கண்ணதாசன்:
என்ன புனை பெயரில் எழுதுகிறீர்கள்
என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டதற்கு, பாரதிதாசன், சுப்புரத்தின தாசன் போன்று ஒரு
தாசன் பெயரை சொல்லலாம் என்று நினைத்து, கண்ணன் மேல் உள்ள காதலினால் உடனே கண்ணதாசன்
என்றார். அதுவே அவரது பெயராக நிலைத்தது.
பாரதியார் கண்ணனை நண்பனாய்,
மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய் நினைத்தார்.
கண்ணதாசனோ, கண்ணனை - தேடுகின்ற
கண்களில் தீபம் ஏந்தி வருபவனாகவும், கேட்பர்வக்கு அவர்கள் விரும்பியபடி காட்சி தருபவனாகவும்,
கேள்வியிலேயே பதிலாக இருப்பவனாகவும், தர்மம் என்னும் தேரில் ஏறி வருபவனாகவும், தாளாத
துயர்கள் தீர்ப்பவனாகவும் காண்கிறார். மேலும் அவன் முடவர்களை நடக்க வைப்பவன், மூடர்களை
அறிய வைப்பவன், குருடர்களை காண வைப்பவன், ஊமைகளை பேச வைப்பவன், அவனது பிருந்தாவனம்
என்னும் சந்நிதானத்தில் கதவுகள் அடையாது என்றும் திறந்திருக்கும், அங்கே அஞ்சாத நெஞ்சங்கள்
குடியிருக்கும் என்கிறார்.
கேட்டதை கொடுப்பவனாகவும்,
கீதையின் நாயகனாகவும் காண்கிறார். கண்ணன் மேல் உள்ள அளவு கடந்த பக்தி காதலாக மாறும்.
அப்போது கண்ணை ஒரு குழந்தையாக, சிறுவனாக நினைக்க தோன்றும். அவ்வாறு எண்ணி, சின்னக்
கண்ணன் அழைக்கிறான் என்று கூறுகிறார்.
கண்ணன்தான் நம்மை கரை சேர்ப்பவன்
என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர். "நதி இருந்தால் கரை இருக்கும், விதி
இருந்தால் கண்ணன் துணை இருக்கும்" என்று பாடுகிறார். விதி எவ்வாறு கிடைக்கும்,
கண்ணனே கதி என்று அவன் பாதக் கமலங்களைப் பற்றினால், கண்ணன் நம்மை கரை சேர்ப்பான்.
தன்னுடைய இறுதிக் காலங்களில்
கண்ணனைப் பற்றியே நினைவு இவருக்கு, கிருஷ்ண கானம் என்னும் ஒரு அழகிய கவிதைத் தொகுப்பினை
இயற்றினார். ஆழ்வார்கள் காலத்தில் இவர் இருந்திருந்தால், கிருஷ்ண கானம் ஒரு ஆழ்வார்
பாசுரமாகவே ஆகியிருக்கும்.
சமஸ்க்ருதத்தை முறையாக,
முழுமையாக கற்றுக் கொண்டு, பஜ கோவிந்தத்தை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் உரை எழுதினர்.
கர்ணன் படத்தில் இவர் எழுதிய கண்ணன் அர்ஜுனுக்கு அறிவுரை கூறும் பாடலான "மரணத்தை
எண்ணி கலங்கிடும் விஜயா" என்ற பாடல், எளிய வடிவில் இயற்றப்பட்ட கீதை ஆகும்.
கண்ணதாசன் என்ற பெயருக்கு
முழுவதும் பொருத்தமுடையவர் இவர். இன்று அவரது நினைவு நாள். அவர் நம்மை விட்டு நீங்காது
அவரது கவிதைகள், பாடல்கள் மூலம் நம்முடனேயே வாழ்கிறார். அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்
கண்ணதாசன்
நம் இதயவாசன்
கவிதை நேசன்
கவிஞர்களின் ஈசன்
வாழ்க கவிஞரது புகழ்.

No comments:
Post a Comment