Monday, 23 October 2017

பால்குடி டேஸ் 13  - தருமபுரி நினைவுகள்.

"விளக்கெண்ணையும் வேதியியலும்"

(சிறுவயதில் வயிறு சரியாக இருப்பதற்கும், குடலிலுள்ள புழுக்களை நீக்குவதற்கும் பேதிக்கு கொடுப்பார்கள். அதை சில இடங்களில் வேதிக்கு என்று சொல்வார்கள். ஆகவே இந்த தலைப்பு)

ஜனவரில பொங்கல் முடிஞ்ச  அடுத்த ஞாயிறும், ஜூலை மாசம் கடைசி ஞாயிறு வரும்போதும், சனிக்கிழமை நைட்டே வயித்தைக்  கலக்க ஆரம்பிக்கும்.. ஏன்னா அடுத்த நாள் காலைல  வெறும் வயித்துல விளக்கெண்ணெய் தருவாங்க, அதான். குறிப்பா ஏன் இந்த ரெண்டு மாசம்னு கேக்கறீங்களா? தீபாவளி பொங்கல்னு சும்மா இஷ்டத்துக்கு பலகாரம் தின்னுருப்போம். அதெல்லாம் சரி செய்ய வேண்டாமா? அதே மாதிரி ஆகஸ்ட் பொறந்தாலே வரிசையா கிருஷ்ண ஜெயந்தி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரின்னு சில பல பண்டிகைகைகள். தமிழனைப் பத்திதான் தெரியுமே! எண் ஜாண் உடம்புக்கு அவனுக்கு வயிறே பிரதானம்.

காலைல எழுந்து பல் விளக்கினவுடனே என்னோட அண்ணன் என்னை அம்மா கூப்பிடறாங்கன்னு சொல்லிட்டு நைசா திண்ணைக்கு போயிடுவான். எஸ்கேப்பாம். நமக்குத் தெரியும், இதுலேர்ந்து தப்பிக்க முடியாதுன்னு. பலியாடு மாதிரி தலையாட்டிக்கிட்டே சமையல் ரூமுக்கு போவேன். எதிர்த்து ஒண்ணும் பிரயோஜனம் இல்லேன்னு தெரியும். அதுனால சமரசமா, "எனக்கு கிண்டில ஊத்திக் கொடுத்துடுங்க, நான் ஒரே மடக்குல குடிச்சுடறேன்"னு சொல்லி வாங்கி ஒரே உறிஞ்சுதான். வெளில வரும்போது மூஞ்சியை ஒண்ணும்  நடக்காத மாதிரி வெச்சுக்கிட்டு வாசல் திண்ணைல இருக்கற அண்ணன்கிட்ட போய் "நமக்கு அடுத்த வாரம்தானாம், அக்காக்கு மட்டும்தான் இன்னிக்கு, உன்னை காப்பி குடிக்க கூப்பிட்டாங்க"ன்னு  சொல்லி உள்ளே அனுப்புவேன், ஏன்னா அக்காக்கு குடுத்தது அவனுக்கு தெரியும். அவன் ஒரு சந்தேகத்தோடயே உள்ளே போவான்.காப்பி அரை கப் இருக்கறத பாத்தவொடனேயே அவனுக்குத் தெரிஞ்சுடும் இது வெளக்கெண்ணைதான்னு, ஓடப் பாப்பான். வாசல்ல எங்க பாட்டி வழியை மறிச்சி நின்னுக்குவாங்க. வேற வழியில்லாம டம்ப்ளரை கைல வாங்கி அரை டம்ப்ளர் குடிக்கறதுக்குள்ள ஆயிரம் அலப்பறை செய்வான். வாந்திவர்றா மாதிரி ஆக்ட் எல்லாம் குடுப்பான். எங்க பாட்டி கிட்டயா நடக்கும்? ரொம்ப அலட்டினா முதுகுல சுரீர்னு விழும்னு தெரியும். அதுனால ஒரு வழியா குடிச்சிட்டு, வெளில வந்து என்னைத் தேடுவான், எதுக்கு, நொங்குன்னு ஒரு கொட்டு வைக்கத்தான். அவனுக்கு எலும்பு தேகம். கொட்டினான்னா கபாலமே பொளந்துக்கறா மாதிரி கொட்டுவான். நான் நைசா பக்கத்து வீட்டு திண்ணைல போய் ஒளிஞ்சுக்குவேன். 10 நிமிஷத்துல வீட்டுக்கு வந்துதான் ஆகணும். ஒரே ஓட்டம்தான் பாத்ரூமுக்கு. போயிட்டு வந்தா அவன் எரிச்சலோடு காத்துகிட்டிருப்பான். அப்ப அடிக்க முடியாது. ஒரே ஓட்டம்தான் உள்ளே.
No automatic alt text available.

இப்படி கௌண்டமணி கணக்கா 9 மணி வரை போயிவந்து கை காலெல்லாம் வெலவெலத்துப் போயிடும். சாப்பிட எதுவும் தர மாட்டாங்க, இன்னொரு காப்பிதான். அது தேவாம்ருதமா இருக்கும் அப்ப. ஒரு வழியா ஒரு 11 மணிக்கு எல்லாம் செட்டில் ஆயிடுச்சின்னு உறுதிப்படுத்திக்கிட்டு எங்கப்பா ஒரு பெரிய செம்பு அண்டால தண்ணி எடுத்து வெயில்ல வெப்பார். அது வெய்யில்லேயே சூடேறணும். அதுல தண்ணி கலக்காம குளிப்பாட்டுவாங்க. அப்பத்தான் ஜலதோஷம் புடிக்காதாம். எப்படா 1 மணி ஆகும்னு காத்திட்டிருப்போம். அப்பவும் குளிச்சப்பறமும் ஏதாவது போனோமான்னு செக் செஞ்சிட்டுதான் சாப்பாடு போடுவாங்க. அருமையான சீரக ரசம். பருப்பு துவையல் காரம் இல்லாம. மத்த சமயத்துல செய்யற பருப்புத்துவையல் எல்லாம் எந்த மூலைக்கு. பத்தியமா போடற இந்த துவையலை ஒரு வெட்டு வெட்டுவோம்.

சாயங்காலம் ரொம்ப பசின்னா ரெண்டு இட்லி, இல்ல ஒரு தோசை, அதே பருப்பு துவையல் தொட்டுக்கிட்டு. அப்பறம் டீ இல்லாட்டா காப்பி. (வழக்கமா எங்களுக்கு காப்பி டீ கிடையாது, கஞ்சி இல்லேன்னா ஓவல்டின் தான்) அன்னிக்கு விளையாட வெளில அனுப்ப மாட்டாங்க. வீட்டுலயே தாயக்கட்டை, கேரம் போர்ட் இது மாதிரிதான். எங்க அப்பா வெளில போயிட்டு வரப்ப, பாவம் பசங்கன்னு ஜாங்கிரி, இல்லேன்னா குளோப் ஜான் (அப்படிதான் அப்பெல்லாம் சொல்லுவோம்) வாங்கிட்டு வருவாரு. ஆஹா, தீபாவளி அன்னிக்கு தின்னற இனிப்பு கூட அவ்வளவு பிரமாதமா இருக்காது.

நைட் மோர்சாதம் போடுவாங்க, அதே பருப்பு துவையலோட. எங்க வீட்டுல தினமும் தயிர் கடைஞ்சு வெண்ணெய் எடுப்பாங்க, அந்த மோர் தனி சுவைதான். சீக்கிரம் புளிக்காது. நல்லா வயிறு நிறைய சாப்பிடுவோம். எங்களுக்காக அன்னிக்கு பெரியவர்களும் பத்தியமாதான் சாப்பிடுவாங்க. அப்ப தெரியல. இப்ப நெனைச்சா சின்ன சின்னதாவும் பெருசாவும் எவ்வளோ தியாகமெல்லாம் செஞ்சிருக்காங்கன்னு ஒரு ஃபீலிங் வர்றதை அடக்க முடியல.

இந்த வெளக்கெண்ணெய் மேட்டர் என் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ்க்கு தெரியாம பாத்துக்கணும். இல்லேன்னா மறுநாள் ஸ்கூல்ல மானத்த வாங்கிடுவாங்க.

நான் 6 ஆம் கிளாஸ் படிக்கற வரை இதே கதைதான். நான் 7 ஆவது போனவொடனே எங்க அண்ணன் மெட்ராஸ் வந்துட்டான் படிக்கறதுக்கு. அக்காவும் பெரியவங்களாயிட்டாங்க. அதுனால நிறுத்தியாச்சு. இப்பெல்லாம் டாக்டர்ங்க குழந்தைங்களுக்கு இதெல்லாம் தரக்கூடாதுன்னு சொல்றதை கேட்டு இதெல்லாம் செய்யறதில்ல. அதுனாலதான் பலவித வியாதிகள்.

ஓகே மீண்டும் சந்திப்போம்.


Saturday, 21 March 2015

தமிழ்த் திரையின் சிற்பிகள் 9:

டி எஸ் பாலைய்யா. நடிப்புக்கு ஒரு "பலே அய்யா".வில்லன் பாத்திரமா, நகைச்சுவையா, அல்லது உணர்ச்சிபூர்வமான குணச்சித்திர வேடமா? பாலைய்யாவை போட்டுக் கொள்வோம் என்று சொல்லுமளவுக்கு மிகவும் அனாயாசமாகவும் தனித்துவம் நிறைந்தும் செய்யக் கூடியவர். தனது குரலை சற்றே ஏற்றி இறக்கி, சிறு அதிர்வுகளைத் தந்து தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர்.

குரூர நோக்குடன் முகத்தில் புன்னகையை மலர விட்டவாறே பாட்டு வாத்தியாராக நடித்த மணமகள்,  தில்லானா மோகனாம்பாளில் "என்ன இன்னிக்கு ஆட்டம் ஜாஸ்தியாய் இருக்கே" என்று ரயிலின் ஆட்டத்தை சொல்வது போல் மோகனாவின் தாயாரை அடிக்கும் கிண்டல், "எனக்கு அங்கே ஒரு சோடாக் கடைக்கரனைத் தெரியும்" என்று பிடிவாதமாக சிவாஜியிடம் நானும் வருவேன் என்று பிடிக்கும் அடம்,  நகை விற்கும் சேட்டாக தூக்கு தூக்கியில் "அரே  பியாரி, நிம்மல் மேலே நம்கீ மஜா", பாகப் பிரிவினையில் குடும்பத்தை இரண்டாக எம் ஆர் ராதா பிரிப்பதை தடுக்க இயலாமல் வருந்தி கண்ணீர் சிந்துவது, போன்றவை பாலையாவின் சில மிக சிறந்த பாத்திரங்கள். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல், திருவிளையாடல் படத்தில் அகந்தை நிரம்பிய ஹேமநாத பாகவதராக நடித்து பாண்டிய நாட்டவரை சவாலுக்கு அழைப்பது அமைந்தது. இதில் ஒரு நாள் போதுமா என்ற திரு பாலமுரளியின் பாடலுக்கு மிகவும் தத்ரூபமாக ஒரு கைதேர்ந்த இசை வல்லுனரைப் போல நடித்தது இவரது தனிச் சிறப்பு.

சிறுவயதில் திருநெல்வேலியில் முகாமிட்டிருந்த சர்க்கஸ் கம்பெனியால் கவரப்பட்டு சர்க்கஸில் சேரும் ஆசையில் வீட்டை விட்டு ஓடி மானாமதுரை சென்றார். அங்கே கையிலிருக்கும் பணம் யாவும் செலவானதும் சிறு ஹோட்டலிலும், ஒரு இறைச்சிக் கடையிலும் வேலை பார்த்து, பின் திருநெல்வேலிக்கே திரும்பி வந்தார். அப்போது ஜெகன்னாத அய்யர் என்பவரின் நாடகக் குழு அங்கு  முகாமிட்டிருந்தது. அதில் பாலையா சேர்ந்தார், சில நாட்களிலேயே அந்த கம்பெனி மூடப்பட்டது. நாகலிங்க செட்டியார் என்பவர் பாலா மோகன சங்கீத சபா என்றொரு நாடகக் குழுவை ஆரம்பித்து அதில் ஜெகன்னாத அய்யர் குழுவிலிருந்த சிலரை சேர்த்துக் கொண்டார். அங்கு அவருக்கு குறைவான வேடங்களே கிடைத்தன. ஒரு முறை அவர்கள் ஷேக்ஸ்பியரின் CYMBELINE என்ற நாடகத்தை மேடையேற்றியபோது, அதில் பெசானியோ (PESANIO) வேடத்தில் நடித்த நடிகர், பாலையாவிடம் அந்த வேடத்தில் நடித்து குறைந்தது மூன்று முறையாவது கைத்தட்டல் வாங்க முடியுமா என்று சவால் விட்டதை ஏற்ற்றுக் கொண்டு அவ்வேடத்தில் நடித்தார். அவர் மேடையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அவருக்கு கைத்தட்டல்கள் கிடைத்தன. இதுவே அவருக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

அந்தக் கம்பெனியும் மூடப்பட்ட பின் பாலையா திரு எம் கே கந்தசாமி முதலியாரது (நடிகர் எம் கே ராதாவின் தந்தை) ராஜாம்பாள் நாடகக் குழுவில் இணைந்தார். கந்தசாமி முதலியார் எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் தனது கதை வசனத்தில், தனது மகன் எம் கே ராதா கதாநாயகனாக நடிக்கும் சதிலீலாவதி படத்தில் இவருக்கு வாய்ப்பளித்தார். இந்தப் படத்தில் மக்கள் திலகம் எம் ஜி ஆரும் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத் தக்கது.

இவரது நடிப்பால் கவரப்பட்ட எல்லிஸ் ஆர் டங்கன், தனது அனைத்துப் படங்களிலும் அவருக்கு வாய்ப்பளித்தார். அம்பிகாபதி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இவர் ஒரு சிறந்த வில்லனாக உருவெடுத்தார்.

நாடகத்தின் மீது உள்ள தீராக் காதலினால் சொந்தமாக ஸ்ரீ சாயி பால கான சங்கீத சபா என்ற குழுவை தொடங்கி அதில் பெருத்த நஷ்டம் அடைந்தார். பிறகு அந்தக் குழுவை மூடி விட்டார்.

இவருக்கு மறுபடியும் திரைப் பட வாய்ப்புகள் வந்தபோது இவர் ஒரு துறவி போன்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். வேலைக்காரி, ஒரு இரவு போன்ற படங்களில் இவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் மிகவும் பாராட்டப் பெற்றன. பின்னாளில் இயக்குனர் பீம்சிங் இவருக்கு தனது "பா" வரிசைப் படங்களில் வாய்ப்பளித்தார். இயக்குனர் ஸ்ரீதர், இவருள்ளே இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு ஆகிய படங்களில் வேடங்கள் தந்தார். இதில் காதலிக்க நேரமில்லையில் இவரும் நாகேஷும் தோன்றும் கதை சொல்லும் காட்சியில் இவரது முகபாவங்களும் வசனங்களும் இவருக்கே உரித்தானவை. பாலச்சந்தர் அவர்களின் பாமா விஜயத்தில் ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக வந்து இவர் பாடிய "வரவு எட்டணா, செலவு பத்தணா" பாடல் மிகவும் பிரபலம், வேறு எந்த குணச்சித்திர நடிகருக்காவது இவருக்கு அமைந்தாற்போல் பாடல்கள் அமைந்திருக்குமா என்பது சந்தேகமே.

எம் ஆர் ராதா இயக்கத்தில் "சுட்டான், சுட்டேன்" என்ற படத்தில் நடிக்க இருந்த சமயத்தில் நோய்வாய்பட்டு தனது 58ஆவது வயதில் காலமானார்.

இவருக்கு திரை உலகமோ, அல்லது தமிழக அரசாங்கமோ தகுந்த கௌரவத்தை அளிக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.

(COURTESY: MR MOHAN RAM'S 100 YEARS OF LAUGHTER)

Thursday, 19 March 2015

தமிழ்த் திரையுலக சிற்பிகள் 8.

ஜெமினி கணேசன். வாராயோ வெண்ணிலாவேயிலிருந்து ஆரம்பித்து, காலங்களில் அவள் வசந்தம், பாட்டு பாடவா என்று பாடி நமது உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகர். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் , ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்

திரையுலகுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பாகச் சில காலம் ஜெமினி கணேசன் ஆசிரியப் பணி ஆற்றி வந்தார். ஜெமினி நிறுவனத்தில் அவர் மேலாளராகச் சேர்ந்தார்!1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடம் தாங்கினார். ஆனால், பலரது கவனத்தையும் ஈர்த்தது  1952ஆம் ஆண்டின் வெளியான தாயுள்ளம். ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாகவும், எம்.வி.ராஜம்மா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தில் அவர் கவர்ச்சி வில்லன் வேடம் ஏற்றிருந்தார். (பின்னாளில் அவர் கதாநாயகனாக நடிக்கையில் மனோகர் வில்லன் கதாபாத்திரங்களில் நிலை பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான "பெண்". இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார். வைஜயந்தி மாலாவும் நடித்த இப்படத்தில், வீணை வித்வானாகவும், புதுமை இயக்குனராகப் புகழ் பெற்றவருமான எஸ்.பாலச்சந்தர் ஜெமினி கணேசனின் நண்பனாக வேடம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது 1953ஆம் ஆண்டின் "மனம்போல மாங்கல்யம்". இதில் அவர் முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின் போதுதான், இதில் தன்னுடன் நடித்த, பின்னாளில் நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற சாவித்திரியை அவர் மணந்து கொண்டார்.

காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெறத்துவங்கிய ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாகவும் அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புல்லரிக்க வைப்பதாக அமைந்த ஒன்று.

ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "கற்பகம்", "சித்தி", "பணமா பாசமா", "சின்னஞ்சிறு உலகம்" ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.

புதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், "மீண்ட சொர்க்கம்", "சுமை தாங்கி"  "அவளுக்கென்று ஓர் மனம்" போன்ற பல படங்களை இயக்கினார்.

கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்", "பூவா தலையா", "இரு கோடுகள்", "வெள்ளி விழா", "புன்னகை", "கண்ணா நலமா", "நான் அவனில்லை" எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. "நான் அவனில்லை" திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்.

தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஜெமினி தயங்கியவர் அல்லர். நடிகர் திலகம் என இறவாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களே இதற்கு சான்று. இவற்றில், ஜெமினியின் நடிப்பும் ஜொலித்தது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.

எம்.ஜி.ஆர் உடன் ஜெமினி கணேசன் "முகராசி" என்ற ஒரே படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார்.

தமக்குப் பின்னர் திரைக்கு வந்த ஜெய்சங்கர், ஏவி.எம்.ராஜன். முத்துராமன் ஆகியோருடனும் அவர் பல படங்களில் இணைந்து நடித்தார்.

சரோஜாதேவி முதன் முறையாக முழுநீளக் கதாநாயகியாக அறிமுகமானது, ஜெமினியை நாயகனாகக் கொண்ட "கல்யாணப்பரிசு". இதன் பின்னரும் இந்த ஜோடி, "ஆடிப்பெருக்கு", "கைராசி", "பனித்திரை" "பணமா பாசமா" போன்ற பல திரைப்படங்களில் வெற்றிக் கொடி நாட்டியது.
அஞ்சலிதேவி ஜெமினி கணேசனுடன் இணைந்த பல படங்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்த மாய மந்திர அடிப்படையிலானவை. "மணாளனே மங்கையின் பாக்கியம்", "கணவனே கண் கண்ட தெய்வம்" ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.



பின்னணிப் பாடகர்களில் மிகப் பெரும் பெயர் பெற்று விளங்கிய டி.எம்.சௌந்தரராஜன் ஜெமினி கணேசனுக்காகச் சில பாடல்கள் பாடியதுண்டு. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" படத்தின் "என்னருமைக் காதலிக்கு", "சதாரம்" படத்தின் "நினைந்து நினைந்து நெஞ்சம்" மற்றும் "ராமு'வில் "கண்ணன் வந்தான்" போன்று அவை புகழ் பெற்றதும் உண்டு. ஆயினும், அவரது திரைக்குரலாகவே அறியப்பட்டவர்கள் இருவர்: முதலாமவர், அவரது ஆரம்பகாலப் படங்களில் பின்னணி அளித்த ஏ. எம். ராஜா. இரண்டாமவர், பன்மொழி வித்தகரான பி. பி. ஸ்ரீநிவாஸ். இயல்பாகவே மென்மையான குரல் கொண்டிருந்த ஜெமினி கணேசனுக்கு இவர்கள் இருவரது குரலும் மிக அற்புதமாகப் பொருந்துவதானது. மனம்போல மாங்கல்யம் திரைப்படத்தில் "மாப்பிள்ளை டோய்" துவங்கிப் பல படங்களில் ஏ.எம்.ராஜா அவருக்குப் பின்னணி பாடினார். "கல்யாணப்பரிசு" திரைப்படத்தில்தான் அவர் முதன் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இதன் பிறகு, "ஆடிப்பெருக்கு" போன்ற சில படங்களில் அவருக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.

அறுபதுகளின் இறுதியில் வெளிவரத்துவங்கிய ஜெமினி கணேசனின் படங்களில், பி.பி.ஸ்ரீனிவாஸ் அவரது பாடற்குரலானார். சுமைதாங்கி போன்ற படங்களில் ஜெமினிக்காக அவர் பாடிய பாடல்கள் இறவா வரம் பெற்றவை.

1970ஆம் வருடங்களின் இறுதியில், "சாந்தி நிலையம்" போன்ற சில படங்களில் அப்போது பெயர் பெறத் துவங்கியிருந்த எஸ்.பி.பி என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜெமினிக்குப் பின்னணி பாடியுள்ளார்

ஸ்ரீதரின் "அவளுக்கென்று ஓர் மனம்" மற்றும் "சாந்தி நிலையம்" ஆகிய படங்கள் வெளியாகும் கால கட்டத்தில் ஒரு நாயகனாக ஜெமினிக்குச் சற்று இறங்கு முகம்தான். அவர் நாயகனாக நடித்த கடைசிப்படம் சுஜாதாவுடன் நடித்து 1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளிவந்த "லலிதா".

சில வருடங்களுக்குப் பிறகு குணசித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்கலானார். அவற்றில் மிகச் சிறப்பாக அமைந்த இரண்டு படங்களுமே கமல்ஹாசன் நாயகனாக நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சிரஞ்சீவியின் தந்தையாக அவர் நடித்த ருத்ரவீணா தமிழில் உன்னால் முடியும் தம்பி என மறுவாக்கம் செய்யப்பட்டபோது, அதில் கமல்ஹாசனின் பிடிவாதம் மிக்க தந்தையாக, கருநாடக இசைத் தூய்மையில் விடாப்பிடி கொண்டவராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மற்றொன்று அவரது கடைசிப் படமான அவ்வை சண்முகி.

சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு இயற்கை எய்தினார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்ட்டது.

இயல்பான நடிப்பினால் நம் மனத்தை  கவர்ந்த அவரது ஆத்மா சாந்தியடைய வாழ்த்துவோம். நன்றி, வணக்கம்!
(சில குறிப்புகள் wikipedia விலிருந்து எடுக்கப்பட்டவை)
தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள்: 7
டி ஆர் பாப்பா. இவரது இயற்பெயர் சிவசங்கரன். சிறுவயதிலிருந்தே வயலினில் சிறந்த பயிற்சி பெற்றவர். தனது ஆரம்ப நாட்களில் மாடர்ன் தியெடர்ஸிலும், ஜூபிடர் பிக்சர்ஸிலும் வயலின் வாசித்து வந்தார். இவரும் திரு டி கே ராமமூர்த்தியும்தான் அந்தக் காலத்தில் அதிக ஊதியம் பெற்ற வயலின் கலைஞர்களாக இருந்தார்கள்.

1946 லிருந்து ஆல் இந்தியா ரேடியோவின் நிலைய வித்வானாக பணியாற்றினார். அக்காலத்தில் திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுடன் நிறைய பக்திப் பாடல்களுக்கு இசையமைத்தார். அவற்றில் ஒன்று "சின்னஞ்சிறு பெண்போலே, சித்தாடை உடை உடுத்தி" என்ற பிரபலமான பாடல்.
1952 ல் முதல் முதலில் "ஆத்மசாந்தி" என்ற மலையாளப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை சிட்டாடல் நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குனர் ஜோசப் தளியத் இவருக்கு வழங்கினார். பிறகு, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான மல்லிகா, விஜயபுரி வீரன், விளக்கேற்றியவள், இரவும் பகலும், காதல் படுத்தும் பாடு ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.
டி ஆர் பாப்பாவும் டி ஆர் ராமண்ணாவும் வகுப்புத் தோழர்கள். ராமண்ணா அவர்கள் அருணகிரிநாதரை இயக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென்று திரு ஜி ராமநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, அவர் திரு டி ஆர் பாப்பாவை மீதியுள்ள பாடல்களுக்கு இசையமைக்கக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து 70 வரையில் இவர்களது கூட்டணியில் பல படங்கள் வந்தன.
தமிழ் இசை சங்கம் இவருக்கு இசைப் பேரறிஞர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.
இவரது இசையில் வெளி வந்த சில பிரபல பாடல்களும் அவற்றின் படங்களும்.
எண்ண எண்ண இன்பமே வாழ்வினில் எந்நாளும் - அன்பு;
சமரசம் உலாவும் இடமே - ரம்பையின் காதல்
பகவானே மௌனம் ஏனோ - ரம்பையின் காதல்
வருவேன் நானுனது மாளிகையின் வாசலுக்கே - மல்லிகா
நீலவண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் - மல்லிகா
சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம் - தாய் மகளுக்கு கட்டிய தாலி
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே - குறவஞ்சி
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் - நல்லவன் வாழ்வான்
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே - எதையும் தாங்கும் இதயம்
முத்தைத்தரு பத்தித்திரு - அருணகிரிநாதர்
ஒண்ணுமே புரியலே உலகத்திலே - குமாரராஜா
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
ஆசை பொங்கும் அழகு ரூபம் - ஆசை
சூடிக் கொடுத்தவள் நான் தோழி - டீச்சரம்மா
தலைவாரிப் பூச்சூடி உன்னை - ரங்கோன் ராதா
இறைவன் என்றொரு கவிஞன் - ஏன்
உள்ளத்திலே உரம் வேண்டுமடா - விஜயபுரி வீரன்
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம் - அவசரக் கல்யாணம்.
இவர்கள் தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. இவர்களது இசையில் வந்த பாடல்களை கேட்கும்போது, இவர்களையும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.

Saturday, 24 January 2015

இன்றைய இராகம் ஹரிகாம்போஜி:
ஹரிகாம்போதி அல்லது ஹரிகாம்போஜி கர் நாடக இசை முறையில் 28வது மேளகர்த்தா அல்லது பிறப்பு (ஜனக) இராகமாகும். இது பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 4 வது மேளம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண (எழுநிறைவற்ற) மேள பத்ததியில் இவ்விராகத்திற்கு அரிக்கேதாரகௌள என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் இதற்கு கமாஜ் என்று பெயர்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

பிரத்தியாகத கமகம் இவ்விராகத்திற்கு அழகைக் கொடுக்கும்.
இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் வாசஸ்பதி ஆகும்.
பண்டைத்தமிழிசையில் சுத்த மேளம் ஹரிகாம்போஜி இராகமே. இது "செம்பாலைப் பண்" என்றழைக்கப்பட்டது.
இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரி, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக நடபைரவி, தீரசங்கராபரணம், கரகரப்பிரியா, ஹனுமத்தோடி, மேசகல்யாணி ஆகிய மேளங்களைக் கொடுக்கும்.

பாடுவதற்கேற்ற நேரம்: இரவின் 2 ஆவது ஜாமம். தும்ரியாக இருந்தால் முதல் ஜாமம்.

பாடுவதற்கேற்ற மனநிலைகள்: இளவயது சந்தோஷ நினைவுகள், நம்பிக்கை மற்றும் ஆசை தரும் நிறைவு.

ஹரிகாம்போதியின் ஜன்ய இராகங்கள்:

பகுதாரி, ஈசமனோகரி. கமாஸ். துவிஜாவந்தி, நாராயணகௌளை, சஹானா, சாயாதரங்கிணி, காம்போதி, காப்பிநாராயணி, நவரசகன்னட, செஞ்சுருட்டி, கேதாரகௌளை, யதுகுலகாம்போதி, நாட்டக்குறிஞ்சி, ரவிச்சந்திரிகா, சரஸ்வதிமனோகரி, சுத்ததரங்கிணி, சாமா, சுருட்டி, நாகஸ்வராவளி, குந்தளவராளி, மோகனம், உமாபரணம், ஹிந்துகன்னட, கோகிலத்வனி, கானவாரிதி, மாளவி,, கதாதரங்கிணி, பலஹம்ச, சாயாநாட்டை, சுபூஷணி, விவர்த்தனி, பிரதாபவராளி, ஹிந்துநாராயணி, உழைமாருதம், அம்போஜினி, ஹிந்தோளகாமினி, சாவித்திரி (இராகம்), வீணாவாதினி, ராகவினோதினி, தைவதச்சந்திரிகா, ஆன்தாளி போன்றவை.

இந்த இராகத்தில் மெல்லிசை மன்னர் இசையமைத்த 0ரு பாடலை இன்று காண்போம்.

பாடல் "ஒரே பாடல் உன்னை அழைக்கும்" - எங்கிருந்தோ வந்தாள் என்ற படத்திலிருந்து. பாடியவர் -டி எம் சௌந்திரராஜன், இயற்றியவர் - கவியரசர்.

இந்தப் பாடல் தன காதலியின் திருமண வரவேற்பில் காதலன் தங்களது கடந்த கால காதல் வாழ்வை நினைத்து பாடும் பாடல்.  . இரக்க பாவம் நிறைந்த பாடல்.

டி எம் சௌந்தரராஜனின் நெஞ்சை உருக்கும் ஹம்மிங்குடன் துவங்கும் இந்தப் பாடல் பல்லவி முடிந்ததும் சரணத்திற்கு முன் வயலின்களின் அணிவகுப்பு, அத்துடன் கிடார் strings, மீண்டும் அத்துடன் சேரும் வயலின், இவற்றிற்கு லீட் தருவது போல் குழலின் இசை என ஒரு உருக்கமான இசைக்கோர்வையுடன் பயணிக்கிறது இடையிசை. சரணங்களுக்கு ஊடே மெல்லிய ஷெனாய் இசைக்கப்பட்டிருப்பது பாடலின் சூழ்நிலைக்கு மேலும் வலுவூட்டுகிறது. சரணங்களின் முடிவில் பாடகர் கடைசி வரியின் முடிவில் இழுத்து நிறுத்துவது, அத்துடன் ஷெனாய் இழைவது என்று ஒரு உருக்கமான இசை விருந்தை அளித்திருக்கிறார் மன்னர்.

பாசமலர் என்ற படத்தில் வரும் " மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்"  என்ற பாடல் இதன் சாயலில் அமைக்கப் பட்டுள்ளது. புதிய பறவை படத்தில் வரும் "உன்னை ஒன்று கேட்பேன்" - சுமதி என் சுந்தரி படத்தில் வரும் "பொட்டு வைத்த முகமோ", தங்கப் பதக்கம் படத்தில் வரும் "சுமைதாங்கி சாய்ந்தால்",  பெண்ணை நம்புங்கள் படத்தில் வரும் "நீ நினைத்த நேரம் எல்லாம் வர வேண்டுமோ"; பாபு படத்தில் "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே", குழந்தையும் தெய்வமும் படத்தில் "அன்புள்ள மான்விழியே"; வறுமையின் நிறம் படத்தில் வரும் "சிப்பி இருக்குது  முத்தும் இருக்குது"; அவள் ஒரு தொடர்கதை படத்தில் "கடவுள் அமைத்து வைத்த மேடை" ஆகிய பாடல்கள் எம் எஸ் வி இசையில் அமைந்துள்ளன.

இந்த இராகத்தில் அமைந்த மேலும் சில பாடல்கள்:

ஒருநாள் ஒரு பொழுதாகிலும் - திருநீலகண்டர் - பாபநாசம் சிவன்
சிதம்பர நாதா திருவருள் தா தா - திருநீலகண்டர் - பாபநாசம் சிவன்
ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு - ஏணிப்படிகள் - கே வி எம்
என்னவென்று சொல்வதம்மா -ராஜகுமாரன் - இளையராஜா
கண்ணுபடப் போகுதைய்யா - சின்னக் கவுண்டர் - இளையராஜா
நானே நானா யாரோதானா - அழகே உன்னை ஆராதிக்கிறேன் - இளையராஜா
ஒருநாள் ஒரு கனவு - கண்ணுக்குள் நிலவு - இளையராஜா
பட்டுவண்ண சேலைக்காரி - எங்கேயோ கேட்ட குரல் - இளையராஜா
பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான் - வருஷம் 16 - இளையராஜா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - இதயம் - இளையராஜா
சாந்துப் பொட்டு, சந்தனப் பொட்டு - தேவர்  மகன் - இளையராஜா
கண்ணுக்கு மை அழகு - புதிய முகம் - ஏ ஆர் ரஹ்மான்
உயிரே உயிரே (பல்லவி மட்டும்) - பாம்பே - ஏ ஆர் ரஹ்மான்

நன்றி! மீண்டும் ஒரு இராகத்துடன் வேறொரு நாள் சந்திப்போம். வணக்கம்.
ஜெய்ஹிந்த்!

Wednesday, 21 January 2015

இன்றைய இராகம் நடபைரவி:
நடபைரவி கர்நாடக இசையின் 20 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 வது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இது வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 வது இராகம். இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது அசாவேரி  இராகம்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகின்றன.

இதன் க, ம, ப, த, நி முறையே கிரக பேதத்தின் வழியாக சங்கராபரணம் (29), கரகரப்பிரியா (22), தோடி (08), மேசகல்யாணி (65), ஹரிகாம்போஜி (28) ஆகிய மேளங்களைக் கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சண்முகப்பிரியா (56) ஆகும்.
ஐரோப்பிய இசையிலும், கிரேக்க இசையிலும் இதற்கு ஈடான இசை அமைப்பு இருப்பதாக தெரிகிறது.

பாடுவதற்கேற்ற நேரம்: காலை 6 மணி முதல் 9 மணி வரை.

பாடுவதற்கேற்ற மன நிலைகள்: பக்தி, சிருங்காரம், கருணை, இரக்கம் போன்றவை.

நடபைரவியின் ஜன்ய இராகங்கள்:

பைரவி, ஆனந்தபைரவி, ஜயந்தஸ்ரீ, சாரமதி, பூர்ணஷட்ஜம், இந்தோளம், மாஞ்சி, மார்க்கஹிந்தோளம், அமிர்தவாஹினி, சுத்ததெசி, ஜிங்களா, ஹிந்தோளவசந்தம், கோபிகாவசந்தம், கமலாதரங்கிணி, திவ்யகாந்தாரி, புவனகாந்தாரி, சுத்தசாளவி, நவரசச்சந்திரிகா, கோமேதகப்பிரியா, பாகீரதி, ரதிபதிப்பிரியா போன்றவை.

இன்று நாம் இந்த இராகத்தில் மெல்லிசை மன்னர்களின் இசையில் உருவான "நினைக்கத் தெரிந்த மனமே" என்ற, ஆனந்த ஜோதி படத்தில் இடம் பெற்ற  பாடலைப் பற்றிப் பார்ப்போம். பாடலைப் பாடியவர் பி சுசீலா, பாடலை இயற்றியவர்., கவிஞர் கண்ணதாசன்.

அக்கார்டியன், வயலின் கலந்த ஒரு முன்னிசையுடன் பல்லவி துவங்குகிறது. "நினைக்கத் தெரிந்த மனமே ...........உயிரே விலகத் தெரியாதா" என்ற பல்லவி வரை பாங்கோஸின் மிதமான நடை தாள வாத்தியமாக உடன் வருகிறது. ஆர்ப்பாட்டம் மிகுந்த ஒரு ஆப்பிரிக்க வாத்தியத்தை ஒரு சோகமான சூழ்நிலைக்கு பயன் படுத்தியுள்ளனர் மன்னர்கள். நிறைய சோகப் பாடல்களில் இந்த வாத்தியத்தை பயன்படுத்தியிருக்கின்றனர்.

சரணத்திற்கு முன்  வரும் ஷெனாய், வயலின் கலந்த இடையிசை நாயகியின் சோகமான மனநிலையை விளக்குவதாக இருக்கின்றது. சரணங்களுக்கு ஊடேயும் சிறு சிறு ஷெனாய் இசை வருவது பாடலுக்கு மெருகூட்டுகிறது. சரணங்களுக்கு, தப்லாவை உபயோகப் படுத்தியிருக்கின்றனர் மன்னர்கள். பாடல் வரிகள் காதலியின், காதலிக்கும்போது இருந்த மனநிலையையும், பிரிவுக்குப் பின் உள்ள மன நிலையையும் நன்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.  பாடலைக் கேட்போர் நெஞ்சில் இரக்கத்தை உருவாக்கும் இசையும், பாடல் வரிகளும் அமைந்துள்ளன.

இந்த இராகத்தில் அமைந்துள்ள வேறு சில பாடல்கள்:

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே - களத்தூர் கண்ணம்மா -
ஆர் சுதர்சன்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே  - புதையல் - எம் எஸ் வி -டீ கே ஆர்
ராகங்கள் 16 உருவான வரலாறு - தில்லு முல்லு - எம் எஸ் வி
ராஜாவின் பார்வை - அன்பே வா -  எம் எஸ் வி
நான் பார்த்ததிலே - அன்பே வா -  எம் எஸ் வி
கண்ணை நம்பாதே - நினைத்ததை முடிப்பவன் - எம் எஸ் வி
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து - நினைத்ததை முடிப்பவன் -
எம் எஸ் வி
நாளை நமதே, நாளை நமதே - நாளை நமதே - எம் எஸ் வி
ஆசைய காத்துல தூது விட்டு - ஜானி - இளையராஜா
ஆத்து மேட்டுல ஒருபாட்டு கேக்குது - கிராமத்து அத்தியாயம் - இளையராஜா
அந்தி மழை மேகம் - நாயகன் - இளையராஜா
என் இனிய பொன் நிலாவே - மூடுபனி - இளையராஜா
ஹேய் ஐ லவ் யூ, ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன் - இளையராஜா
இளம்பனித் துளி விழும் நேரம் - ஆராதனை - இளையராஜா
மடை திறந்து பாயும் நதியலை நான் - நிழல்கள் - இளையராஜா
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர - மௌனராகம் - இளையராஜா
ஓ,   பட்டரஃபிளை பட்டரஃபிளை -  மீரா - இளையராஜா

இந்த இராகத்தில் அமைந்த சில ஹிந்திப் பாடல்கள்:

ஏ மேரே ஜிந்தகி ராத் ஜும்லே - லதா மங்கேஷ்கர் - டாக்சி டிரைவர் - எஸ் டி பர்மன்
ராத் நே க்யா க்யா க்வாப் தேகாயே - தலத் மெஹ்மூத் -  ஏக் காவோன் கி கஹானி - சலீல் சவுதுரி
அகர்  முஜ்ஸே முஹப்பத் ஹை - லதா மங்கேஷ்கர் - ஆப் கி பர்சாயியான் - மதன் மோகன் 
டூட்டே ஹுவே க்வாபோனே, ஹம்கோ யே சிகாயா ஹை - ரஃபி -
மதுமதி - சலீல் சவுதுரி

மேலே குறிப்பிட்ட பாடல்கள் யாவுமே கேட்க கேட்கத் திகட்டாதவை. ரசியுங்கள், அனுபவியுங்கள். இன்னொரு நாள் வேறொரு இராகத்துடன் சந்திப்போம்.
நன்றி! வணக்கம்.
ஜெய்ஹிந்த்!







  

Tuesday, 20 January 2015

தமிழ்த் திரையுலகின் (சிந்தனை) சிற்பிகள்: 7
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.

வாலி கவிஞர் கண்ணதாசனை தனது மானசீகக் குருவாகக் கொண்டிருந்தவர். கண்ணதாசனுக்கு இணையாக எழுதும் ஆற்றல் படைத்தவர். இவரது பல பாடல்கள் கண்ணதாசன் எழுதியவை என்று பெரும்பாலோரால் கருதப்பட்டன. அதில் அவருக்கு மகிழ்ச்சியே தவிர, சிறிதளவும் வருத்தம் இல்லை.

சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார்.

 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.

மூச்சுத்திணறல் காரணமாக 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார். இவரது மறைவு தமிழ்த் திரையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.