Saturday, 24 January 2015

இன்றைய இராகம் ஹரிகாம்போஜி:
ஹரிகாம்போதி அல்லது ஹரிகாம்போஜி கர் நாடக இசை முறையில் 28வது மேளகர்த்தா அல்லது பிறப்பு (ஜனக) இராகமாகும். இது பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 4 வது மேளம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண (எழுநிறைவற்ற) மேள பத்ததியில் இவ்விராகத்திற்கு அரிக்கேதாரகௌள என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் இதற்கு கமாஜ் என்று பெயர்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும்.
இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் வாசஸ்பதி ஆகும்.
பண்டைத்தமிழிசையில் சுத்த மேளம் ஹரிகாம்போஜி இராகமே. இது "செம்பாலைப் பண்" என்றழைக்கப்பட்டது.
இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக நடபைரவி, தீரசங்கராபரணம், கரகரப்பிரியா, ஹனுமத்தோடி, மேசகல்யாணி ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.

பாடுவதற்கேற்ற நேரம்: இரவின் 2 ஆவது ஜாமம். தும்ரியாக இருந்தால் முதல் ஜாமம்.

பாடுவதற்கேற்ற மனநிலைகள்: இளவயது சந்தோஷ நினைவுகள், நம்பிக்கை மற்றும் ஆசை தரும் நிறைவு.

ஹரிகாம்போதியின் ஜன்ய இராகங்கள்:

பகுதாரி, ஈசமனோகரி. கமாஸ். துவிஜாவந்தி, நாராயணகௌளை, சஹானா, சாயாதரங்கிணி, காம்போதி, காப்பிநாராயணி, நவரசகன்னட, செஞ்சுருட்டி, கேதாரகௌளை, யதுகுலகாம்போதி, நாட்டக்குறிஞ்சி, ரவிச்சந்திரிகா, சரஸ்வதிமனோகரி, சுத்ததரங்கிணி, சாமா, சுருட்டி, நாகஸ்வராவளி, குந்தளவராளி, மோகனம், உமாபரணம், ஹிந்துகன்னட, கோகிலத்வனி, கானவாரிதி, மாளவி,, கதாதரங்கிணி, பலஹம்ச, சாயாநாட்டை, சுபூஷணி, விவர்த்தனி, பிரதாபவராளி, ஹிந்துநாராயணி, உழைமாருதம், அம்போஜினி, ஹிந்தோளகாமினி, சாவித்திரி (இராகம்), வீணாவாதினி, ராகவினோதினி, தைவதச்சந்திரிகா, ஆன்தாளி போன்றவை.

இந்த இராகத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்த 0ரு பாடலை இன்று காண்போம்.

பாடல் "ஒரே பாடல் உன்னை அழைக்கும்" - எங்கிருந்தோ வந்தாள் என்ற படத்திலிருந்து. பாடியவர் -டி எம் சௌந்திரராஜன், இயற்றியவர் - கவியரசர்.

இந்தப் பாடல் தன காதலியின் திருமண வரவேற்பில் காதலன் தங்களது கடந்த கால காதல் வாழ்வை நினைத்து பாடும் பாடல்.  . இரக்க பாவம் நிறைந்த பாடல்.

டி எம் சௌந்தரராஜனின் நெஞ்சை உருக்கும் ஹம்மிங்குடன் துவங்கும் இந்தப் பாடல் பல்லவி முடிந்ததும் சரணத்திற்கு முன் வயலின்களின் அணிவகுப்பு, அத்துடன் கிடார் strings, மீண்டும் அத்துடன் சேரும் வயலின், இவற்றிற்கு லீட் தருவது போல் குழலின் இசை என ஒரு உருக்கமான இசைக்கோர்வையுடன் பயணிக்கிறது இடையிசை. சரணங்களுக்கு ஊடே மெல்லிய ஷெனாய் இசைக்கப்பட்டிருப்பது பாடலின் சூழ்நிலைக்கு மேலும் வலுவூட்டுகிறது. சரணங்களின் முடிவில் பாடகர் கடைசி வரியின் முடிவில் இழுத்து நிறுத்துவது, அத்துடன் ஷெனாய் இழைவது என்று ஒரு உருக்கமான இசை விருந்தை அளித்திருக்கிறார் மன்னர்.

பாசமலர் என்ற படத்தில் வரும் " மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்"  என்ற பாடல் இதன் சாயலில் அமைக்கப் பட்டுள்ளது. புதிய பறவை படத்தில் வரும் "உன்னை ஒன்று கேட்பேன்" - சுமதி என் சுந்தரி படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ", தங்கப் பதக்கம் படத்தில் வரும் "சுமைதாங்கி சாய்ந்தால்",  பெண்ணை நம்புங்கள் படத்தில் வரும் "நீ நினைத்த நேரம் எல்லாம் வர வேண்டுமோ"; பாபு படத்தில் "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே", குழந்தையும் தெய்வமும் படத்தில் "அன்புள்ள மான்விழியே"; வறுமையின் நிறம் படத்தில் வரும் "சிப்பி இருக்குது  முத்தும் இருக்குது"; அவள் ஒரு தொடர்கதை படத்தில் "கடவுள் அமைத்து வைத்த மேடை" ஆகிய பாடல்கள் எம் எஸ் வி இசையில் அமைந்துள்ளன.

இந்த இராகத்தில் அமைந்த மேலும் சில பாடல்கள்:

ஒருநாள் ஒரு பொழுதாகிலும் - திருநீலகண்டர் - பாபநாசம் சிவன்
சிதம்பர நாதா திருவருள் தா தா - திருநீலகண்டர் - பாபநாசம் சிவன்
ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு - ஏணிப்படிகள் - கே வி எம்
என்னவென்று சொல்வதம்மா -ராஜகுமாரன் - இளையராஜா
கண்ணுபடப் போகுதைய்யா - சின்னக் கவுண்டர் - இளையராஜா
நானே நானா யாரோதானா - அழகே உன்னை ஆராதிக்கிறேன் - இளையராஜா
ஒருநாள் ஒரு கனவு - கண்ணுக்குள் நிலவு - இளையராஜா
பட்டுவண்ண சேலைக்காரி - எங்கேயோ கேட்ட குரல் - இளையராஜா
பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான் - வருஷம் 16 - இளையராஜா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - இதயம் - இளையராஜா
சாந்துப் பொட்டு, சந்தனப் பொட்டு - தேவர்  மகன் - இளையராஜா
கண்ணுக்கு மை அழகு - புதிய முகம் - ஏ ஆர் ரஹ்மான்
உயிரே உயிரே (பல்லவி மட்டும்) - பாம்பே - ஏ ஆர் ரஹ்மான்

நன்றி! மீண்டும் ஒரு இராகத்துடன் வேறொரு நாள் சந்திப்போம். வணக்கம்.
ஜெய்ஹிந்த்!

Wednesday, 21 January 2015

இன்றைய இராகம் நடபைரவி:
நடபைரவி கர்நாடக இசையின் 20 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 வது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இது வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 வது இராகம். இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி  இராகம்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகின்றன.

இதன் க, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22), தோடி (08), மேசகல்யாணி (65), ஹரிகாம்போஜி (28) ஆகிய மேளங்களைக் கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சண்முகப்பிரியா (56) ஆகும்.
ஐரோப்பிய இசையிலும், கிரேக்க இசையிலும் இதற்கு ஈடான இசை அமைப்பு இருப்பதாக தெரிகிறது.

பாடுவதற்கேற்ற நேரம்: காலை 6 மணி முதல் 9 மணி வரை.

பாடுவதற்கேற்ற மன நிலைகள்: பக்தி, சிருங்காரம், கருணை, இரக்கம் போன்றவை.

நடபைரவியின் ஜன்ய இராகங்கள்:

பைரவி, ஆனந்தபைரவி, ஜயந்தஸ்ரீ, சாரமதி, பூர்ணஷட்ஜம், இந்தோளம், மாஞ்சி, மார்க்கஹிந்தோளம், அமிர்தவாஹினி, சுத்ததெசி, ஜிங்களா, ஹிந்தோளவசந்தம், கோபிகாவசந்தம், கமலாதரங்கிணி, திவ்யகாந்தாரி, புவனகாந்தாரி, சுத்தசாளவி, நவரசச்சந்திரிகா, கோமேதகப்பிரியா, பாகீரதி, ரதிபதிப்பிரியா போன்றவை.

இன்று நாம் இந்த இராகத்தில் மெல்லிசை மன்னர்களின் இசையில் உருவான "நினைக்கத் தெரிந்த மனமே" என்ற, ஆனந்த ஜோதி படத்தில் இடம் பெற்ற  பாடலைப் பற்றிப் பார்ப்போம். பாடலைப் பாடியவர் பி சுசீலா, பாடலை இயற்றியவர்., கவிஞர் கண்ணதாசன்.

அக்கார்டியன், வயலின் கலந்த ஒரு முன்னிசையுடன் பல்லவி துவங்குகிறது. "நினைக்கத் தெரிந்த மனமே ...........உயிரே விலகத் தெரியாதா" என்ற பல்லவி வரை பாங்கோஸின் மிதமான நடை தாள வாத்தியமாக உடன் வருகிறது. ஆர்ப்பாட்டம் மிகுந்த ஒரு ஆப்பிரிக்க வாத்தியத்தை ஒரு சோகமான சூழ்நிலைக்கு பயன் படுத்தியுள்ளனர் மன்னர்கள். நிறைய சோகப் பாடல்களில் இந்த வாத்தியத்தை பயன்படுத்தியிருக்கின்றனர்.

சரணத்திற்கு முன்  வரும் ஷெனாய், வயலின் கலந்த இடையிசை நாயகியின் சோகமான மனநிலையை விளக்குவதாக இருக்கின்றது. சரணங்களுக்கு ஊடேயும் சிறு சிறு ஷெனாய் இசை வருவது பாடலுக்கு மெருகூட்டுகிறது. சரணங்களுக்கு, தப்லாவை உபயோகப் படுத்தியிருக்கின்றனர் மன்னர்கள். பாடல் வரிகள் காதலியின், காதலிக்கும்போது இருந்த மனநிலையையும், பிரிவுக்குப் பின் உள்ள மன நிலையையும் நன்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.  பாடலைக் கேட்போர் நெஞ்சில் இரக்கத்தை உருவாக்கும் இசையும், பாடல் வரிகளும் அமைந்துள்ளன.

இந்த இராகத்தில் அமைந்துள்ள வேறு சில பாடல்கள்:

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே - களத்தூர் கண்ணம்மா -
ஆர் சுதர்சன்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே  - புதையல் - எம் எஸ் வி -டீ கே ஆர்
ராகங்கள் 16 உருவான வரலாறு - தில்லு முல்லு - எம் எஸ் வி
ராஜாவின் பார்வை - அன்பே வா -  எம் எஸ் வி
நான் பார்த்ததிலே - அன்பே வா -  எம் எஸ் வி
கண்ணை நம்பாதே - நினைத்ததை முடிப்பவன் - எம் எஸ் வி
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து - நினைத்ததை முடிப்பவன் -
எம் எஸ் வி
நாளை நமதே, நாளை நமதே - நாளை நமதே - எம் எஸ் வி
ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி - இளையராஜா
ஆத்து மேட்டுல ஒருபாட்டு கேக்குது - கிராமத்து அத்தியாயம் - இளையராஜா
அந்தி மழை மேகம் - நாயகன் - இளையராஜா
என் இனிய பொன் நிலாவே - மூடுபனி - இளையராஜா
ஹேய் ஐ லவ் யூ, ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன் - இளையராஜா
இளம்பனித் துளி விழும் நேரம் - ஆராதனை - இளையராஜா
மடை திறந்து பாயும் நதியலை நான் - நிழல்கள் - இளையராஜா
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர - மௌனராகம் - இளையராஜா
ஓ,   பட்டரஃபிளை பட்டரஃபிளை -  மீரா - இளையராஜா

இந்த இராகத்தில் அமைந்த சில ஹிந்திப் பாடல்கள்:

ஏ மேரே ஜிந்தகி ராத் ஜும்லே - லதா மங்கேஷ்கர் - டாக்சி டிரைவர் - எஸ் டி பர்மன்
ராத் நே க்யா க்யா க்வாப் தேகாயே - தலத் மெஹ்மூத் -  ஏக் காவோன் கி கஹானி - சலீல் சவுதுரி
அகர்  முஜ்ஸே முஹப்பத் ஹை - லதா மங்கேஷ்கர் - ஆப் கி பர்சாயியான் - மதன் மோகன் 
டூட்டே ஹுவே க்வாபோனே, ஹம்கோ யே சிகாயா ஹை - ரஃபி -
மதுமதி - சலீல் சவுதுரி

மேலே குறிப்பிட்ட பாடல்கள் யாவுமே கேட்க கேட்கத் திகட்டாதவை. ரசியுங்கள், அனுபவியுங்கள். இன்னொரு நாள் வேறொரு இராகத்துடன் சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.
ஜெய்ஹிந்த்!







  

Tuesday, 20 January 2015

தமிழ்த் திரையுலகின் (சிந்தனை) சிற்பிகள்: 7
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.

வாலி கவிஞர் கண்ணதாசனை தனது மானசீகக் குருவாகக் கொண்டிருந்தவர். கண்ணதாசனுக்கு இணையாக எழுதும் ஆற்றல் படைத்தவர். இவரது பல பாடல்கள் கண்ணதாசன் எழுதியவை என்று பெரும்பாலோரால் கருதப்பட்டன. அதில் அவருக்கு மகிழ்ச்சியே தவிர, சிறிதளவும் வருத்தம் இல்லை.

சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார்.

 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.

மூச்சுத்திணறல் காரணமாக 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார். இவரது மறைவு தமிழ்த் திரையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ்த் திரையுலகின் (சிந்தனை) சிற்பிகள்: 6
முத்தையா என்ற பெயருடைய கண்ணதாசன். பத்திரிகையில் வேலைக்கு சேரும்போது  என்ன பெயரில் எழுதுகிறாய் என்று கேட்டதற்கு, கண்ணதாசன் என்று சொன்னார். அதுவே நிலையாய் ஆயிற்று. ஆரம்பத்தில் அண்ணாதுரையின் மீது கொண்ட ஈடுபாட்டினால் திராவிடக் கட்சிகளில் இருந்தார். பின் அவர்களது கட்சிக்குள் சில தலைவர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று வாழ்வது பிடிக்காமல் 1961 ல் திமுகவை விட்டு வெளியேறினார். ஈ வி கே சம்பத் துவங்கிய கட்சியில் சில காலம் இருந்தார். பிறகு காமராஜரின் அப்பழுக்கற்ற அரசியில் வாழ்க்கையினால் கவரப் பட்டு காங்கிரசில் இணைந்தார். இவற்றில் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் இவர் அதற்கேற்ப பாடல்கள் திரைப் படங்களில் எழுதி குறிப்பிட்ட தலைவர்களுக்கு  புரிய வைப்பார். உதாரணம் - யாரை எங்கே வைப்பது என்று - சிவாஜி கணேசனைப் புறக்கணித்து எம்ஜியாரை கட்சிக்குள் கொண்டு வந்த போது, அண்ணன் காட்டிய வழியம்மா - திமுகவை விட்டு வெளியேறும்போது, அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - காமராஜருடன் இணைய விரும்பியபோது (பாடல் விடு தூது!) நலம்தானா - முதல்வர் அண்ணாதுரை உடல்நிலை சரியில்லாதபோது, மற்றும் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களின் போது எழுதிய பாடல்கள்.

நினைத்த மாத்திரத்தில் பாடல் எழுதும் ஆற்றல் கொண்டவர், மூடப்பட்ட ரயில்வே கேட் திறப்பதற்குள்  ஒரு பாடலை எழுதியவர். மேடையில் பாலசந்தர் பொது மக்கள் முன்னிலயில் தான்  2 மாத காலமாக ஒரு பாடலுக்காக இவர்களிடம் அலைகிறேன் என்று  கூறியவுடன், எம் எஸ் வி மெட்டுப் போட, உடனுக்குடன்  பாடல் எழுதி தந்தவர். - பாடல் ஞாயிறு உண்டு, திங்கள் உண்டு - படம், அவர்கள். ஏழு ஸ்வரங்களுக்குள்  பாடலுக்கு சிறிது அதிக சரணங்கள் எழுதித்தரும்படியும் அதில் நான்கை தான் தேர்வு செய்து கொள்கிறேன் என்று பாலசந்தர் கூற, 64 சரணங்கள் எழுதித் தள்ளி விட்டார், பாலசந்தர் திக்கு முக்காடி இந்த 4 சரணங்களை எடுத்து அவற்றில் ஒன்றை பல்லவியாக வைத்துக் கொண்டார். கண்ணன் மீது கொண்ட காதலால் நிறைய திரைப்  படங்களில் கண்ணன் மேல் பாடல்கள் எழுதியுள்ளார், இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக கிருஷ்ண கானம் என்ற ஒரு தனிப் பாடல் தொகுப்பிற்கு இவர் பாடல்கள் எழுதித்தர, எம் எஸ் வி அவற்றிற்கு இசையமைத்து வெளியிட்டார்.

தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்கள் நிறைய எழுதியுள்ளார்.
அவற்றில் ஒன்றான மயக்கமா கலக்கமா என்ற பாடலில் வரும்  உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற வரிகளைக் கேட்ட கவிஞர் வாலி திரைப்  படங்களில் எழுத வாய்ப்புகள் கிடைக்காமல் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல எண்ணியிருந்தவர், புதியதொரு உத்வேகம் பெற்று, திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதில் தீவிரம் காட்டி பின்பு இவருக்கு இணையான கவிஞர் ஆனார்.  கவிஞர் வாலி, கவியரசருக்கு ஒரு ஏகலைவன். (ஆனால் இவர் அவரிடம் கட்டை விரலைக் கேட்கவில்லை)


கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். இவரது பாடல்களில் பாரதியின் தாக்கம் தெரிவதை நன்கு உணரலாம்.  இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர்.  பஜகோவிந்தத்திற்க்கு உரை எழுத சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுக் கொண்டு பின்னர் உரை எழுதியவர். அந்த அளவு ஒன்றை நன்கு அறிந்த பின்னரே  எழுத வேண்டும் என்பது இவரது கொள்கை.

மனதில் உள்ளதை வெளிப்படையாக கூற என்றுமே தயங்கியதில்லை, தம்மை இகழ்ந்தவர்களுக்கும் கவிதையிலேயே பதில் தருவார். நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  நாம் பாரதியைப் பார்த்ததில்லை, ஆனால் 20ஆம்  நூற்றாண்டின் மகா கவியான கண்ணதாசன் காலத்தில் வாழ்ந்தது நமக்கு பெருமை.


நான் இவரைப் பற்றி சிறிதளவே எழுதியுள்ளேன், இவரைப் பற்றி இன்னும் எழுதவேண்டுமென்றால் இவர் ஏழு ஸ்வரங்களுக்கு, பாடலுக்கு எழுதியது போல், 64 பத்திகள் எழுதினாலும் போதாது. நன்றி! வணக்கம்!
தமிழ்த் திரையுலகின் சிற்பிகள்: 5

கோபி சாந்தா என்கிற மனோரமா. மன்னார்குடியில் பிறந்தவர். முதன் முதலில் கவிஞரால் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் அறிமுகம் ஆனவர். அந்தப் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தாவ். பின்னர் தனது கவனத்தை காமெடியின் பக்கம் செலுத்தி அதில் 40 ஆண்டுகளும்மும் மேல் தன்னிகரற்ற நடிகையாக விளங்கினார். 60களில் திரு நாகேஷுடனும், 70 வரை திரு சோவுடனும் 80லிருந்து  திரு தேங்காய் ஸ்ரீனிவாசனுடனும் இணைந்து நடித்தவர். இவரது நடிப்பு தனித்தன்மையுடன் காணப்படும். இவர் தனது சொந்தக் குரலில் 300க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இவரது முதல் பாடல், L R ஈஸ்வரியுடன் பாடிய, மகளே உன் சமத்து என்ற பாடத்தில் இடம்பெற்ற "தாத்தா தாத்தா பிடி குடு, இந்த வயதிலே சடுகுடு என்ற பாடலாகும். ஆனால்  இவருக்கு புகழ் தேடித்த் தந்த பாடல், பொம்மலாட்டம் படத்தில் வரும் "வா வாத்தியாரே வூட்டாண்டே" என்ற பாடல். இவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றும் பலாராலும் பேசப் படுபவை. உதராணத்திற்கு, தில்லான மோகனாம்பாள் "ஜில் ஜில் ரமாமணி" அதில் பாண்டியன் நானிருக்க என்ற ஒரு பாடலுக்கு இவரது நடனமும் நடிப்பும் வெகுவாக பாராட்டப் பட்டது. இயக்குனர், ஸ்ரீதர், கே பாலச்சந்தர் போன்ற அனைத்து இயக்குனர்களும் தனது படத்தில் இவரை நன்கு பயன்படுத்தியுள்ளனார். அதுவே இவரது நடிப்புக்கு ஒரு சான்று. இவரது வசன உச்சரிப்ப்பும் வித்தியாசமாக இருக்கும். "ஓயு பெய்ய மை, அதுய ஓயு சின்ன குயி" என்ற வசனம் படு பிரசித்தம். 2002ஆம் வருடம் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. எந்தவித பாத்திரமானாலும் அனாயசமாக நடிக்கக் கூடிய ஒரு நடிகை. 1000 படங்களும், இணையாக 1000 மேடை நாடகங்களிலும் நடித்த நடிகை. இவர் நலமுடன் வாழ நமது பிரார்த்தனைகள்.
தமிழ்த் திரையுலகின் சிற்பிகள்: 4
எம்.ஆர்.ராதா, மதராஸ் ராசகோபால் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. 10 வயதில் தனது தாயார் தனக்கு ஒரு மீன்துண்டு அதிகமாக தரவில்லை என்று கோபித்துக் கொண்டு வீட்டை வெளியேறியவர். தனக்கென்று ஒரு தனிப் பாணி உடைய நடிகர். சிவாஜியும் சரி, எம்ஜியாரும் சரி, இவருடன் நடிக்கும்போது எச்சரிக்கையாக நடிக்கவேண்டும், அந்த அளவு நடிப்பாற்றல் மிக்கவர். "நடிகவேள்" - நடிகர்களின் வேந்தர் என்ற பொருள்பட அழைக்கப் பட்டவர். ரத்தக் கண்ணீர் என்ற தனது நாடகத்தின் மூலம் பிரபலமானவர், அது பிறகு படமாகவும் வெளி வந்து பெரும் வெற்றி பெற்றது.இவர் கொடூரமான வில்லனாக என்றுமே காட்சியளித்ததில்லை. சராசரி மனிதனைப் போன்றே இருக்கும் இவரது நடிப்பு. இன்றைய நாகரீக வில்லன்களுக்கு இவர்தான் முன்னோடி என்றால் அது மிகையாகாது. நகைச்சுவை நடிப்பிலும் குணச்சித்திர வேடங்களிலும் தனது முத்திரையைப் பதித்தவர். இவரது வசன உச்சரிப்பு அலாதியானது. ஒவ்வொரு வாக்கியத்தையும் இருவேறு தொனிகளில் பேசுவார். அதை இதுவரை ஒருவராலும் முழுதாக பின்பற்ற முடியவில்லை. படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் ராவ் பகதூர் என்பதை ராவ்... பகதூர் என்று நீட்டி சொல்வது, மிகுந்த சிரிப்பை வரவழைக்கும், இது ஒரு மாதிரிதான் இவருடைய வசன உச்சரிப்புக்கு. "FOREIGNLA நீராவில கப்பல் வுடறான், ரயில் விடறான், இங்க நம்மாளு குழாப்புட்டு சுடறான்" போன்ற நையாண்டி வசனங்கள் இவருக்கே உரித்தது. இவர் கோபத்துடன் பேசும் வசனங்களும் சிரிப்பை வரவழைக்கும், "என்னையாட வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லரே, நான் யார் தெரியுமா, ராவு காலத்துல பிறந்தவன்டா" என்று சிவாஜியிடம் சொல்வார், பச்சை விளக்கு என்ற படத்தில். அமைதியாக நடித்தாலும் சரி, ஆர்ப்பாட்டமாக நடித்தாலும் சரி, ரசிக்கும்படியாக இருக்கும் இவரது நடிப்பு. நீயே உனக்கு என்றும் நிகரானவன், என்ற பாடலில் இவரது அங்க சேஷ்டைகள் பலத்த சிரிப்பை வரவழைக்கும்.

ஒரு வித்தியாசமான வில்லன் நடிகர்
தமிழ்த் திரையுலகின் சிற்பிகள்: 3
எம்ஜியார் என்று அழைக்கப் படும் திரு M G ராமச்சந்திரன். இவரது ரசிகர்களால், புரட்சித்தலைவர், என்று போற்றப் படுபவர். மக்கள்  திலகம் என்று திரையுலகினரால் அழைக்கப்  பட்டார். திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டம் அளித்தார்.
முதலில் சரித்திர படங்களில் நடித்து வந்த எம்ஜியார், பிறகு, தான் பாடிய, தனக்கொரு கொள்கை, என்ற பாடலைப் போல் தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, இறுதி வரை அதையே கடைப் பிடித்தார். இவரது படங்களில் தாய்ப் பாசம் மிகவும் முக்கிய அம்சமாக  விளங்கியது. பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். தனது கொள்கைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தனது பாத்திரங்களை அமைத்துக் கொண்டார். குறிப்பாக ஏழை மக்கள் இதயத்தில் நீங்காத இடம் பெற்றவர். அதற்கு ஒரு சான்று, ஒரு பொது நிகழ்சசி முடிந்ததும் ஒரு மூதாட்டியை அணைத்து ஆறுதல் கூறியபோது, "மவராசா, நீ நல்ல இருக்கணும், ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் ஜாக்கிரதையா இருந்துக்கப்பா" என்று வெகுளித்தனமாக அந்த மூதாட்டி கூறியது.

நடிகர் திலகமும் இவரும் தமிழ்த்திரையுலகின் இரு பெரும் தூண்கள் என்றால் அது மிகையாகாது.