Sunday, 21 December 2014

சிவரஞ்சனி:

சிவரஞ்சனி பெரிய விற்க்கு பதிலாக சிறிய கூடிய  பூப் (bhup) இராகமாகும். இந்த ஒரு சிறிய மாற்றம், ராகத்தின் 'mood' முற்றிலுமாக மாற்றி விடுகிறது.

இந்த இராகத்தில் பாவம் பிரதானமாக அமைந்திருக்கும்.

இதை பாடுவதற்கேற்ற நிலைகள் (moods): சிருங்காரம்பக்தி, பழைய  நினைவுகள், காயம் பட்ட காதலர்களின் அழைப்பு.

பாடுவதற்கேற்ற நேரம். இரவின் இரண்டாம் கால் பகுதி.

இதனது மாற்ற இராகங்கள்.
ரஞ்சனி
அனுரஞ்சனி
நிரஞ்சனி

"நம்முடைய இனிமையான பாடல்கள் எல்லாம் சோகமான எண்ணங்களை வெளிப் படுத்துபைவையே" - ஷெல்லி 

இந்த அடிப்படை விதிகளை மீறி திரு எம் எஸ் விஸ்வநாதன் இந்த இராகத்தை எவ்வாறு கையாண்டிருக்கிறார் என்று பார்போம்.

முதலில் ராக விதிகளுக்குட்பட்டு (பக்தி-காதல்-சோகம்) அமைந்த இரு பாடல்கள்.
 ஒளிவிளக்கில் வரும், "ஆண்டவனே உன் பாதங்களை"
இறைவனிடம் ஒரு நல்லவரின் உயிருக்காக போராடும் பாடல். இந்தப் பாடல் பிறகு தமிழ் நாட்டில் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலித்து, தங்களது  முதலமைச்சர் உயிர்பெற வேண்டும் என்ற வேண்டுதல் பாடலாகவே அமைந்து விட்டது. மிகச் சிறந்த இசைக் கலவையுடன் அமைந்த பாடல்.

அடுத்து தங்கையின் மண வாழ்வு முறிபட்டு அவள் வீட்டிற்கு வந்திருக்கும்  சூழ்நிலையில் தம்பியின் வீட்டிற்கு சென்று அவனிடம் உதவி கேட்டு அதற்கு சரியான  முறையில் பதில் வராததால், அண்ணன் பாடும் பாடல். "ராஜபார்ட் ரங்கதுரை என்ற படத்தில் வரும் அம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் என்ற பாடல். சிறிது இராகத்திலிருந்து வெளியே சென்று வந்தாலும் இதை சிவரஞ்சனி லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் உணர்ச்சி பூர்வமான பாடல். இதைக் கேட்டு கண்ணீர் வரவில்லையென்றால் அவர்கள் அவுரங்கசீப்பாகத்தான் இருக்க வேண்டும்.

அடுத்தது ஒரு பக்தி ரசம் ததும்பும் பாடல். சரவணப் பொய்கையில் நீராடி என்ற பாடல். அருமையான பின்னணி இசையுடன் அமைந்த பாடல். அதுவும் சுசீலாவின் ஹம்மிங் மிக அருமை.

அடுத்த இரண்டு பாடல்கள் இவை மூன்றிலும் இருந்து விலகி காதலர்களான கணவன் மனைவியின். பாடல்.

முதல் பாடல். பாலும் பழமும் என்ற படத்தில் வரும் நான் பேச நினைப்பதெல்லாம் என்ற பாடல், காதலித்து மணந்த கணவன் மனைவியின் உள்ளத்திலிருக்கும் தீராத அன்பை வெளிப்படுத்தும் பாடல். அமைதியான இசை வாத்தியங்களின் பின்னணியில் சுசீலா - டி எம் எஸ் இருவரின் குரலில், எம் எஸ் வியின் ஹம்மிங்கில் மனத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல்.

அடுத்து இதே முறையில் குழந்தைகள் பிறந்தவுடன் காதல் கணவன் மனைவி பாடும் பாடல் - பார் மகளே பார் என்ற படத்தில் வரும் நீரோடும் வைகையிலே என்ற பாடல்சிதார், வயலின், கிடார் போன்ற கருவிகளுடன், விசிலிசையும் உபயோகித்து கேட்பவர்கள்  மனதை வருடும் பாடல்.

அடுத்து மூன்று பாடல்கள்; துள்ளல் பாடல்கள், பூவா தலையா படத்தில் வரும் பூவா தலையா, குழந்தையும் தெய்வமும் படத்தில் வரும், என்ன வேகம் நில்லு பாமா, உத்தரவின்றி உள்ளே வா படத்தில் வரும் உத்தரவின்று உள்ளே வா, இதில் பூமியில்  மானிட ஜென்மம் எடுத்தது என்ற இடத்தில் சுத்த கர்நாடக இசை வடிவம், மற்ற இடங்களில் ராக் அண்ட் ரோல், ஜாஸ் இசை வடிவங்கள். இவற்றை கேட்ட பின்பு நீரோடும் வைகையிலே பாடலைக் கேட்டால் நம்ப முடிகிறதா, மெல்லிசை மன்னர்களின் கற்பனை எப்போதுமே தங்கள் காலத்துக்கு 20 ஆண்டுகள் முன் நோக்கியதாகவே அமைந்திருந்தது.

இந்த ராகத்தில் மேலும் சில பாடல்கள்,
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து - பக்தி ரசம்
அவளொரு  மேனகை - காதல் சோகம்
சங்கீத ஜாதி முல்லை - காதல் சோகம்
இதயவீணை தூங்கும்போது - சோகம்

மேலும் நிறைய ஹிந்திப் பாடல்கள் இந்த இராகத்தில் அமைந்துள்ளன.

உதாரணத்திற்கு இரண்டு பாடல்கள் மட்டும் தருகிறேன்
மேரே நைனா சாவன் பாதோ - காதலர்களின் அழைப்பு
தேரே மேரே பீச் மே - காதல் சோகம்

வாழ்க மெல்லிசை மன்னர்களின் புகழ்.


(பாடல்கள் உதவி msvtimes.com)

Saturday, 20 December 2014

பாரதியும் கண்ணதாசனும்:

20 ஆம் நூற்றாண்டில் நாமறிந்த கவியரசர் கண்ணதாசன், அவருக்கு முந்தைய நூற்றாண்டை சேர்ந்தவரான மகாகவி பாரதியாரின் சிந்தனைகளை ஒத்தவராயிருந்தார். ஒரு சிறிய ஒப்பீடு:

"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ " மகாவியின் இந்த இரண்டு வரிகளை எடுத்துக் கொண்டு கண்ணதாசன் வியட்நாம் வீடு படத்திற்காக எழுதிய  பாடல்வேலையிலிருந்து ஒய்வு பெற்ற கணவன் தனக்கும் தனது மனைவிக்கும் அந்த வீட்டில் மதிப்பில்லை என்பதை உணர்ந்து, தன் மனைவி தனக்கு எவ்வாறெல்லாம் பணிவிடை செய்து வந்தாள் என்பதை எண்ணி மனமுருகிப் பாடும் பாடல்.

காலசுமைதாங்கி போல தன்னை மார்பில் தாங்கி, தான் வேதனையில் இருக்கும் நேரம் சிந்துகின்ற கண்ணீர் தரையில் விழுவதற்குள் துடைத்து தன விம்மலை தணிக்கும் மனைவியின் கண்ணில் கண்ணீர் வடிந்தால் தனது நெஞ்சில் அந்தக் காட்சியை காண முடியாது, குருதி வடியும் என்கிறார் கவிஞர். ஆலம் விழுதுகள் போன்று உறவினர் ஆயிரம் பேர் இருந்தாலும், வேரென தன்னை அவள் தாங்கிப் பிடித்ததால்தான் தான் சாய்ந்து விடாது தலை நிமிர்ந்து வாழ்ந்திருந்தேன் என்கிறார். மேலும் பிள்ளைகள் என்று பெயருக்கு இருந்தாலும், பேசுவதற்கு உறவினர்கள் இருந்தாலும், தனது தேவையை தெய்வம் போன்ற அவள் மட்டும்தான் அறிவாள் என்கிறார்.

பாரதியின் கவிதையில் இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அதை தனது பாடலுக்கு பொருந்துமாறு வரிகளை புனைந்த கவிஞரின் திறமையை என்னென்று பாராட்டுவது?

பாடல் 2 - "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"

இதில் "பாலென்ன அழுவோர்க்கு பால் தருவோம், பசுங்கூழென துடிப்போர்க்கு சோறிடுவோம்" என்ற வரிகளில், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற மகாகவியின் சமத்துவ உணர்வு பளிச்சிடுகிறது. மேலும் "தாயகம் காப்போரின் தாள் பணிவோம், யாவும் தமக்கென நினைப்போரை சிறையிடுவோம்" என்ற வரிகளில் பாரதியின் தேசபக்தியும் வெளிப்படுகிறது.

"கிணற்றில் இருந்துகொண்டு உலகளப்பார், சிலர் இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார், நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார், இந்த நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்" என்று பாடும்போது, "நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால், அந்தோ" என்ற பாரதியின் ஆதங்கம் புலப்படுகிறது.

நம்மில் பல பேர் பாரதியைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கண்ணதாசனின் மூலம் பாரதியை நாம் சந்திக்க  முடிந்தது நாம் பெற்ற பெரும் பாக்கியமாகும்.


ஜெய் ஹிந்த்!
கண்ணதாசன்:

என்ன புனை பெயரில் எழுதுகிறீர்கள் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கேட்டதற்கு, பாரதிதாசன், சுப்புரத்தின தாசன் போன்று ஒரு தாசன் பெயரை சொல்லலாம் என்று நினைத்து, கண்ணன் மேல் உள்ள காதலினால் உடனே கண்ணதாசன் என்றார். அதுவே அவரது பெயராக நிலைத்தது.

பாரதியார் கண்ணனை நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய் நினைத்தார்.

கண்ணதாசனோ, கண்ணனை - தேடுகின்ற கண்களில் தீபம் ஏந்தி வருபவனாகவும், கேட்பர்வக்கு அவர்கள் விரும்பியபடி காட்சி தருபவனாகவும், கேள்வியிலேயே பதிலாக இருப்பவனாகவும், தர்மம் என்னும் தேரில் ஏறி வருபவனாகவும், தாளாத துயர்கள் தீர்ப்பவனாகவும் காண்கிறார். மேலும் அவன் முடவர்களை நடக்க வைப்பவன், மூடர்களை அறிய வைப்பவன், குருடர்களை காண வைப்பவன், ஊமைகளை பேச வைப்பவன், அவனது பிருந்தாவனம் என்னும் சந்நிதானத்தில் கதவுகள் அடையாது என்றும் திறந்திருக்கும், அங்கே அஞ்சாத நெஞ்சங்கள் குடியிருக்கும் என்கிறார்.

கேட்டதை கொடுப்பவனாகவும், கீதையின் நாயகனாகவும் காண்கிறார். கண்ணன் மேல் உள்ள அளவு கடந்த பக்தி காதலாக மாறும். அப்போது கண்ணை ஒரு குழந்தையாக, சிறுவனாக நினைக்க தோன்றும். அவ்வாறு எண்ணி, சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்று கூறுகிறார்.

கண்ணன்தான் நம்மை கரை சேர்ப்பவன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர். "நதி இருந்தால் கரை இருக்கும், விதி இருந்தால் கண்ணன் துணை இருக்கும்" என்று பாடுகிறார். விதி எவ்வாறு கிடைக்கும், கண்ணனே கதி என்று அவன் பாதக் கமலங்களைப் பற்றினால், கண்ணன் நம்மை கரை சேர்ப்பான்.

தன்னுடைய இறுதிக் காலங்களில் கண்ணனைப் பற்றியே நினைவு இவருக்கு, கிருஷ்ண கானம் என்னும் ஒரு அழகிய கவிதைத் தொகுப்பினை இயற்றினார். ஆழ்வார்கள் காலத்தில் இவர் இருந்திருந்தால், கிருஷ்ண கானம் ஒரு ஆழ்வார் பாசுரமாகவே ஆகியிருக்கும்.

சமஸ்க்ருதத்தை முறையாக, முழுமையாக கற்றுக் கொண்டு, பஜ கோவிந்தத்தை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் உரை எழுதினர். கர்ணன் படத்தில் இவர் எழுதிய கண்ணன் அர்ஜுனுக்கு அறிவுரை கூறும் பாடலான "மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா" என்ற பாடல், எளிய வடிவில் இயற்றப்பட்ட கீதை ஆகும்.

கண்ணதாசன் என்ற பெயருக்கு முழுவதும் பொருத்தமுடையவர் இவர். இன்று அவரது நினைவு நாள். அவர் நம்மை விட்டு நீங்காது அவரது கவிதைகள், பாடல்கள் மூலம் நம்முடனேயே வாழ்கிறார். அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்

கண்ணதாசன்
நம் இதயவாசன்
கவிதை நேசன்
கவிஞர்களின் ஈசன்


வாழ்க கவிஞரது புகழ்.
தமிழ்த் திரையிசையின் பிதாமகர்கள் 6: திரு K V மகாதேவன்-

தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலேயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.

பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.

1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த மகாதேவன் பின்னர் பக்த கௌரி, அக்கினி புராண மகிமை, பக்த ஹனுமான், நல்ல காலம், மதன மோகினி ஆகிய படங்களுக்கு இசை அமைத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார்.

இவருடைய படைப்புகளின் பிரதான அம்சங்கள்;  பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையமைப்பது; எப்போதும் கர்நாடக அடிப்படையில் இசையமைப்பது; பாடகர்களுக்கும் அவரது இசைக்கலைஞர்களுக்கும் மதிப்பளித்து அவர்களை சுதந்திரமாய் செயல் பட விடுவதன் மூலம் தனது படைப்புகளுக்கு மேலும் மெருகூட்டுவது போன்றவை.

இவரது சிறந்த தமிழ்ப் படங்களுள் சில: கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், படிக்காத மேதை, வசந்த மாளிகை, வானம்பாடி, முதலாளி, அடிமைப் பெண், தாய் சொல்லைத் தட்டாதே போன்றவை.

இவரது சிறந்த பாடல்களுள் ஒன்றாக திருவருட்செல்வருள் வரும் மன்னவன் வந்தானடி என்ற பாடலை கூறலாம். இந்த பாடல் ஒன்றே திரு K V மகாதேவன் அவர்களின் திறமைக்கு சான்று. இவருடைய பாடல்களை பட்டியலிட்டு மாளாது. ரசிகர்கள் அவரவர் விருப்பம் போல் அவர்களுக்குப் பிடித்த பாடலை பற்றி கருத்து தெரிவிக்கலாம்.

தெலுங்கு மொழி துளியும் அறியாத இவர் சங்கராபரணம் படத்திற்கு இசையமைத்தது மிகப் பெரிய வியப்பு. அவற்றில் வரும் அனைத்துப் பாடல்களுமே  கர்னாடக இசையின் அடிப்படையிலேயே அமைந்தன. இப்படத்திற்காக இவர் ஜனாதிபதி விருதும் பெற்றார் என்பது ஒரு கூடுதல் சிறப்பு. இயக்குனர் திரு கே விஸ்வநாத் தனது பெரும்பாலான படங்களுக்கு இவரையே இசையமைக்க செய்தார்.

எம் எஸ் விஸ்வநாதன் இவரை தனது மானசீக குருவாகக் கொண்டிருந்தார். பல இசையமைப்பாளர்களுக்கும் இவர்  முன்னோடியாகத் திகழ்ந்தார். இவரது பாடல்கள் அனைத்துமே இறவாப் புகழ் பெற்றவை. இவர் மறைந்தாலும் இவரது பாடல்கள் என்றும் நம் நெஞ்சை விட்டு மறையா!
தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் – 5 சி.ஆர். சுப்பராமன்.


1940களில் தமிழ் திரையிசையில் மேற்கத்திய இசையின் தாக்கத்திற்கு பதியம் போட்டவர் சி.ஆர். சுப்பராமன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்ததி, டி.ஜி.லிங்கப்பா, கண்டசாலா, கோவர்த்தனம் போன்றவர்களின் குரு இவர்.
கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேலை நாட்டிசை, நாட்டுப்புற இசை என்று அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர், அந்தக் காலத்தில் ஆரம்பித்து வைத்த போக்குதான் இந்தக் காலத்திலும் தொடர்கிறது..அந்தக் காலத்திலேயே இவர் துணிந்து லத்தீன் அமெரிக்க இசையை புகுத்தி இசையமைப்பில் சில மாறுதல்களை கொண்டு வந்தார்.

தனது 16ஆம் வயதில் ஜி ராமனாதனின் சகோதரர். சுப்பைய்யா  பாகவதரின் சிபாரிசில் சுப்பராமன் HMV நிறுவனத்தில் ஹார்மோனியம் வாசிப்பவராக வேலையிலமர்ந்தார்.  இசையின் மீது இவருக்கிருந்த ஈடுபாடும், பக்தியும் விரைவிலேயே இவரை HMVயில்  துணை இசை அமைப்பாளராக உயர்த்தின

இரவுகளில் சுப்பராமன், பணி  முடிந்ததும், ஒரு இளைஞரை வயலின்  வாசிக்க சொல்லிவிட்டு கீர்த்தனைகளை பாடுவார். அந்த இளைஞர் வேறு யாருமல்ல. T K ராமமுர்த்தி அவர்கள்தான். அவரை HMV யில் நிரந்த வேலைக்கு  அமர்த்திவிட்டு தனது உதவியாளராகவும் நியமித்தார்..
.
தனது 10 ஆண்டு திரை வாழ்க்கையில் இவர் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் சாகா வரம் பெற்றவையாக அமைந்தன. தேவதாஸ், லைலா மஜ்னு போன்ற புகழ் பெற்ற படங்கள் இவர் இசையமைப்பில் வெளியாயின.

இவர் இசையமைப்பில் பாடிய படக நடிகர்கள்:
M K தியாகராஜ பாகவதர், P U  சின்னப்பா, C S R ஆஞ்சநேயலு, U R ஜீவரத்தினம், T R ராஜகுமாரி, K. R. ராமசாமி, V. நாகையா, P பானுமதி, N S கிருஷ்ணன், T A மதுரம், S வரலக்ஷ்மி போன்றோர்.

இவர் இசையமைப்பில் பாடிய பின்னணி பாடகர்கள்:
கண்டசாலா, A M ராஜா, திருச்சி லோகநாதன், V N சுந்தரம், T. A மோதி, M L வசந்தகுமாரி P A பெரியநாயகி, P லீலா, T V ரத்தினம், R பாலசரஸ்வதி தேவி, A P கோமளா, K ஜமுனா ராணி, K V ராணி ஆகியோர்

இவர் இசையமைப்பில் வெளிவந்த சில பாடங்கள்:
அபிமன்யு, ராஜ முக்தி, ரத்ன குமார், லைலா மஜ்னு, வேலைக்காரி, நல்ல தம்பி, கன்னியின் காதலி, ஸ்வப்ன சுந்தரி, மர்மயோகி, மணமகள், மருமகள், சண்டிராணி, தேவதாஸ் போன்றவை ..

உலகே மாயம், சின்னஞ்சிறு கிளியே, துன்பம் நேர்கையில்  போன்ற அழியாப் பாடல்களைத் தந்த சி.ஆர். சுப்பராமன் 32 வயதிலே இவ்வுலகை விட்டு நீங்கினார். இவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு ஒரு பேரிழப்பாகும்.



தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் – 4. – G ராமநாதன்

ஜி. ராமநாதன் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலுள்ள பிச்சாண்டார் கோயில் என்ற இடத்தில்  பிறந்தவர். ராமநாதன் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். தனது 18-வது வயதில் பாரத கான சபா என்கிற நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்பவராக சேர்ந்தார். அதன் பிறகு புகழ்பெற்ற வி. ஏ. செல்லப்பா நாடகக் குழுவில் ஆர்மோனியம் வாசிப்புடன் பின்னணிப் பாடகராகவும் சேர்ந்தார். 1932-ல் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட காலவரிஷி என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக ஒரு இசைக்கருவியை இசைத்தார்.

1938-ல் எம். கே. தியாகராஜ பாகவதர் தயாரித்த சத்தியசீலன் என்கிற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்கிற படத்தில் சன்னியாசி வேடத்தில் நடித்துள்ளார்.

இசை வாழ்க்கை
ஜி. ராமநாதன் அவர்கள் முறையாக கர்நாடக இசை பயின்றதில்லை ஆனாலும் கேள்வி ஞானத்தாலும், கர்நாடக இசையின் மீதிருந்த ஆர்வத்தாலுமே கற்றுக்கொண்டு இசையமைக்க ஆரம்பித்தார். இவர் இசையமைக்கத் தொடங்கிய 1940-களில் தமிழ்நாட்டில் திரைப்படத்தைப் போலவே நாடகங்களும் பிரபலமாயிருந்தன, ஆகையால் இரண்டையும் கையாளவேண்டியிருந்தது.

இவர் இசையமைத்த காலகட்டங்களில் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டே திரையிசையும் இருந்தது. ஆனாலும், திரையிசை, கர்நாடக இசைக்கு சமமாக கருதப்படவோ, ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை. இதைத் தவறு என நிருபிக்கும் வகையில் இருந்தது எம். கே. தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் திரைப்படத்தில் மன்மதலீலையை வென்றார் உண்டோ என்கிற பாடலுக்கு இவர் அமைத்த இசை. இவர் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இசையே நிலைத்திருக்கும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உடையவராயிருந்தார். இதற்கேற்றார்போல இவர் இசையமைத்த பாடல்கள் Semi-Classic என்னும் கர்நாடக இசையின் வகையிலேயே இருந்தன..

ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றோரின் குரல்களின் மீதும், இந்தி திரைப்பட இசையமைப்பாளர் நௌஷத்தின் இசை மீதும் ஒரு தனி விருப்பம் கொண்டிருந்தார். இவருடைய இசையில் பாடியதில் எஸ். வரலட்சுமி மற்றம் ஜிக்கி ஆகியோரின் குரல் இவருக்கு மிகவும் விருப்பமானது. எம். கே. தியாகராஜ பாகவதரின் குரலின் மீது மிகப்பெரிய விருப்பம் கொண்டிருந்தார்; ஒரு பாடகரிடம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதை எம்கேடியால்தான் தரமுடியும் என்பார் ஜி ஆர், அவரே ஒரு நல்ல பாடகர், தன்னுடைய இசையில் பொன்முடி திரைப்படத்திலும், கே. வி. மகாதேவன் இசையில் வந்த அல்லி பெற்ற பிள்ளை ஆகிய படங்களிலும் பாடியுள்ளார். எப்பொழுதும் பாடகரின் முழுத்திறமையையும் வெளிக்கொண்டுவர முயற்சிப்பார். பாடகர் டி. எம். சௌந்தரராஜன், ஜிஆரின் இசையில் அவருக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு பாடகரால் பாடமுடியும் என்றால், அந்தப் பாடகர் வேறு எந்த இசையமைப்பாளரின் இசையிலும், உலகின் எந்த மூலையிலும் எளிதாக பாடலாம் என்று கூறியுள்ளார்..

தன்னுடைய இசையில்  பாடலை பதிவுசெய்யும் முன் பாடகர்கள் எப்படி பாட வேண்டும் என்பதையும் விளக்கிப் பாடிக் காட்டுவார். புதுயுகம் என்கிற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இவரின் கடைசி படம் தெய்வத்தின் தெய்வம். அருணகிரிநாதர்  திரைப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்த போது மாரைடைப்பால் இறந்தார் பிறகு இசையமைப்பாளர் டி. ஆர். பாப்பா அதை பூர்த்தி செய்தார்.

இவர் இசையில் பாடிய பாடக நடிகர்கள்:
M K தியாகராஜ பாகவதர்,M M தண்டபாணி தேசிகர், கொத்தமங்கலம் சீனு, M S சுப்புலக்ஷ்மி, D K பட்டம்மாள், M L வசந்தகுமாரி, P U சின்னப்பா, U R ஜீவரத்தினம்,  N C வசந்தகோகிலம், T R மகாலிங்கம், T R ராஜகுமாரி, K R ராமசாமி, சித்தூர் V  நாகையா, P பானுமதி, N S கிருஷ்ணன், T A மதுரம், T S துரைராஜ், J P  சந்திரபாபு ஆகியோர்

இவர் இசையில் பாடிய பின்னணி பாடகர்கள்:
T M சௌந்தரராஜன், A M ராஜா, சீர்காழி கோவிந்தரராஜன், திருச்சி லோகநாதன், C S ஜெயராமன், V N சுந்தரம், T A மோதி,
P B ஸ்ரீனிவாஸ்,  P லீலா, A P கோமளா, R பாலசரஸ்வதி தேவி,
T V ரத்தினம்,  ராதா ஜெயலக்ஷ்மி, M S ராஜேஸ்வரி ,T S பகவதி, ஜமுனா ராணி, P சுசீலா, A V ரத்தினமாலா, N L  ஞானசௌந்தரி,, K ராணி,  K V ஜானகி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, சூலமங்கலம் ஜெயலக்ஷ்மி, S ஜானகி, L R ஈஸ்வரி போன்றோர்

இவரது புகழ் பெற்ற சில பாடல்களும் அவற்றின் படங்களும்:
ஸ்வப்பன வாழ்வில் மகிழ்ந்து - சிவகவி
மன்மத லீலையை வென்றார் உண்டோ, கிருஷ்ணா முகுந்தா முராரே, அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன் - ஹரிதாஸ்
சின்னப் பெண்ணான போதிலே - ஆரவல்லி
வாராய், நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே -
மந்திரி குமாரி
ஜீவபிரியே ஷ்யாமளா என் ஜீவபிரியே ஷ்யாமளா - ஷ்யாமளா
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே, குரங்கிலிருந்து பிறந்தவன், ஏறாத மலைதனிலே - தூக்கு தூக்கி
மல்லிகப் பூ ஜாதி ரோஜா - கோமதியின் காதலன் 
ஆடல் காணீரோ, நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்
வாழ்ந்தாலும் ஏசும் - நான் பெற்ற செல்வம்
சிந்தனை செய் மனமே, மாசிலா நிலவே நம் - அம்பிகாபதி
ஒம்காரமாய் விளங்கும் நாதம் - வணங்காமுடி
முல்லைமலர் மேலே, யாரடி நீ மோகனி - உத்தம புத்திரன்
சிங்காரக் கண்ணே, இன்பம் பொங்கும் வெண்ணிலா - வீரபாண்டிய கட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன் (அனைத்து பாரதியார் பாடல்களும்)
போன்ற சில.

இவரது பாடல்கள் பட்டியல் மிக நீண்டது. அவற்றில் சில மட்டுமே இங்கு தர முடிந்தது. கர்நாடக இசையின் அடிப்படையில் இவர் இசையமைத்ததினால் இவரது அனைத்துப் பாடல்களும் சிறந்து விளங்கின.

  .
தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் – 3. - பாபநாசம் சிவன்

தமிழ் தந்த தியாகராஜர் என்று அழைக்கப படும்  பாபநாசம் சிவன் 26-09-1890ல் தஞ்சைக்கு அருகில் உள்ள போலகம் என்னும் சிறு கிராமத்தில் ராமாமிருத ஐயருக்கும் யோகாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தவர். அவரது இயற்பெயர்   ராமையா. சிறு வயதுப் பிராயத்தில் தந்தையை இழந்த ராமையா, தன் தாயார் மற்றும் மூத்த சகோதரருடன் 1898லிருந்து 1910 வரை இரண்டு வருடங்கள் திருவனந்தபுரத்துக்குக் குடி பெயர்ந்திருக்கிறார். திருவனந்தபுரத்து அரசருடைய ஊட்டுப்புறையின் ஆதரவில் வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். . திருவனந்தபுரத்தில் இருந்த இரு ஆண்டுகளில் மகாராஜா சம்ஸ்கிருதக் கல்லூரியில் உபாத்யாயர் பட்டம் பெற்றார். இதைத் தவிர முறையான கல்வி எதையும் சிவன் பின்னாளில் பெறவில்லை. அவருக்கு மரபின் அடிப்படையிலான இசைப்பயிற்சியோ பாக்களை இயற்றும் பயிற்சியோ வாய்த்திருக்கிவில்லை. ஆனால் கேள்வி ஞானத்தில் தன்னுடைய இசை வளமையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார் சிவன். சிவனுடைய தாயார் மிகவும் அற்புதமான குரல் வளம் வாய்ந்தவராக இருந்திருக்கிறார். சுமார் 600 கீர்த்தனைகளுக்கு மேல் முறையாகப் பாடக் கற்றுக்கொண்டாராம் அந்த அம்மையார். சிவனின் தாய்வழிப் பாட்டனாரும் அந்தக் காலத்தில் மிகப்பெரும் இசை வல்லுநராக இருந்திருக்கிறார். இவ்விருவரின் தாக்கத்தில் இசையின் மேல் மாளாத காதலைக் கொண்டு வளர்ந்திருக்கிறார் சிவன். வளர்ந்த பிறகு கோனேரிராஜபுரம் வைத்தியநாதய்யர் போன்ற இசை வல்லுநர்கள் அவருடைய இசை வளமையினை செம்மைப்படுத்தியும் பெரும் ஆதரவும் அளித்து இருக்கிறார்கள்.

1910  அன்னையை இழந்த சிவன், திருவனந்தபுரத்தை விட்டு நீங்கி பாபநாசத்துக்கு வந்திருக்கிறார். தஞ்சை மாவட்டம் முழுதும் தன்னுடைய சகோதரருடன் நடைப்பயணமாகவே சென்று பல லயங்களில் திருவிழாக்களின்போது பஜனை உற்சவத்தை நடத்தியிருக்கிறார். அந்த பஜனை உற்சவங்களின்போது அவரே இயற்றிய பாடல்களை அவர் கணீரென்ற குரலில் பாடி மிகப்பெரும் கூட்டத்தை ஈர்த்து இருக்கிறார். திருவையாற்றில் சப்த ஸ்தானத் திருவிழாவிலும் சிவன் பாடலைக் கேட்க பெரும் திரளான மக்கள் கூடியிருக்கிறார்கள். 1912லிருந்து 1959 வரை அவர் இடைவிடாது சப்த ஸ்தான வைபவத்தில் கலந்து கொண்டு இருந்திருக்கிறார்.

அந்நாளில் இறையிசையில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்களை சிவன் என்று அன்புடன் அழைக்கும் மரபு இருந்திருக்கிறது. அந்த மரபில் ராமையா 'பாபநாசம் சிவன்' ஆக தஞ்சை கணபதி அக்கிரகாரத்தின் இசைப்பிரியர்களால் அன்புடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

1930ல் சென்னைக்குக் குடி பெயர்ந்தார் சிவன். அன்றிலிருந்து  அவர் காலமாவதற்கு ஓராண்டுக்கு முன் அதாவது 1972 வரை மார்கழி மாதங்களில் மயிலையின் நான்கு மாடவீதிகளையும் சுற்றி வந்து அவர் நடத்திய கிரி பிரதட்சணமும் மார்கழி மாத விடியற்காலை பஜனைகளும் மிகவும் பிரசித்தமானவை. (கல்கி, விகடன் தீபாவளி மலர்கள்) 60களில் திராவிடர் கழகம் லய வழிபாட்டுக்கு எதிரான போராட்டங்களை வீதிகளுக்கு எடுத்து வந்த நேரம். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன.

பின்னாட்களில் அவரை மிகவும் அதிகமாகப் பாதித்தவர்கள் கோபாலகிருஷ்ண பாரதியும், நீலகண்ட சிவனும். இவ்விருவரின் பாடல்களில் மனம் கரைந்திருக்கிறார் சிவன்.

இசையும் கலையும் வசமானவர்களுக்கு இயற்கையாகவே சமூகம் குறித்த அக்கறையும் உள்ளீடாக உறைந்து கொண்டே இருக்கும். சிவனுக்கும் இருந்தது. துவக்க காலத்தில் இந்திய சுதந்திரப் போரில் நேரிடையாகப் பங்கு கொள்ளவில்லை என்றாலும் அதன் மீது பெரும் அக்கறை கொண்டு இருந்திருக்கிறார். பல தேசியப் பாடல்களை இயற்றத் தொடங்கினார் சிவன். அவை அக்காலத்தில் பெரும் புகழ் பெறவில்லை என்றாலும் பலருடைய கவனத்தை வெகுவாக ஈர்த்து இருக்கிறது. சிவன் இயற்றிக் கொடுத்த பாடல்களை நாடகக் கலைஞர்கள் தங்கள் நாடகங்களில் கையாளத் துவங்கினார்கள்.

ஒரு சாகித்ய கர்த்தாவாக சிவன் சங்கீத மும்மூர்த்திகளின் வரிசையைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். அவருடைய சாகித்யங்களில் வார்த்தைகள் அவருக்காகத் தவம் இருந்திருக்கின்றன. வார்த்தைகளுக்காக அவர் எந்த அகராதியையோ சூத்திர நூல்களையோ பயன்படுத்தவில்லை. தாளக்கட்டுக்களும் சொற்களும் அவர் வாயிலில் தவமிருந்து காத்து சேவகம் புரிந்திருக்கின்றன. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் விசுவநாத ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், முசிரி சுப்பிரமணிய அய்யர், செம்மங்குடி சீனிவாச ஐயர் போன்ற அக்காலத்தின் பிரசித்த பெற்ற இசைக்கலைஞர்கள் சிவனின் சாகித்யத்தைப் பாடி பிரபலப்படுத்தினார்கள். பிரபலம் அடைந்தார்கள். சிவனுடைய சாகித்யங்கள் கீர்த்தனைகள், வர்ணங்கள், ஓபரா என்று சொல்லப்படும் இசைநாடகங்களுக்கான பதங்கள் மற்றும் ஜாவளிகளைக் கொண்டு மிளிர்ந்து துலங்கின. இவற்றை அவருடைய குமாரத்தி டாக்டர் ருக்மணி ரமணி அவர்கள் ஆறு தொகுதிகளாக வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் இரு தொகுதிகள் தமிழ்ச் சங்க நூலகத்தில் இருக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வு மற்றும் கடுமையான உழைப்புக்குப் பிறகு சிவன், சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரஹ (வடமொழி சொற்கடல்) என்னும் சமஸ்கிருத அகராதி ஒன்றைத் தொகுத்து இருக்கிறார். அந்திம காலத்தில் ஸ்ரீராம சரித கீதம், (ராமாயணத்தை 24 பத்திகளில் 24 ராகங்களின் அடிப்படையில் அமைத்திருப்பார்) மற்றும் காரைக்கால் அம்மையார் சரித்திரம் போன்ற நூல்களை இயற்றினார். இவையும் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.

சென்னை நாட்களில் அவர் திரைத் துறைக்கு அறிமுகம் ஆனார்.. பக்த குசேலா, பக்த சேதா, தியாகபூமி மற்றும் குபேர குசேலா கிய படங்களில் முக்கியப் பாத்திரமேற்று நடித்துள்ளார்சிவனுடைய திரைப்பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பக்தி, தேசியம், சமூக விழிப்புணர்வு போன்றவை கலந்து மிக அருமையான சொற்கோவைகளில் அரிதான தாளக்கட்டுக்களில் அமைந்து அனைவரின் மனங்களையும் அந்நாளில் மட்டுமல்லாது இந்நாளிலும் கவரும் இசைச் சொற்சித்திரங்கள் அவை. அவருடைய பாடல்களால் வெற்றியடைந்த திரைப்படங்கள் கணக்கற்றவை.

சிவனுடைய புரவலர்கள் என்று சொல்லவேண்டும் என்றால் கலாட்சேத்திராவின் திருமதி ருக்மணி அருண்டேல், அந்நாளைய திரைப்பட இயக்குநர்கள் கே.சுப்பிரமணியம், எஸ்.எஸ்.வாசன், கல்கி சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், இயல், இசை நாடக மன்றம், சங்கீத் நாடக அகாதமி போன்ற நிறுவனங்கள் சிவனை வெகுவாக ஆதரித்தன.மிகவும் எளிமையான ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்தவர் சிவன் அவர்கள்.  தன்னை அவர் என்றுமே எங்குமே முன் நிறுத்திக் கொண்டவர் இல்லை.

சுமார் 2500 பாடல்களை பல ராகங்களில் இயற்றியிருக்கிறார். பல நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் பாடல்கள் இயற்றியிருக்கிறார்.1934லிருந்து 1939 வரை அவர் கலாட்சேத்ராவில் இசைஆசிரியராகப் பணி புரிந்து இருக்கிறார். திரைப்படப் பாடல்களுக்குப் பாடல் எழுதவேண்டி கலாட்சேத்திராவில் ஆசிரியர் தொழிலைத் துறந்தார்.
தியாகைய்யருக்கு ஒரு ராமர் என்றால் நம் சிவனுக்கு மயிலை கபாலீஸ்வரர் நவரச கானடாவில் நானொரு விளையாட்டுப் பொம்மையா, மோகனத்தில் கபாலி, மத்யமாவதியில் கற்பகமே போன்ற பாடல்கள் இறவா வரம் பெற்றவை.

சேவா சதனம்,  அம்பிகாபதி,  நந்தனார்,  சகுந்தலை, சாவித்ரி, சிவகவி, தியாகபூமி போன்ற இறவா வரம் பெற்ற படங்களில் அவருடைய பாடல்கள் இடம் பெற்றன

அவர் இசையமைத்த படங்கள் சில:
சத்யசீலன்,  சிவகவி,  ஹரிதாஸ், ஆகிய படங்களை, ஜி ராமனாதனுடனும், வால்மீகி என்ற படத்திற்கு S V வெகட்ராமனுடனும் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்.
.
இவர் இயற்றிய பிரபல பாடல்களில் சில:

அசோக்குமார் - தியானமே எனது மனது நிறைந்தது சந்திர பிம்ப வதனம், மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய், பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் புண்ணியம் இன்றி விலங்குகள் போல், சத்துவ குணபோதன்...
திருநீலகண்டர்உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ, தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே...மறைவாய்ப் புதைத்த ஓடு, பவளமால் மாலையை
ஹரிதாஸ - என்னுடல்தனில் ஒரு மொய்த்தபோது, , மன்மத லீலையை வென்றார் உண்டோ
நந்தனார் - பிறவா வரம் தாரும்



இவரது பிரபல பக்திப் பாடல்கள் சில:
அம்பா நீ இரங்காயெனில் புகலேது, (அடாணா), நேவி நீயே துணை (கீரவாணிகாணக் கண் கோடி வேண்டும் (காம்போதி) கா வா வா கந்தா வா வா (வராளி), கண்ணன் மதுர இதழை (பீம்ப்ளாஸ்), கபாலி (மோகனம்), கற்பகமே (மத்யமாவதி), மா ரமணன்(ஹிந்தோளம்),  நான் ஒரு விளையாட்டு பொம்மையா (நவரச கானடா), பிறவா வரம் தாரும் (லதாங்கி) சாமஜ வர கமனா (மத்யமாவதி), ஸ்வாமிக்கி சரி எவரே (கேதாரகௌளை) தத்வமரிய தரமா (ரீதி கௌளை) போன்றவை.


எனது நினைவுக்கடல் என்னும் பெயரில் ஒரு சிறிய சுயசரிதையை எழுதியிருக்கிறார் சிவன். 1968ல் சிவன் அவர்கள் தினமணி கதிருக்காக தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தன்னுடைய இளமைப்பருவ நினைவுகளில் தொடங்கி 1921ல் தன்னுடைய சென்னை வருகை வரை பதிவு செய்திருப்பார் சிவன். துரதிருஷ்டவசமாக சிவனின் உடல்நிலை காரணம் கொண்டு இத்தொடர் 1968ல் நிறுத்தப்பட்டது  அக்டோபர் 10, 1973 அன்று தமிழ்த் தியாகய்யர்  காலமானார்.