Tuesday, 20 January 2015

இன்றைய இராகம் சிந்து பைரவி:

சிந்து பைரவி நாடகப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். இது ஹிந்துஸ்தானி இராகமான பைரவி   என்ற இராகத்திலிருந்து வந்தது. பைரவியில்எல்லா ஸ்வரங்களும்  சுத்த ஸ்வரங்களாக இருந்தால் அது சிந்து பைரவி ஆகிறது. சிலர் இதை மிஸ்ர பைரவி என்றும் கூறுவர். சிந்து பைரவி இராகத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற ஒருவர் எந்த இராகத்தையும் சுலபமாக பாடலாம்.

பாடுவதற்கேற்ற  நேரம் : காலை முன் ஜாமம், மற்றும் இரண்டாம் ஜாமம்.

பாடுவதற்கேற்ற மன நிலைகள்: வீர ரசம், உண்மையான கோபம், மற்றும் அனைத்து வகையான உணர்ச்சிகளும்.

இன்று நாம் இதில் திருவாளர்கள் விஸ்வநாதன்-ராமமுர்த்தி, திரு கே வி மகாதேவன் அவர்களின் இசையமைப்பில் வெளி வந்த இரண்டு பாடல்களைப் பாப்போம்.

முதல் பாடல் - பாலும் பழமும் படத்திலிருந்து "என்னை யாரென்று எண்ணி எண்ணி" - மெல்லிசை  மன்னர்களின் இசையில் உருவான பாடல். கண்ணை இழந்த ஒருவர் தனது மனைவியின் பிரிவாற்றாமையால் வருந்தி தனக்குப் பணிவிடை செய்யும் செவிலியிடம் பாடும் பாடல்.

இடையிசையாக ஷெனாய், அக்கார்டியன், கிடார் கார்ட்ஸ் ஆகியவற்றை உபயோகித்து நாயகனின் சோகமான மனநிலையை  நன்கு வெளிப்படுத்தியிருப்பார்கள் இரட்டையர். சரணத்தின் வரிகளுக்கு இடையே வரும் ஷெனாய் சிற்றிசையும் வெகு நேர்த்தியாக இருக்கும். அளவோடு கூடிய தப்லாவின் தாள ஒலி, தேவையான இடங்களில் சிறு சிறு புல்லாங்குழல் இசை, என்று அளவுடன் கூடிய நேர்த்தியான இசையமைப்பு. பாடல் வரிகளும் நாயகனின் மன நிலைக்கு ஏற்றாற்போல்

 "கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா"

என்று அற்புதமாக இயற்றப் பட்டிருக்கும், அதற்கு ஆறுதல் கூறும் விதமாக செவிலி பாடும் பாடல் வரிகளும் மிகவும் எளிமையாகவும் பொருத்தமாகவும், இருக்கும். டி எம் எஸ், பி சுசீலா ஆகியோரின் பங்களிப்பும் இந்தப் பாடலுக்கு ஒரு பக்க பலம். கவிஞரின் வார்த்தைகளோ சொல்லில் அடங்காது. சிந்து பைரவி ராகத்தில் ஒரு சோக ரசத்தைப் பிழிந்து தரும் பாடல் இது.

அடுத்து திரு கே வி மகாதேவன் இசையில், முற்றிலும் மாறுபட்ட, ஒரு நாட்டுப் புறப் பாடல், ஒரு விவசாயி வயல்வெளியில்  பாடுவது போல அமைந்த பாடல். மக்களைப் பெற்ற மகராசி என்ற படத்திலிருந்து "மணப்பாறை மாடு கட்டி" என்ற பாடல்.
விவசாயத்திற்கு புகழ்பெற்ற ஊர்களின் பெயரில் வரிகளை அமைத்து இயற்றப் பட்ட பாடல். சிறிதும் ஆடம்பரமின்றி, அமைதியான களத்துமேட்டு சூழ்நிலையில், டேப்பு, கடம், வயலினை, கொட்டாங்கச்சி வயலின் போன்று வாசித்தல், ஆகியவற்றின் மூலம் ஒரு கிராமிய மணம் கமழும் பாடலாக இசையமைக்கப் பட்ட பாடல். பாடலின் நடுவே வரும் வசனமும், நாமும் வயலில் கூடவே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. "பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே" என்ற இடத்தில் வரும் ஆலாபனை பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது. சிந்து பைரவி இராகத்தை நாட்டுப் புறப் பாடல்களுக்கும் உபயோகிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டிய  முதல் பாடல் இது.

மற்றும் இந்த இராகத்தில், |உனக்கென்ன மேலே நின்றாய்" - சிம்லா ஸ்பெஷல் - எம் எஸ் வி, "சித்தமெல்லாம் எனக்கு சிவ மயமே" - திருவருட்செல்வர், "கொஞ்சும் கிளியான பெண்ணை" - கூண்டுக்கிளி, "ஒன்றானவன், உருவில் இரண்டானவன்" கே வி மகாதேவன் இசையில் அமைந்த பாடல்கள், இளையராஜா இசையில் (சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்) அன்னக்கிளியே உன்னைத் தேடுதே - அன்னக்கிளி, என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன், கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - புதுப் புது அர்த்தங்கள் போன்ற சில,

ஹிந்தியிலிருந்து இரண்டு பாடல்கள் குறிப்பிடுகிறேன். "ஜீனா யஹான், மர்ணா யஹான்" மேரா நாம் ஜோக்கர், ஷங்கர் ஜெய்கிஷன் இசையில். "பர் பாத் கே இஸ் பர், பர் பாத் கே உஸ்  பர்" - ரஃபி, லதா, சர்கம் படத்திலிருந்து, லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசையில்.

புகழ்பெற்ற மிலே சுர் மேரா துமாரா பாடலும் சிந்து பைரவி இராகத்தில்தான் அமைக்கப்பட்டது.

பிறிதொருநாள் இன்னொரு இராகத்துடன் சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.

ஜெய்ஹிந்த்!   
மத்தியமாவதி இராகம் 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். இது ஒரு சுத்த கர்னாடக இராகம். இது திரிஸ்தாயி இராகம் என்பதுடன் இது ஒரு புராதன இராகம் ஆகும். தேவாரப் பண்களில், செந்துருத்தி என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது. இது பாடவேண்டிய காலம் நண்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம். இந்த இராகத்தை கச்சேரி, பஜனை, காலஷேபம், நாடகம் முதலிய நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடி முடிக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகின்றது.

இன்று மெல்லிசை மன்னரின் இசையில் அமைந்த, "முத்துக்களோ கண்கள்" என்ற பாடலைப் பற்றிப் பார்ப்போம். இடம் பெற்ற படம் - நெஞ்சிருக்கும் வரை, பாடலை இயற்றியவர் - கவியரசர்.

கிடார், சிதார், புல்லாங்குழல் மூன்றும் சேர்ந்த முன்னிசையுடன் பாடலின் பல்லவி துவங்குகிறது.

"முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்"
இதில் தித்திப்பதோ என்ற இடத்தில் டி எம் எஸ் தித்திப்பதோ ..ஓ..ஓ..ஓ.. என்று மெருகூட்டும் இடம் அருமை.
"சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை" என்று டி எம் எஸ் முடித்தாதும், சுசீலா அவர்கள் சிறிது உச்ச ஸ்தாயியில் "படித்த பாடல் என்ன" என்று துவங்கும் இடமும் மனத்தைக் கிளரச் செய்கின்றது. பல்லவியில் தப்லாவின் ஒலியை சற்றே உயர்த்தி வாசிப்பதும் பாடலுக்கு அழகூட்டுகிறது.


சரணங்களுக்கு முன் அக்கார்டியன், சிதார், குழல்  மூன்றும் சேர்ந்த இசை மனதை வருடுவதாக உள்ளது. பாடலை நிறைவு செய்யும் இடத்தில் சுசீலாவின் குரலில் வரும் ஹம்மிங்கும் கூடவே ஒலிக்கும் குழலும் சிறிது சிறிதாக மங்கிக் கொண்டே வந்து பாடல் நிறைவுறும். இது ஒரு கனவுக் காட்சி. பாடல் முடிந்ததும் நாமும் ஒரு இனிய கனவிலிருந்து விழித்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது மெல்லிசை மன்னரின் இசை.

இந்த இராகத்தில் அமைந்த மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் சில:
"ஜனார்தனா, ஜெகன்னாதா - மீரா - எஸ் வி வெங்கட்ராமன்
"திருமால் பெருமைக்கு" - திருமால் பெருமை, கே வி மகாதேவன் 
"பொய்யின்றி மெய்யோடு நெய்  கொண்டு போனால்" -சரணம் ஐயப்பா - சந்திரபோஸ்
"இது குழந்தை பாடும் தாலாட்டு" - ஒரு தலை இராகம் -
டி ராஜேந்தர்
"ஆகாய கங்கை - தர்ம யுத்தம், "தாகம் எடுக்கிற நேரம்" - எனக்காகக் காத்திரு, "என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்" - அழகே உன்னை ஆராதிக்கிறேன், "கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்" - காற்றினிலே வரும் கீதம், "நீதானே என் பொன் வசந்தனம்" - நினைவெல்லாம் நித்யா, "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு" - கொடி பறக்குது, "தாலாட்டு, பிள்ளை  என்னை தாலாட்டு" - அச்சாணி, "துள்ளி துள்ளி நீ பாடம்மா" - சிப்பிக்குள் முத்து, "கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்" - தென்றலே என்னைத் தோடு, "பூப்பூக்கும் மாசம் தை மாசம்" - வருஷம் பதினாறு, ஆகியவை இளையராஜாவின் இசையில்.

மீண்டும் ஒரு இராகத்துடன் மற்றொருநாள் சந்திப்போம்,
நன்றி! வணக்கம்.
ஜெய்ஹிந்த்!







கல்யாணி (மெச்ச கல்யாணி) கர்நாடக இசையின் 65வது மேளகர்த்தா இராகம். ஹிந்துஸ்தானி இசையில் இது யமன் தாட் ராகத்தை சேர்ந்ததாகும். கல்யாணியும் யமனும், ஒரே இராகத்தின் இரண்டு பெயர்கள் என்று சொல்வார்கள். ஆனால் யமன் கல்யாணி இவற்றிலிருந்து சிறிது வேறுபட்டது எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம். இந்துஸ்தானி இசையில் இது முதலாகக் கற்றுத் தரப்படும் இராகம் ஆகும்.

இன்று இந்த இராகத்தில் எம் எஸ் வி இசையமைத்த "கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா, கிருஷ்ணா" என்ற பாடல் - தெய்வ மகன் என்ற படத்திலிருந்து. பாடலை இயற்றியவர் - கவியரசர் கண்ணதாசன்.

அருமையான சிதார் முன்னிசையுடன், TMS இன் உருக்கமான குரலுடன் பாடல் துவங்குகிறது.

 "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
என்று மெதுவாக துவங்கி மறுபடியும்

"கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா (சிறு சிதார் இசை)
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா 
சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தை  தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

புல்லாங்குழல் சிறு இசையுடன் கூடிய அற்புதமான சிதாரின்  இடையிசை சரணம் துவங்குமுன்

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை (புல்லாங்குழல் சிறு இசை)
ஓரிடம் நீ கொடுத்ததாய் கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழவிடு
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

இங்கு குழலும் சிதாரும் கலந்த இனிமையான இடையிசை

நீ உள்ள சன்னதியே   கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா
கோவிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
(குழல் சிறு இசை)

இங்கு குழல் சிறு இசை பின் சிதாரின் இடையிசையுடன் TMS இன் கிருஷ்ணா  ஆஆஆ கிருஷ்ணா ஆ ஆ ஆ என்று ஒரு சிறு ஆலாபனையுடன் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒரு சிறு இறக்கத்துடன் பாடுவார்

எண்ணை இல்லாதொரு தீபம்  எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணிமை போலெமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா

இதில் ஒவ்வொரு வரியின் முடிவிலும் கோவில் மணியோசை ஒலிக்கும். பின் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
என்றபடி ஒரு சிதாரின்  இசையுடன் முடித்து விட்டு அதை கீழே வைத்து விட்டு சிவாஜி தனது குருவான நாகையாவை நோக்கி சென்று கொண்டே

"கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா"
என்று பாடி முடிப்பார். பாடல் நிறைவுறும். ஆனால் பாடலின் நிறைவுப் பகுதியில் எதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை இசையாலேயே  உணர்த்தியிருப்பார் மெல்லிசை மன்னர்  இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள், TMS, சிவாஜி, நாகையா ஆகியோர் .  நெடுநேரம் நமது நெஞ்சங்கள் கனத்த அமைதியுடன்  இருக்கும் இந்தப்  பாடலை கேட்டால்.  கேளுங்கள்,அனுபவியுங்கள்.

இந்த இராகத்தில் அமைந்த  மற்ற சில பாடல்கள்:

"மஞ்சள் வெயில்  மாலையிலே" - காவேரி - ஜி ராமநாதன்
"சிந்தனை செய் மனமே" - அம்பிகாபதி - ஜி ராமநாதன்
"அமுதும் தேனும் எதற்கு" - தை பிறந்தால் வழி பிறக்கும் - கே வி மகாதேவன்
"தொரகுணா இட்டுவண்டி சேவா" - சங்கராபரணம் - கே வி மகாதேவன் 
"துணிந்த பின் மனமே" - தேவதாஸ் -கண்டசாலா
"ஆடும் அருள் ஜோதி" -  மீண்ட சொர்க்கம் - சலபதி ராவ்
"உந்தன் பொல்லாத்தனத்தை என்ன சொல்வேன் கண்ணா" - பெண் - ஆர் சுதர்சனம்  
"முகத்தில் முகம் பார்க்கலாம்" - தங்கப் பதுமை - விஸ்வநாதன் ராமமூர்த்தி
"தானே தனக்குள் சிரிக்கின்றாள்" - பேரும் புகழும்-எம் எஸ் விஸ்வநாதன்
"மஞ்சள் வெயில்  மாலையிட்ட பூவே" - நண்டு - இளையராஜா
"வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்" - காதல் ஓவியம் - இளையராஜா
"தேன் சிந்துதே வானம்" - பொண்ணுக்கு தங்க மனசு - ஜி கே வெங்கடேஷ்
"ஆழ்கடலில் முத்தெடுத்து" - ராகம் தேடும் பல்லவி - டி ராஜேந்தர்

நிறையப் பாடல்கள் உள்ளதால் ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் இரண்டு பாடல்கலுக்கு மேற்படாமல் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஹிந்தி திரைப் படங்களிலிருந்து இரண்டு பாடல்கள்"
"மன்  ரே து காஹே  ந தீர் தரே" - ரஃபி - சித்ரலேகா - ரோஷன்
"ஜிந்தகி பர் நஹி"  - ரஃபி - பர்சாத் கி ராத் - ரோஷன்

பிறிதொரு நாள் மற்றொரு இராகத்துடன் சந்திப்போம.
நன்றி, வணக்கம் .
ஜெய்ஹிந்த்!


இன்றைய இராகம் சுபபந்துவராளி :

சுபபந்துவராளி இராகம் கர்நாடக இசையின் 45 வது மேளகர்த்தா இராகமாகும்.  இந்த இராகத்திற்கு சிவபந்துவராளி என்றும்  பெயர் உண்டு. இந்துஸ்தானி இசையில் தோடி தாட் என்று பெயர்.

சுபபந்துவராளியின் ஜன்ய இராகங்கள் இவை.

பானுகீரவாணி, ராமகலி, நடனவேளாவளி ,ரத்னகர்ப்ப, புஷ்கரணி, மாயாதாரிணி, அம்போதம், நாட்டிகா ஆகியவை.

இது கருணை சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.

இந்த இராகத்தை மெல்லிசை மன்னர் எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள் என்று காண்போம்.

பாடல் இடம் பெற்ற படம் - லக்ஷ்மி கல்யாணம். பாடல் "ராமன் எத்தனை ராமனடி" பாடியவர் - பி சுசீலா. இயற்றியவர் - கவிஞர் கண்ணதாசன்.

இந்தப் பாடல் பெண் பார்க்கும் படலத்தில் பாடுவதாக அமைந்தது. முதலில்  "ராமன் எத்தனை ராமனடி" என்று சுசீலா பாடியதும்  ஒரு சிறு சிதாரின் இசை. பின் அதே வரியை அவர் மீண்டும் பாடியதும் ஒரு நீண்ட இனிய சிதாரின் இசை.
பின் 
"ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி"
என்று முழுப் பல்லவியும் ஆரம்பிக்கிறது.

தொடர்ந்து இராமனின் தோற்றத்தையும் அவனது பண்புகளையும் பற்றிப் பாடும் வரிகளுக்கு இனிமையான சிதார், புல்லாங்குழல், தப்லா ஆகிய  கருவிகளின்  பின்னணியில் மிதமான நடையில் தொடரும் பாடல்,
"வம்சத்திற்கொருவன் ரகுராமன்" என்று ஆரம்பிக்கும்போது சற்று வேகம் பிடித்து, "ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் , நம்பின பேருக்கு எது பயம்" என்ற வரிகளில் முழு வேகத்துடன் ஏறக்குறைய  பஜனை நடையில் பயணித்து ஒரு பக்திப் பாடலாகவே மாறி விடுகிறது. பாடல் முடியும்போது படத்தில் வருவது போன்றே நாமும் பக்திப் பரவசத்தில் மூழ்கும்  நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது மன்னரின் இசை.

அடுத்த பாடல் மெல்லிசை மன்னர்களின் இசையில், ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் வரும் "உன்னை நான் சந்தித்தேன்" என்ற பாடல்.

இதைக் காதல் விரகத்தில் பாடும் பாடலாகவும் எடுத்துக் கொள்ளலாம், காதலனின் கருணையை வேண்டிப் பாடும் பாடலாகும் எடுத்துக் கொள்ளலாம்.

"உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்"
என்று சுசீலா தொடங்கும்போது உடன் ஒலிக்கும் நாக்ராவின் ஒலி, சரணத்திற்கு  முன் குழலும் ஷெனாயும் சேர்ந்த இடையிசை, சரணங்களுக்கு நாக்ராவிலிருந்து தப்லாவிற்கு மாறும் தாள நடை, சரணங்களின் இறுதியில் நடையை மட்டுப் படுத்தி முடிக்கும் விதம் அத்தனையுமே மிகவும் அருமையாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப் பட்ட்ருக்கின்றன. பிரிவால் வாடும் காதலர்களின் உள்ளத்தைப் பிழியும் பாடல் இது என்றால் மிகையாகாது.

இன்னும் இந்த இராகத்தில் "பாலும் பழமும் என்ற படத்திலிருந்து. "இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா =
விஸ்வனாதன்-ராமமுர்த்தி", "காலமகள் கண்திறப்பாள் சின்னையா" - ஆனந்த ஜோதி - MSV - TKR, "வைகறையில் வைகைக் கரையில்" - பயணங்கள் முடிவதில்லை,  "ஆயிரம் தாமரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை, "மானே தேனே கட்டிப் புடி - உதய கீதம்" "நிலவே முகம் காட்டு" ஆகிய பாடல்கள் இளையராஜாவின் இசையிலும் உள்ளன.

இன்னும் ஒரு நாள் இன்னொருஇராகத்துடன்  சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.
ஜெய்ஹிந்த்!






இன்றைய இராகம் மாயாமாளவகௌளை:

மாயாமாளவகௌளை கர்நாடக இசையின் 15 வது மேளகர்த்தா இராகம் ஆகும். இது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம். எப்போதும் பாடத்தகுந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்கு பைரவ்  தாட் எனப் பெயர்.

மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகங்கள் இவை.

பரசு, சாவேரி, கௌளிபந்து, நாதநாமக்கிரியா, பௌளி, மலஹரி, கௌளை, ரேவகுப்தி, ஜகன்மோகினி, குர்ஜரி, மேச்சபௌளி, சிந்துராமக்கிரியா, பூரணபஞ்சமம், குண்டக்கிரியா, மேகரஞ்சனி, கௌரி, மித்திரகிரணி, லலிதகௌரி, கிருஷ்ணவேணி, நேப்பாளகௌள, பாஞ்சாலி, ருக்மாம்பரி, மதராங்கப்பிரியா, கோபிகாகுசும, தாரவம், கரக, பாவினி போன்றவை.

இது கற்றுக் கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் மிகவும் சுலபமான இராகம் ஆகும், அதனாலேயே கர்நாடக இசையில் ஆரம்பப் பாடல்கள் இந்த இராகத்திலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன.

இன்று இந்த இராகத்தில் அமைந்த விஸ்வநாதன்-ராமமுர்த்தி அவர்களின் பாடல் ஒன்றைப் பாப்போம். பாடல் - "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா", படம் - ஆலயமணி, பாடியவர்கள் - T M சௌந்திரராஜன், L R ஈஸ்வரி. பாடலை இயற்றியவர் - கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

L R ஈஸ்வரியின் அருமையான ஹம்மிங்குடன் துவங்கும் இந்தப் பாடல், சிதார், தபலா ஆகிய வாத்தியங்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.  ஹம்மிங்கிலேயே இராகத்தின் பல்வேறு நிலைகளைக் கோடிட்டுக் காண்பித்திருப்பது மிகவும் அருமை. பல்லவி முடிந்து ஒவ்வொரு சரணத்தின் துவக்கத்திலேயும் மீண்டும் ஹம்மிங் ஒலிப்பது நம்மை வேறு ஒரு உலகத்திற்கே அழைத்து சென்று விடுகிறது. சரணங்களின் முடிவிலும், ஹம்மிங்குடன் முடிப்பதும் மிகவும் இனிமை. பாடலின் இறுதியில் பல்லவியைப் பாடி முடிதததும் ஹம்மிங்கை "ஆ" என்று ஒரே சொல்லில் நீட்டி முடித்திருப்பது மிகவும் இனிமை. பாடலின் வரிகளும் மிகவும் இனிமை. காதலியான மனைவியை காவிய நாயகிகளுடன் ஒப்பிட்டு வரிகள் அமைத்திருப்பது கவிஞருக்கே கைவந்த கலை. பாடகர்களும் தங்களது பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். இந்தப் பாடல் செவிக்கு ஒரு விருந்து.

மேலும் இந்த இராகத்தில், G ராமநாதன் அவர்களின் "நிலவே நீ இந்த தூது செல்லாயோ" - பட்டினத்தார் திரைப்படம், "அலைமகள் மலைமகள்" - MSV-TKR - நவராத்திரி,  "நீ நினைத்த நேரம் எல்லாம் வர வேண்டுமோ" - MSV - பெண்ணை  நம்புங்கள், "அழகான பொண்ணு நான்" - எஸ் தக்ஷிணாமூர்த்தி  - அலிபாபாவும் 40 திருடர்களும், "காதல் கவிதைகள் படித்திடும் நேரம்" - கோபுர வாசலிலே, "கண்ணின் மணியே கண்ணின் மணியே" -  மனதில் உறுதி வேண்டும், "குயிலைப் புடிச்சு கூண்டில் அடைச்சு" - சின்னத் தம்பி, "மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்" -  முதல் இரவு, "பூங்கதவே, தாள் திறவாய்" - நிழல்கள் போன்ற பாடல்கள் இளையராஜாவின் இசையிலும், "கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்" - டி ராஜேந்தர் - ஒரு தலை ராகம்,  ஆகிய பாடல்களும் உள்ளன. பட்டியல் பெரியதாக இருப்பதால் நான் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் .

ஹிந்தித் திரைப் பட பாடல்களில் இரண்டை  மட்டும் குறிப்பிடுகிறேன்.
சிதரோன் கி மெஹ்பில் - லதா மங்கேஷ்கர், கீதா தத், உரான்  கடோலா, நௌஷத் இசையில்;
அப்னா ஹை ஃபிர் பி அப்னா - ரஃபி, பாய் பாய், மதன் மோகன் இசையில்.

மீண்டும் ஒரு நாள் மற்றொரு இராகத்துடன் சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.

ஜெய்ஹிந்த்!
இன்றைய இராகம் மோகனம்
மோகனம் 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம்  விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.

இது திரிஸ்தாயி (மூன்று ஸ்தாயியிலும் பாடக் கூடிய) இராகம் ஆகும்.

இது ஒரு புராதன இராகம் ஆகும். எல்லா உருப்படி வகைகளையும் இந்த இராகத்தில் காணலாம். சுலோகங்களும், விருத்தங்களும் பாடுவதற்கேற்ற இராகம் ஆகும். இது ஒரு வர்ணனைக்குரிய இராகம் ஆகும். இசை நாடகங்களிலும், நிருத்திய நாடகங்களிலும் காணப்படும் பிரசித்த இராகங்களில் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலும் இரவின் முற்பகுதியில் (6 லிருந்து 9 வரை) பாடுவதற்கேற்ற நேரம், இந்த இராகத்திற்கு.

மனிதவர்க்கத்துக்கு தெரிந்த மிகப் பழைய இராகம் இது ஆகும். இந்த இராகத்தில் வரும் ஸ்வரங்கள் ஷ்ட்ஜ - பஞ்சம முறையில் முதன் முதலில் தோன்றும் ஸ்வரங்களாகும். இது தொன்று தொட்டு எல்லா நாட்டு இசைக் கலைஞர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆதிவாசிகளின் இசையிலும் பாமரமக்கள் இசையிலும் கூட இவ்விராகம் வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்துஸ்தானி இசையில் பூப் என்பது இவ்விராகமே.
இவ்விராகத்தின் ரிஷப, காந்தார, பஞ்சம, தைவத, மூர்ச்சனைகளே முறையே மத்தியமாவதி, இந்தோளம், சுத்தசாவேரி, உதயரவிச்சந்திரிகா ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன. முல்லைப்பண் எனக் குறிக்கப்படுவது மோகன இராகமே ஆகும்.

" திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" எனச் சிறப்புப் பெற்ற மாணிக்கவாசகரின் திருவாசகங் கூட தொன்று தொட்டு இந்த இராகத்தில் பாடப்பட்டு வருவது இவ்விராகத்தின் சிறப்பை உணர்த்துகின்றது.

"MIDDLE EAST" எனப்படும் மத்தியக் கிழக்கு நாடுகளின் பாரம்பரிய இசை பெரும்பாலும் மோகன ராகத்திலேயே அமைந்துள்ளது.

இன்றும் நாம் மெல்லிசை மன்னர் இந்த இராகத்தில் இசையமைத்த இரு பாடல்களைப் பாப்போம்.

முதல் பாடல், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் "பன்சாயீ, காதல் பறவைகள், பாடும் கவிதைகள்" என்ற பாடல். பாடல் பாங்காக் நகரில் நடைபெறுவது போல் காட்சியமைப்பு. அதற்கேற்றற்போல் மன்னா, இசைக்கரூவிகளை கையாண்டிருக்கும் விதம் நம்மை பாங்காக்கில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வரிகளை பிரித்துக் கையாண்டிருக்கும் விதமும் ஒரு"ORIENTAL SONG" போன்றே தோற்றமளிக்கிறது. பாடல் முழுவதும் இதே பாணியைக் கடைப் பிடித்திருக்கிறார் மன்னார். இதற்கு இவர் நிறைய உழைத்திருக்க  வேண்டும். பாடலை கேட்டு முடித்த பின்னரும், நாம் பாங்காக்கில் படகில் பயணிப்பது போன்றே உணர்வு மிஞ்சுகிறது நமக்குள். அதுவே  மன்னரின் சிறப்பு.

பாடல் இரண்டு. கம்பன்  ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது என்ற படத்திலிருந்து. இது ஆதிக்க மனப்பான்மையுடைய பெண்களின் இயல்பை பற்றிய வர்ணனையாக அமைந்திருக்கிறது. அல்லி ராணியையொத்த நாயகியை நாயகன் வர்ணித்துப் பாடும் பாடல்.  "அம்பு விழி என  ஏன் சொன்னான் அது பாய்வதினால்தானோ, அவள் அருஞ்சுவைப் பால் என ஏன் சொன்னான்  அது கொதிப்பதனால்தானோ" என்ற கவிஞரின் வரிகளில் நாயகியின் ஆளுமைத் தன்மை நன்குபுலப்படுகிறது. இந்தப் பாடலுக்கு ஆரவாரமில்லாது இசையமைத்து பாடலுக்கு அழகூட்டியிருக்கிறார் மன்னர்.

மேலும் "இந்த காற்று வெளியிடைக் கண்ணம்மா", - கப்பலோட்டிய தமிழன், "கண்மணியே காதல் என்பது" - சிட்டுக் குருவி ஆகிய பாடல்களும் மோகனத்தில் அமைந்த சில பாடல்கள்.  மதுரை மணி ஐயரின் " கருணை  நிலவு பொழி வதனம"என்ற பாடலும் மோகனத்தில் அமைந்தது.

இந்த இராகத்தில் (BHUP) இரண்டு ஹிந்திப் பாடல்கள்: "சயனோரா, சயனாரோ, - லவ் இன் டோக்யோ, லதா மங்கேஷ்கர்.
"கௌன் ஹை  தும் கௌன் ஹை வோ", ஸ்திரீ என்ற படத்திலிருந்து, மகேந்திர
 கபூர் ஆகியவை.

இன்னொரு நாளில் இன்னொரு இராகத்துடன் சந்திப்போம்.
நன்றி! வணக்கம்,

ஜெய்ஹிந்த்!
இன்றைய இராகம் ஆபோகி. ஆபோகி என்றால், ஆடம்பரமான, அற்புதமான, தீவிர முயற்சி என்று பொருள். அபோகி என்று இதை சொல்வது தவறாகும்.

பாடுவதற்கேற்ற நேரம்: இரவின் இரண்டாவது கால் பகுதி, ஏறக் குறைய நள்ளிரவு நேரம்.

பாடுவதற்கேற்ற  நிலைகள்: விரகம், சிருங்காரம், பக்தி ஆகிய மன நிலைகள்.

இந்த இராகத்தில் மெல்லிசை மன்னர்கள் இணைந்தும், எம் எஸ் வி அவர்கள் தனியாகவும் வடித்த பாடல்களில் மூன்றைப் பற்றி இன்று காண்போம்.

முதல் பாடல் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் வரும், நானன்றி யார் வருவார் என்ற பாடல். எனக்குத் தெரிந்து மத்திய ஸ்தாயில் டி ஆர் மகாலிங்கம் துவங்கும் ஒரு பாடல் இது. உடன் பாடியவர் A P கோமளா அவர்கள், காதலர்களின் சிறு கேலியையும் அதனால் ஏற்படும் ஊடலையும் பின் கூடலையும் விளக்கும் பாடல் இது. இடையே வரும்  சிறு  சிறு புல்லாங்குழல், மற்றும் வீணையின் ஒலிகள் மனதுக்கு மிகவும் ரம்மியமானவை. பாடலின் முடிவில் இருவரும் ஒன்றாக இணைவது தமிழ் சினிமாவிற்க்கே உரித்தான ஒரு குணம் ஆகும். இரவில் கேட்டால் கண்டிப்பாக இளம் காதலர்களிடையே ஒரு இன்ப  நிலையை ஏற்படுத்தக் கூடிய பாடல் இது. தங்களது ஆரம்பக் காலத்திலேயே மெல்லிசை மன்னர்கள் இந்த அளவு தரமானதொரு இசையை வழங்கியிருப்பது பாராட்டக் கூடிய அம்சமாகும்.

பாடல் இரண்டு: " தங்க ரதம் வந்தது வீதியிலே" என்ற பாடல், கலைக்கோயில் என்ற படத்திலிருந்து. இதன் சிறப்பம்சம், பாலமுரளிக்ருஷ்ணா அவர்களையும், வீணை சிட்டிபாபு அவர்களையும் முதன்முதலாக தமிழ்த் திரைசியுலகிற்கு எம் எஸ் வி அறிமுகப் படுத்தியது. திரு பாலமுரளிக்ருஷ்ணாவின் ஆரம்ப "ஹம்மிங்கே" அவரது வரவுக்கு கட்டியம் கூறி விடுகிறது, பின் அவர் தங்கரதம் வந்தது வீதியிலே  என்று நிறுத்தி துவங்கும்போது, நாம் காதில் பாரதி கூறியது போல் தேன் வந்து பாய்கிறது.  அகார ஆலபனைகளின்போது அவரது குரல் வெகு அனாயாசமாக சஞ்சாரம் செய்து பாடலுக்கு ஒரு முழுமையான் கர்நாடக இசை அந்தஸ்தை அளிக்கிறது. உடன் பாடும் திருமதி சுசீலாவின் குரலும் தேனை ஒத்த குரல். திரு சிட்டி பாபு அவர்களின் வீணை இசையோ, வர்ணிக்க இயலாது. அவ்வளவு இனிமை. மொத்தத்தில் இந்தப் பாடல் ஒரு அமுத கானம் என்றால் மிகையாகது. அந்த அளவு உயர்ந்த தரத்தில் இசையமைத்திருப்பார் மெல்லிசை மன்னர் இந்தப் பாடலுக்கு.

பாடல் மூன்று. "வணக்கம், பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே"  என்ற பாடல். அவன் ஒரு சரித்திரம் படத்திலிருந்து. துவக்கத்தில் வெஸ்டர்ன் ஜாஸ் இசை வடிவத்தில் ஆரம்பித்து, பின்னர் சுசீலாவின் இனிமையான ஹம்மிங்குடன் துவங்குகிறது பாடல். அவர் பாடத் துவங்கியவுடன், நடிகர் திலகத்தின் முகத்தில் தோன்றும் பலவித உணர்ச்சிக் கலவைகளின் வெளிப்பாட்டைப் பாராட்டியே ஆக வேண்டும், வெளிநாடு சென்று திரும்பியவர் அந்த நாட்டு நாகரீகத்தின்படி தோற்றமளிப்பார்  என்று பலரும் நினைக்கையில், அவர் நமது தமிழ்ப் பண்பாட்டின்படி புடவையுடன் தோன்றி தமிழில் பாடும்போது தனது ஒரு புருவத்தை உயர்த்தி தனது வியப்பை வெளிக் காட்டுவார். இந்தப் பாடலில் குழலும், வயலினும், சிதாருடன் இணைந்து அழகாக கையாளப் பட்டிருக்கும்.  சரணத்தின் முடிவில் வரும் குழலிசை மனதை மயிலிறகால் வருடும்,

இராகங்களை கையாளும் விதத்தில் மெல்லிசை மன்னர்களின் நேர்த்தியைக் கண்டீர்கள். பிறிதொரு நாளில் மற்றொரு இராகத்துடன் உங்களை சந்திக்கிறேன்.

நன்றி! வணக்கம்.