழலைப்  பட்டாளம் -
எம் எஸ் விஸ்வநாதன்
கவிதை அரங்கேறும் நேரம் - அந்த 7 நாட்கள் - எம் எஸ் வி 
பொன்வானம் பன்னீர் தூவுது - இன்று நீ நாளை நான் - இளையராஜா
சோலை பூவில் மாலை தென்றல் - வெள்ளை ரோஜா - இளையராஜா
தேன் பூவே பூவே வா - அன்புள்ள ரஜினிகாந்த் - இளையராஜா

தாழம்பூவே வாசம் வீசு - கை கொடுக்கும் கைஇளையராஜா பூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே - ஆர் ரஹ்மான்
இன்றைய இராகம் பஹாடி:

அமைதி, சக்தி, சோகம், உணர்வுகளின் கலவை இந்த வார்த்தைகள் ஒன்றாக இணைந்தால் அது பஹாடியின் அழகை விளக்கும்.

பஹாடி, காஷ்மிரி இசையிலிருந்து வந்த ஒரு எளிமையான இராகம் ஆகும். இந்த இராகம் தும்ரி, கஜல், பஜன், பாடல்களில் மிகவும் பிரபலமானது. இது மலைவாழ்மக்களின் இராகம் ஆகும்.  அதற்கேற்றாற்போல் சில சமயங்களில் இதில் அமைந்த பாடல்கள்  எதிரொலியைப் பிரதிபலிக்கும். நேபாள இசையின் பெரும்பாலான பாடல்கள் இந்த இராகத்திலேயே அமைந்துள்ளன. 

இதை  பாடுவதற்கேற்ற நேரம்: இரவின் முதல் ஜாமம், வசந்த காலம், வசந்தகால மழை நேரங்கள், காற்றுடன் கூடிய மழைக் காலம் ஆகியவை.

இன்று இந்த இராகத்தில் அமைந்த ஒரு எம் எஸ் வி அவர்களின் பாடலைப் பார்ப்போம். "விழியே கதை எழுது" என்ற பாடல் - உரிமைக் குரல் என்ற படத்திலிருந்து. பாடலை இயற்றியவர் கண்ணதாசன். பாடியவர்கள் கே ஜே ஜேசுதாஸ் - பி சுசீலா ஆகியோர்.

"விழியே ....கதை எழுது.....கண்ணீரில் எழுதாதே ....
மஞ்சள் வானம் .......தென்றல் சாட்சி......உனக்காகவே நான்  வாழ்கிறேன்."
என்று தொகையறா  போல் பல்லவியை நிறுத்தி நிதானமாக, மெலிதான ஷெனாய், அக்கார்டியன் இசையுடன்  ஜேசுதாஸ் அவர்கள் ஆரம்பித்ததும், பி சுசீலா அதையே தொடர்ந்து பாட, நேரே சரணத்திற்கு போய் விடுகிறது பாடல்.

முதல் சரணத்திற்கு முன் அக்கார்டியன் இசை, சரணங்களுக்கு டோலக்கின் தாள ஒலி, ஊடே மெலிதான வயலின், அக்கார்டியனின் இசை என்று இனிமையாகப் பயணிக்கிறது பாடல். இரண்டாவது சரணத்திற்கு முன் அக்கார்டியனும் ஷெனாயும் கலந்த ஒரு மெலிதான இசையுடன் புல்லாங்குழலின் இனிய இசை, மூன்றாவது சரணத்துக்கு முன் அக்கார்டியன், பிறகு குழல், பின் ஷெனாய், அக்கார்டியன், ஷெனாய் என்று மாறி மாறி ஒரு இனிமையான முன்னிசையுடன் பாடல் மிக இனிமையாக இசையமைக்கப் பட்டிருக்கிறது. பாடலின் இனிமைக்கு, ஜேசுதாஸ், சுசீலா இருவரது குரல்களும் பெரிதும் துணை நிற்கின்றன. இந்தப் பாடலுக்கு எம் எஸ் வி  63 வகையான மெட்டுக்கள் போட்டதாகவும் அதில் முதல் மெட்டை எம் ஜி ஆர் தேர்ந்தெடுத்ததாகவும் செய்தி உண்டு. இந்தப் பாடலுக்கு பஹாடி இராகத்தில் இசையைமைக்க வேண்டும் என்று மன்னருக்கு  எவ்வாறு தோன்றிற்றோ! மிகவும் இனிமையான ஒரு காதல் டூயட் பாடல் இது. இந்த இராகத்தில் மெல்லிசை மன்னர்/கள் வேறு பாடல் ஏதாவது இசை வடித்திருக்கிறார்களா  என்று தெரியவில்லை. மேலும் இந்த இராகத்தில் அமைந்துள்ள மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களைப் பற்றி தெரிந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கவும்.

இந்த இராகத்தில் அமைந்த சில ஹிந்திப் பாடல்கள்:

1. கோரா காகஸ் தா ஏ மன் மேரா - ஆராதனா, கிஷோர்  குமார் - லதா, இசை எஸ் டி பர்மன்;
2. ஹவா மே உடுதா ஜாயே மோரே லால் துப்பட்டா - லதா மங்கேஷ்கர், பர்சாத் என்ற படத்தில் - இசை ஷங்கர் - ஜெய்கிஷன்.
3. ஆஜா ரே மேய்ன்  தொ பர்தேசி - மதுமதி, இசை - சலில் சௌதுரி
4.  சாதுவின் கா சாந்த்  ஹோ - ரஃபி,  படம் - சாதுவின் கா சாந்த், இசை - பாம்பே ரவி

பிறிதொரு நாள் இன்னொரு இராகத்துடன் சந்திப்போம்,
நன்றி! வணக்கம்.
ஜெய்ஹிந்த்!